தீபாவளி – விடுதலையின் ஒளிநாள்

ஒவ்வொரு தீபாவளிக்கும் தமிழ்நாட்டில் கட்டாயமாக ஒரு சடங்கு நடக்கும். யாராவது கட்டாயமாக தீபாவளி ஓர் ஆரிய சூழ்ச்சி என்றும், நரகாசுரன் ஒரு திராவிடன் என்றும், எனவே திராவிடர்களாகிய தமிழர்கள் அதைக் கொண்டாடக்கூடாது என்றும் ஒரு பிரசாரத்தை நடத்துவார்கள். இது கடந்த ஒரு நூற்றாண்டாகவே நடத்தப்பட்டுவரும் பிரசாரம். எனவே ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், அவர்கள் முதலமைச்சர்களாகவே இருந்தாலும், இங்கிதம் கருதிக்கூட தீபாவளி வாழ்த்துகள் சொல்லமாட்டார்கள்.

இவர்களின் கோட்பாட்டின்படி நரகாசுரன் ஒரு திராவிடன். அவனைக் கொன்ற நாளை திராவிட இனத்தவர்கள் கொண்டாடக்கூடாது. மேலும் தீபாவளி புராண நிகழ்வைக் கொண்டாடும் நாள். விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பூமியைத் தூக்கியபோது அந்தச் சேர்க்கையால் உருவானவன் நரகாசுரன். எனவே இது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயம் எப்படித் தமிழனுடையதாக இருக்கமுடியும்? எனவே இது நிச்சயமாக ஆரியர் கொண்டுவந்து புகுத்தியதுதான். (மஞ்சள் துண்டைத் தவிர வேறு எல்லாமே ஆரியர்கள் புகுத்திய மூடநம்பிக்கைதான். மஞ்சள் துண்டு மட்டும் திராவிட பகுத்தறிவின் வெளிப்பாடு.)

இன்றைக்கு மரபணுவியலும் அகழ்வாராய்ச்சியும் ஆரிய-திராவிட இனக்கோட்பாடுகளை வரலாற்றின் குப்பைத் தொட்டிகளில் போட்டுவிட்டன. ஆனால் அதற்கும் முன்னால் விவேகானந்தரும் அம்பேத்கரும் இந்த ஆரிய இனவாதக் கோட்பாடு ஆதாரமற்றது எனத் தெளிவாகச் சொல்லிவந்துள்ளனர். எனவே, இந்த ஆரிய-திராவிட இனவாத அடிப்படையில் தீபாவளி குறித்த புராணக் கதையை அணுகுவது அபத்தமானது. பகுத்தறிவுகொண்ட எவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனியக் கதையாடல்களை வைத்து நம் புராணங்களை அறிந்துகொள்ள முற்படமாட்டார்கள்.

மாறாக, புராணங்கள் என்றால் என்ன? அவை ஆழமான அக-அறிதலையும் புற-யதார்த்தத்தையும் இணைக்கும் அகக் கருவிகள். ஒரு புராணம் ஒரு சமுதாயத்தில் ஏற்கப்பட, அது பல தளங்களில் பொருள் கொண்டதாக இருக்கவேண்டும். நவீன உலகத்திலும் புராணங்கள் மிகவும் தேவைப்படுகின்றன. புராணங்களைச் சரியான முறையில் புரிந்துகொள்வது வாழ்க்கையைச் செழுமைப்படுத்தும். மாற்றங்கள் நிறைந்த உலகம் முன்வைக்கும் கேள்விகளுக்குச் சில மாற்றமற்ற அழியாத மதிப்பீட்டு பதில்களை நாம் புராணங்களிலிருந்து பெறமுடியும். அத்தகைய தகவமைப்பைப் பெற இயலாத புராணக்கதைகள் தன்னாலேயே வழக்கொழிந்து விடுகின்றன. மாறாக, ஒரு சமுதாயத்தில் அதன் பண்பாட்டில் நன்றாக வேரூன்றிய புராணங்கள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எறியப்பட்டால் அதன் விளைவுகள் சமுதாயத்தை ஆழமாகப் பாதிக்கும். கார்ல் உங் போன்ற உளவியலாளர்கள், புராணங்களை இழந்ததால் மேற்கத்திய சமுதாயத்தின் கூட்டு மனத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டியிருக்கிறார்கள்.

