நில விருத்தம் --- எண்சீர் விருத்தம்

நில விருத்தம் --- எண்சீர் விருத்தம்

தமிழ் வணக்கம் :-

செந்தமிழை வணங்கிவிட்டு செப்பு கின்றேன்
------ சேதிகளைக் கவியரங்கில் சபையின் முன்னே .
நந்தமிழாம் நற்றாயாம் உன்னை நாளும்
------ நன்றியுடன் தொழுகின்றேன் அருள்வாய் என்றும் .
பைந்தமிழர் கூடிநிற்க ஒலிக்கும் பாடல்
------- பசுமையான கீதமாக கேட்கும் பாரீர் .
எந்நாளும் காத்திடுவாள் தமிழின் அன்னை .
------- ஏற்பீரே நிலவிருத்தம் பாடும் என்னை !!!

அவையடக்கம் :-

சிங்கப்பூர் நிலவிருத்தம் பாடி வைத்தார்
-------- சிந்தைக்கே ஒளிதனையும் ஏற்றி வைத்தார் .
எங்கெங்கு பார்த்தாலும் அழகின் மேன்மை
------- எத்திக்கும் சூழ்ந்துள்ள இயற்கை யன்னை .
பங்கிடவே ஆசைகொண்டு கிருஷ்ண மூர்த்தி
-------- பனுவலினை இயற்றிட்டார் நிலத்தின் மேலே .
மங்காத சிற்பமாக வெளிச்சம் தந்தே
-------- மனத்திற்கோ இதமளிக்கும் ஊரைப் பாரீர் !!!

நில விருத்தம் -- ஆய்வு

சிறு புள்ளி :-

சிறுபுள்ளி வடிவினிலே இருக்கும் காணீர்
------- சிங்கப்பூர் எங்களூராம் உலகில் காணீர் .
மறுவாழ்வு நோக்கியுமே எங்கள் வாழ்க்கை
-------- மனிதத்தின் நம்பிக்கை தன்னை நோக்கும் .
விறுவிறுப்பாய் ஓடுகின்ற கோளம் தன்னில்
-------- விந்தையாக புள்ளியாக நிற்கும் ஊராம் .
மறுபிறப்பை எடுக்கின்ற வண்ணத் தோடு
-------- மனிதநேயம் மிக்கதொரு நிலமே பாரீர் !!!

எல்லை :-

எல்லையினை வகுத்திட்டார் ஏற்போம் நாமே
-------- எழிலுடைய பெண்மகளைப் போன்ற ஊராம் .
வில்லைப்போல் வளைந்திருக்கும் எல்லை பாரீர்
-------- வியனிதுவாம் எங்களூரின் உறவைக் காணீர் .
கல்லோடு கற்சிலைகள் சேர்ந்து நிற்கும்
-------- கவின்மிக்க அழகுடைய எல்லை தானே .
சொல்போதா எடுத்தியம்ப எல்லை தன்னை .
------- சொக்கவைக்கும் சிறப்புடைய செழுமை பாரீர் .

கடல்வழி :-

கடல்வழியாய் செல்லுதற்கு மார்க்கம் உண்டு .
------- கண்டிடலாம் வங்காள விரிகு டாவை .
விடலைபோலே தீவுகளின் கூட்டம் தன்னில்
------- விளையாடும் நம்முள்ளம் குழந்தை போலே .
மடல்போலே மறைத்துவைக்க முடிவ தில்லை .
------- மலரவைக்கும் சிங்கப்பூர் அழகாய் நின்றே .
திடல்களுமே கரைதெரியும் திட்டு மங்கே .
------- திக்கெட்டும் புகழ்பரப்பி நிலத்தில் நிற்கும் !!

நிலவிரிவாக்க எண்ணம் :-

இயற்கையிலே சிங்கப்பூர் தீவு தானே .
------- இந்தியப்பெ ருங்கடலும் விரிவும் தானே .
மயக்கமின்றி மாலையொன்று வெட்டி னாலே
------- மாபெரிய நகரமாக மாறி நிற்கும் .
செயற்கையில்லை இந்நிலத்தில் எல்லாம் நன்றாம் .
------- செழுமைமிக்க மாற்றத்தைக் காண்போம் நாமே .
தயக்கமின்றிப் போராடும் மக்கள் கூட்டம்
------- தரணிதனை ஆள்கின்ற எண்ணம் திண்ணம் !!!

