என் அரைக்கால் சட்டைப் பருவத்து தீபாவளி நினைவுகள்

எத்தனை முறை எண்ணிப் பார்க்கினும்
எள்ளளவும் சலிப்பதில்லை
என் அரைக்கால் சட்டைப் பருவத்து
அற்புத தீபாவளி நினைவுகளை!

நான்கு மணிக்கு எழுப்பச் சொல்லி
நாற்பது முறை நினைவுபடுத்தியதில்
என்னோடு சேர்ந்து அம்மாவும்
தூங்காமல் போன தீபாவளி இரவுகள் முதல்,

தீபாவளி அதிகாலையில்
தெருவில் வெடிக்கும்
முதல் வெடி யாருடையது?
என்கிற போட்டியில்
அத்தனை தீபாவளிகளிலும்
அசராமல் தோற்றது வரை

எதுவும் அகலவில்லை
என் இனிய நினைவுகளை விட்டு!

மதுரையின் சாலைகளில்
மணிக்கணக்காய் அலைந்து திரிந்து
பத்துக் கடைகள் ஏறியிறங்கி
மொத்த குடும்பத்திற்கும்
புத்தாடையெடுத்த பொழுதுகள்
எப்போதும் மறவாத
ஏகாந்த நினைவுகள்!

தைக்கத் தந்த புத்தாடைகளுக்காக
தையற்கடையில் தவமிருந்து
கடைசி நேரத்தில்
கையில் கிடைக்கும்போது
பெற்ற பெருமித உணர்வு
தவறியும் கிடைப்பதில்லை
தற்போது வரும்
தீபாவளித் தருணங்களில்!

தீபாவளிப் பலகாரம் மட்டுமல்ல
தீபாவளிப் பண்டிகையே
தித்திக்கத்தான் செய்தது அன்று!

இப்போதும் வரத்தான் செய்கிறது
வருடம் தோறும் தீபாவளி!

அதே பட்டாசு சத்தம்!
அதே பலகார வாசம்!

ஆனாலும் குறைகிறது
ஆழ் மனதில் ஏதோவொன்று!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (17-Oct-17, 6:52 pm)
பார்வை : 86

மேலே