தீபாவளி குறித்த நரகாசுரன் புராணக்கதையையே எடுத்துக் கொள்வோம். பூமியைக் காப்பாற்ற விஷ்ணு வராக அவதாரம் எடுக்கிறார். அதனால் ஏற்படும் தொடர்பினால் ஓர் அரக்கன் பிறக்கிறான். சிறிது சிந்தித்தால் இது ஒரு பொதுவான விதி என்பது தெரியும். சமூகப் பிரச்னைகளை மாற்ற, உலகை நன்றாக்க, தனது அறிவையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்து சிந்தனையாளர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கலாம். ஆனால் அதில் இருக்கும் அதிகாரப் பசி இறுதியில் மற்றொரு அரக்கப் பிரச்னையாக மாறிவிடும்.

அடுத்ததாக அந்த அதிகார அரக்கன் என்ன செய்கிறான்? பெண்களைச் சிறை வைக்கிறான். பூமியின் மைந்தன் அவன். ஆனால் அவனோ அதிகார ஆண்மையின் உருவமாகப் பெண்மையைச் சிறை வைக்கிறான். இறுதியில் தனது தாயான பூமாதேவியின் கரங்களில் இறக்கிறான்.

இதுவும் நாம் காணும் விஷயம்தான். கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளிலும், கடந்த முன்னூறு ஆண்டுகளாக காலனியம் மூலமாக உலகம் முழுவதுமும் பரப்பப்பட்ட ஆபிரகாமிய இறையியல், பெண்மை சார்ந்த மதிப்பீடுகளைச் சிறைவைத்தன. இயற்கை வழிபாடுகளை, தாய்த் தெய்வ வழிபாட்டை அழித்தன. ஆசார்ய மஹாபிரக்யாவும் அப்துல் கலாமும் சொல்கிறார்கள்:

மனித உருவாகிய கடவுளா? ஆம்; மானுட இயல்புகள் மற்றும் உணர்ச்சிகளின் பெருமைகளும் சிறுமைகளும் சேர்ந்த கலவையான மனிதக் கடவுள். இந்த மனிதக்கடவுளுக்கு அன்பு காட்டத் தெரியும். அதே நேரம் வெறுப்பு, தீர்ப்பு, கண்டனம், தேவை, விருப்பம் போன்றவையும் உண்டு. இந்த வகையில் நாகரிகங்கள் வளர்ந்து ஒன்றையொன்று படையெடுக்க, அவை புவியிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டன… வாளால் அழிந்தவர்கள் பலரைப் பற்றியும் வரலாறு சொல்கிறது. அதிகாரம், செல்வம், புகழ் ஆகியவற்றுக்கான வேட்டையில், பற்பல செழுமையான பண்பாடுகள் அழிந்துள்ளன. … இத்தகைய பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் தாங்கள் புவியோடு தொடர்புடையவர்கள் என்பதை உணர்ந்திருந்தார்கள். துன்பம், நோவு, மரணம் போன்றவற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால் பிறரும் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்திருந்தார்கள். பரஸ்பர ஒட்டுறவைப் புரிந்து மதித்தார்கள். ஆனால் காலப் போக்கில் இந்தப் புனித அறிவும் உணர்வும் தொலைந்துபோயின. மானுட, விலங்கின, தாவர மற்றும் கனிம உலகங்களுக்கு இடையேயான தொடர்பும் உறவும், பொருள் ரீதியான மேம்பாடுகளால் உதாசீனப்பட்டு நிராகரிக்கப்பட்டன. ஆன்மிகத் தொய்வினால், மானுடப் பரிமாணம் களங்கமுற்றது.