சதுப்பு நிலம் :-

சதுப்புநிலம் உண்டிங்கே அழகாய் மண்ணுள்
------- சாற்றுகின்ற வளமையினை நேரில் காண்போம் .
வெதுவெதுப்பாய் புவிதனையும் மாற்று கின்ற
------- வெந்தழலும் செய்கின்ற நிலத்தின் போக்கே .
புதுமைகளைப் படைத்திடுவாள் இயற்கை யன்னை .
------- புத்துணர்ச்சித் தந்திடுவாள் சகத்தை ஆள
முதுமையுமே வாராது இங்கே வாழ்ந்தால்
-------- முற்றிலுமே பசுமைதானே ஊரில் காண்பீர் !!!

தென்னாற்றுப் படகு குழாம் :-

தென்னாற்றுப் திட்டோரம் படகு சேவை .
------ தென்பகுதி சதுப்புநிலம் எங்கும் சூழ
அன்புடனே தென்றலுமே ஆங்கே வீச
------ அருகருகே வீடுகளும் நிலமாய் மாற
சின்னதொரு திருநகரம் பசுமை பொங்க
------- சிங்கப்பூர் தென்படகு குழாமும் சேர
இன்பமொன்றே கரைதனிலே காத்தி ருக்க
------- இல்லறமும் நல்லறமாய் மாறு மிங்கே !!!

ஒரு வெள்ளி சம்பளம் :-

ஒருவெள்ளி சம்பளமும் தருவார் உண்டு .
------ ஒற்றுமையைப் போதித்து நிற்பார் உண்டு .
அருமையான நகரமாக சொல்வார் உண்டு .
------- அயல்நாட்டு வணிகமுமே செய்வார் உண்டு .
எருவாக நிலத்தையுமே பார்ப்பார் உண்டு .
------- ஏற்றமிகு வாழ்வினையும் வாழ்வார் உண்டு .
உருவாக்கும் சிங்கப்பூர் உண்மை உண்டு .
------- உதவுகின்ற மனிதநேய மக்கள் உண்டு .

மெரீனா வளைகுடா :-

நூறாண்டு திட்டங்கள் பலவும் தீட்டி
------- நுணுக்கமாக அமைந்திட்ட நகரம் பாரீர் .
ஆறாண்ட காலத்தில் இருந்தோம் முன்னே .
------- ஆறுகளும் அழகாக பாய்ந்த தன்றோ !
சேறாக சேர்ந்திட்ட சதுப்பு மண்ணும்
------- செழுமையுடன் வளமாக்கி விட்ட தன்றோ !
மாறாத உழைப்பாளர் நிறைந்த நாடு .
------- மங்காத விளைகுடாவும் மெரீனா தானே !!!

நிலம் விரிவாக்கம் - முதல் திட்டம் :-

திட்டங்கள் நிறைவேற வேண்டும் வேண்டும் .
------- தித்திக்கும் செந்தமிழும் நிலத்தில் வேண்டும் .
சட்டங்கள் நிறைவேற வேண்டும் வேண்டும்
-------- சமதர்மம் நிலைபெறவே வேண்டும் வேண்டும் .
பட்டினமும் பார்போற்ற நகரில் வேண்டும்
------- பாசத்தால் பந்தங்கள் இணைதல் வேண்டும் .
வட்டமாக நிலப்பரப்பும் அமைதல் வேண்டும் .
------- வளம்நிறைந்த வனப்பரப்பும் நாட்டில் வேண்டும் !

பிற நாட்டிலிருந்து மண் :-

பதமாக நிலமட்டம் இருப்ப தாலே
------- பண்பாடு செழிப்புடனே வளர்வ தாலே
உதவாத மணல்வெளியும் இங்கே இல்லை .
------- உருவாக்க பிறநாட்டு எல்லை யில்லை .
இதமாக கடலினையும் நிலமாய் மாற்றி
-------- இன்பத்தில் திளைத்திடவே வாழ்வா ரிங்கே !
அதனாலே சிறந்ததுவே ஊராம் இஃதே
------- அழகான சிங்கப்பூர் பெயரைக் கொண்டே !!!

முடிவு :-

நிலவிருத்தம் பாடிடவே வாய்ப்பு தந்த
-------நிலையான சபையோர்க்கு நன்றி நன்றி !
பலவிருத்தம் பாடியுள்ளேன் இருந்து மின்றே
------- பந்தங்கள் புடைசூழ பாடி நின்றேன் !
சலசலத்தே ஓடியதே என்றன் பாடல்
-------- சாதிக்கும் சிங்கப்பூர் விருத்தம் தன்னில் .
உலராத நாவாலே நன்றி சொல்ல
------- உண்மையினை உலகறியும் நன்றி ! நன்றி !!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன் , திருச்சி . தமிழ்நாடு , இந்தியா

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Oct-17, 4:31 pm)
பார்வை : 92

மேலே