கொசுக்கள் வளர்த்த பள்ளிகள், வீடுகளுக்கு அபராதம் அதிகாரிகள் அதிரடி

மானாமதுரை: கொசு உற்பத்தி செய்ததாக மானாமதுரை மற்றும் நாமக்கல் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் டெங்கு பாதிப்புள்ள பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஆய்வு செய்யும்போது டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்களை உற்பத்தி செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.


சிறுவனுக்கு டெங்கு அறிகுறி
இந்நிலையில் கொசு வளர்த்ததாக கூறி மானாமதுரை குட்வில் மெட்ரிக் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் மாணவன் ஹரினிஸ் என்ற சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது.

பிளாஸ்டிக் கிடங்குக்கும் அபராதம்
இதனையடுத்து பள்ளியை ஆய்வு செய்த சிவகங்கை ஆட்சியர் லதா, சுகாதாரமற்ற முறையில் பள்ளி இயங்கியதால் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் டெங்கு கொசுவை வளர்த்ததாக திருவாரூர் அருகே தண்டலையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் கிடங்கிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தலா 25 ஆயிரம் அபராதம்
இது தவிர நாமக்கல்லில் கொசு உற்பத்தியாக காரணமாக இருந்ததாக கூறி 2 பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கீரம்பூர் நவோதயா சிபிஎஸ்இ மற்றும் வேப்பநத்தம் நேஷனல் பள்ளி ஆகியவற்றிற்கு தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நூலகத்திற்கு அபராதம் விதிப்பு
கொசு உற்பத்தியாக காரணமாக இருந்ததாக கூறி தஞ்சை மாவட்ட மைய நூலகத்திற்கும் அதிகாரிகள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த கட்டட உரிமையாளர் ஸ்ரீராம் என்பவருக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

காலி மனைகளில் குப்பை

இதேபோல் டெங்கு பாதிப்பு உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் காலி மனைகளில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி எச்சரித்துள்ளார்

கலை மதி

எழுதியவர் : (19-Oct-17, 3:01 pm)
பார்வை : 51

மேலே