இப்படி மனிதன் தன்னுள் இருக்கும் அரக்க ஆக்கிரமிப்பு உணர்வுக்கும், அதிகாரப் பசிக்கும் மட்டுமே தீனி போட்டுக்கொண்டு, பெண்மை உணர்வுகளையும், அதன் புற வெளிப்பாடாக பெண்களையும் அடிமைப்படுத்துகிறான். அதன் பொருளாதார வெளிப்பாடாக, மாசினை உருவாக்கும், புறச்சூழல் குறித்துக் கவலைப்படாத தொழில்நுட்பங்களை உருவாக்குகிறான். நுகர்வுக் கலாசாரத்தை உருவாக்குகிறான். இவை எல்லாமே ஆண்-மையத் தன்மை கொண்டவை. பெண்-மையத் தன்மையைப் புறக்கணிக்கிறான் அல்லது அடக்குகிறான். சிறைப்படுத்துகிறான்.

இதன் விளைவு என்ன?

பூமி ஒரு அதி-உயிரியாக அல்லது ஒரு பெரிய மகா-சிஸ்டமாகச் செயல்படுகிறது என்பதைக் கண்டடைந்தவர் ஜேம்ஸ் லவ்லாக். அவர் கூறுகிறார்:

நாம் நம்முடைய மனத்தையும் இதயத்தையும் மாற்றினால் ஒழிய நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த பூமிக்கு உயிர் உண்டு என்பதை உணரமாட்டோம். நாம் உருவாக்கும் மாற்றங்களையோ அல்லது மாற்றங்களை உருவாக்கும் நம்மையோ மறுதலித்து அந்த மாற்றங்களுக்கு எதிர்வினையாற்ற முடிந்த ஓர் உயிராக நாம் இந்தப் பூமியை உணரமாட்டோம். நாம் இந்தப் பூமியை ஓர் உயிருள்ள கிரகமாக, தன் தட்பவெப்பத்தையும் வேதியியலையும் மாற்றிக்கொள்ளும் சக்தி வாய்ந்த ஓர் உயிராக உணர்ந்தால் ஒழிய, இன்று அதை நம் மிகப்பெரிய எதிரியாக்கிவிட்டோம் என்பதை உணர்ந்தால் ஒழிய, நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் திட சங்கல்பம் நமக்கு உருவாகாது.

நரகாசுரன் புராணம் தன் இதயத்தில் கொண்டிருக்கும் செய்தியும் இதுதான். நம் அதிகார-மையப் பண்பாடு, நம் நுகர்வுக் கலாசார, லாப நோக்குப் பண்பாடு சிறையிட்டு வைத்திருக்கும் பெண்மை-மைய மதிப்பீடுகளை, நரர்களாகிய நாம் விடுதலை செய்யாவிட்டால், நம் அழிவும் நம் தாயாகிய பூமியின் எதிர்வினையால் நிகழும்.

தீபாவளி இந்தச் செய்தியை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்ளும் நாள்.

தீபாவளிக்கு இன்னும் சில முக்கியப் பரிமாணங்கள் இருக்கின்றன. சீக்கியர்கள் தீபாவளியை விடுதலைத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். புனிதத் தங்கக் கோவிலான ஹரி மந்திர் சாகிப்பின் அடிக்கல், தீபாவளி அன்றுதான் போடப்பட்டது. மொகலாய அரசன் ஜஹாங்கீர் குரு ஹர்கோவிந்த் அவர்களையும், 52 அரசர்களையும் கைது செய்திருந்தான். சீக்கிய எதிர்ப்பு வலுக்கவே அவன் குருவை விடுதலை செய்ய முன்வந்தான். ஆனால் குரு தன்னுடன் கைது செய்யப்பட்டிருக்கும் 52 அரசர்களையும் விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தவே, வேறு வழியில்லாமல் அவர்களையும் விடுதலை செய்ய வேண்டியதாயிற்று. அவர்கள் விடுதலை செய்யப்பட்ட நாள் தீபாவளியாகும். மொகலாய ஆட்சியின்போது பல தேசியத் திருவிழாக்கள் கொண்டாடுவது கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் அடக்கப்பட்டிருந்தது. 1737-ல் பாயி மணிசிங் எனும் சீக்கிய ஞானி தீபாவளி கொண்டாடும் உரிமைக்காகப் போராடி சித்திரவதை-கொலை தண்டனைக்குத் தன்னை மனமுவந்து பலிதானமாக அளித்தார்.

காலனிய காலத்திலும் தீபாவளி, இனவெறிக்கு எதிரான குரலாகவும் விடுதலையின் சின்னமாகவும் செயல்பட்டது. 1860-களில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ஆப்பிரிக்காவுக்கும் இதர கரும்புத் தோட்டத் தீவுகளுக்கும் கொத்தடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களின் தீபாவளி கொண்டாடும் கோரிக்கை தொடர்ந்து வெள்ளையதிகாரிகளால் மறுக்கப்பட்டு வந்தது. காலனிய அதிகாரிகள் ஹிந்து மதத்தை ஒரு மதமாகவே ஏற்றுக்கொள்ள மறுத்தனர். எனவே தீபாவளி கொண்டாட தொழிலாளர்களுக்கு அனுமதி மறுத்தனர்

தீபாவளிக்கான போராட்டமே தென்னாப்பிரிக்காவில் தொடக்கத்தில் வெள்ளையரை எதிர்த்து நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம். சத்தியாகிரகம் எனும் வார்த்தையை காந்தி உருவாக்குவதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னால் அரங்கேறிய சத்தியாகிரகம். 1907-ல்தான் முதன்முதலாக மக்கள் போராட்டம் வெற்றியடைந்தது. காலை பத்து மணிக்குக் குழந்தைகள் குழுமினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வேள்வி நடத்தப்பட்டது. காலனியத்தின் பண்பாட்டு மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடும் மக்களின் சின்னமாக தீபாவளி மாறியது. இந்தப் போராட்டத்தில் பாரதத்தில் இருந்துவந்த முக்கியமான விடுதலைப் போராட்ட வீரர்கள் பங்குகொண்டனர்.

தென்னாப்பிரிக்க மாகாணமான வாஸூலு நடால் எனும் பிராந்தியத்தின் தலைவர், 2007-ல் தென்னாப்பிரிக்காவில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் நூற்றாண்டு விழாவின்போது மக்களுக்குத் தெரிவித்த வாழ்த்துச்செய்தியில் கூறுகிறார்:

தீபாவளி அனைத்துத் தென்னாப்பிரிக்க மக்களுக்கும் ஒரு முக்கியமான திருவிழா ஆகும். …இந்த தேசத்தில் நம் மக்கள் அனுபவித்த பல போராட்டங்களில் இங்குள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொத்தடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட இந்தியத் தொழிலாளிகளின் போராட்டமும் ஒன்றாகும். அவர்களின் போராட்டம் தொழிற்சூழல், ஊதியம் ஆகியவற்றுடன் நிற்கவில்லை. தங்கள் பண்பாட்டையும் மதத்தையும் பின்பற்றுவதற்கான உரிமைக்காகவும் அவர்கள் போராடினர். அப்போராட்டங்களின் மையமாக தீபாவளி கொண்டாடும் உரிமைக்கான போராட்டம் இருந்தது. இந்தியர்களையும் அவர்களின் சந்த்திகளையும் தம் பண்பாட்டு உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட உத்வேகம் அளித்தவர்கள் இந்தியாவிலிருந்து வந்த பேராசிரியர் பாயி பரமானந்த், சங்கரானந்த சுவாமிகள் ஆகியோர். பாயி பரமானந்த் 1906-ல் ஹிந்து இளைஞர்கள் அமைப்பை உருவாக்கினார். இதற்கு அடுத்த ஆண்டே தீபாவளியைச் சமூகமாகக் கொண்டாட மக்களை ஒருங்கிணைத்தார்… தென்னாப்பிரிக்காவில் தீபாவளி, விடுதலையின் குரலாகவும், இனவாத பாரபட்சத்துக்கு எதிரான அடையாள அறைகூவலாகவும் மகாத்மா காந்தி, நெல்சன் மாண்டேலா ஆகியோரின் வருகைக்கான முன்னறிவிப்பாகவும் மாறியது.

வரலாற்றாசிரியர்கள் கோலம் வஹீதும் அஸ்வின் படேலும் தென்னாப்பிரிக்காவின் இந்தியக் கொத்தடிமைத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய வரலாற்றை ஆராய்ச்சி செய்துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி அஸ்வின் தேசாய் கூறுகிறார்:

தீபாவளி கொண்டாடப்பட்ட நூறாவது ஆண்டான இன்று நாம் பல தியாகங்களைச் செய்த கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கும், மேலும் பல ஹிந்துக்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம். அவர்கள் பெரிய அளவில் செய்த தியாகத்தின் மூலமே காலனிய அதிகாரிகள் ஹிந்து மதமும் ஒரு மதம்தான் என்றும், அவர்களுக்கு அவர்கள் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாட உரிமை உண்டு என்றும் புரிந்தது.

இப்பாரம்பரியத்தின் விளைவாகவே 1991-ல் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய நெல்சன் மண்டேலாவும் தீபாவளியின் விடுதலைச் செய்தியை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்:

தீபாவளி தினத்தன்று நான் இந்தப் புனித தீபத்தை ஏற்றி வைக்கிறேன். அப்போது இந்தத் தீபம் எப்படி மூடநம்பிக்கையை அகற்றும் ஞான ஒளியாகத் திகழ்கிறது; வறுமையை அகற்றும் வளத்தைக் குறிக்கிறது; அறியாமையை வெற்றி கொள்ளும் அறிவாக விளங்குகிறது; நோயையும் சுகவீனத்தையும் போக்கும் நல் ஆரோக்கியமாக விளங்குகிறது; அடிமைத்தளையை அகற்றும் விடுதலையாகத் திகழ்கிறது என்பதை நினைவுகொள்கிறேன்.

நம் விடுதலையில் நாம் இந்த வெற்றிகளையெல்லாம் இணைந்து கொண்டாடுவோம். ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கான பாதை நீண்ட கடினமான பாதை. விடுதலையின் இப்பயணத்தில் இந்தியச் சமுதாயம் எப்போதும் துணை நிற்கிறது… இதே நேரத்தில் நம்முடைய விடுதலைக்காக உழைத்தவர்களை நினைவுகொள்வோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை விடுதலைக்காக அர்ப்பணித்தார்கள். சுதந்திர இந்தியாவைக் காண உழைத்து, விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சுவாமி தயானந்த சரஸ்வதி தீபாவளி நாளில்தான் உயிர்த்தியாகம் செய்தார். கிருஷ்ரபிலால், அஹமது திமோல், சாலமன் மஹ்லங்கு, இன்னும் ஆயிரக்கணக்கானோர் – …நண்பர்களே நான் உங்களுடன் இந்தத் தீபாவளி விழாவின்போது உடனிருப்பதைப் பெரும் பெருமையாக நினைக்கிறேன். பல வருடங்கள் ரோபென் தீவில் இந்தத் திருவிழாவை நாங்கள் உற்சாகத்துடன் கொண்டாடினோம். நம் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் தீபாவளித் திருநாளிலிருந்தும் அதனுடன் தொடர்புடைய ராமாயணத்திலிருந்தும் பல விஷயங்களை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

தீபாவளி தன் நீண்ட வரலாற்றின் மூலம் பண்பாட்டுச்செழுமை, பன்மை பேணுதல், காலனியாதிக்க எதிர்ப்பு, விடுதலை எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருக்கின்றது. உலகில் வேறெந்தப் பண்டிகைக்கும் இத்தகைய பன்முக வரலாறு இருக்குமா என்பது ஐயமே.

நீங்கள் கேட்கலாம். அப்போது ஏன் சில அரசியல்வாதிகளால் தீபாவளியின்போது சொந்த மக்களுக்கு வாழ்த்துகூடச் சொல்லமுடிவதில்லை என்று.

ஒருவேளை தீபாவளியின் உன்னதம் புரிய ஒருவருக்கு நெல்சன் மண்டேலாவின் விடுதலை உணர்வில் ஒரு பகுதியாவது தேவைப்படலாம். நம் ஊர் அரசியல்வாதிகளுக்கு இனி வரும் தலைமுறைகளிலாவது அது வரும் என்று நம்புவோம்.

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அரவிந்தன் நீலகண்டன்

எழுதியவர் : (14-Oct-17, 7:57 pm)
பார்வை : 132

சிறந்த கட்டுரைகள்

மேலே