பட்டுப்பாய் கனவுகள் -இராய செல்லப்பா

சீர்காழியிலிருந்து வரவழைப்பாராம் என் மாமனார். ஆனால் அது தயாராவதென்னவோ பத்தமடையில்தானாம். சீர்காழியில் அவர்களுடைய ஏஜென்ட்டு ஒருவர் மொத்தமாக ஆர்டர் பிடித்து அனுப்புவாராம். பத்தமடைக்காரர்கள் அதற்கேற்ப உடனடியாகத் தயார்செய்து ஒவ்வொன்றையும் ஈரம்போக உலரவைத்து பழுப்புநிறத்தாளில் சுற்றி லாரியில் அனுப்புவார்களாம். இவர் அதைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு பஸ் மூலம் அனுப்புவாராம். அவரும் ஒரு பாய்தான்; ஆனால் bhai !

‘பட்டுப்பாய்’ இல்லாமல் கல்யாணம் களைகட்டுமா?

சாதாரணமாகத் தயாராகும் கோரைப்பாய்களை விட இது மிகவும் நைசாக இருக்கும். ஓரங்களில் பட்டுத் துணியை மடித்துத் தைத்திருப்பார்கள். தைக்கப் பயன்பட்ட நூலும் பட்டுநூலாகவே இருக்கும். மணமேடையில் மணமக்களை உட்காரவைக்கும் பாய் என்பதால் சிறப்பான கவனத்தோடு நெய்திருப்பார்கள். மணமகன், மணமகள் பெயர்களும், திருமணத்தேதியும் பெரிய எழுத்தில் நெய்திருப்பார்கள். மணமகன் பெயர் ஒரு வண்ணத்திலும், மணமகள் பெயர் இன்னொரு வண்ணத்திலும், திருமணத்தேதி இன்னொரு வண்ணத்திலும் இருப்பது வழக்கம். வேறு மாதிரியாகவும் இருக்கலாம். கொடுத்த ஆர்டர்படி செய்து கொடுப்பார்கள். எழுத்துக்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். தமிழ் எழுத்துக்களை நெய்ய அதிக நேரம் ஆகும் என்பதால் விலையும் கூடுதலாகும்.

வசதியான கட்டில் இருந்தாலும், முதல் இரவுக்குப் பட்டுப்பாய்தான் ஆகிவந்தது என்று தஞ்சாவூர்க்காரர்கள் நம்புவார்கள். ஆகவே என் மாமனார் மிகுந்த கவனத்தோடு ஆர்டர் கொடுப்பார். பாய் வந்து சேர்ந்தவுடன் அங்குலம் அங்குலமாகத் தடவிப் பார்த்து நெருடல் இல்லாமல் இருக்கிறதா என்று சோதிப்பாராம். (அவருக்குப் பத்துக்கு மேற்பட்ட சகோதரிகள்.) ஒருமுறை மணமகனின் பெயரிலோ, அல்லது இனிஷியலிலோ எழுத்துப்பிழை நேர்ந்துவிட்டதாம். அதற்காக டிரங்க்கால் புக் செய்து தயாரிப்பாளரை ஒரு பிடிபிடித்துவிட்டாராம். வாத்தியார் ஆயிற்றே! திருத்தப்பட்ட புதிய பாய் வந்துசேருவதற்குள் நிலைகொள்ளாமல் தவித்துப்போனாராம்.

எனது திருமணத்திற்கு வரவழைக்கப்பட்ட பட்டுப்பாயில் நல்லவேளையாக எந்தப் பிழையும் இல்லை. ‘சுத்தமாக வந்திருக்கிறது’ என்று என்னிடம் பெருமையாகச் சொன்னார் (திருமணத்திற்கு முன்பு). ஒரே தயாரிப்பாளரிடம்தான் இதுவரை பன்னிரண்டு திருமணங்களுக்குப் பாய் வாங்கினாராம். அவரிடம் வாங்கினால் ‘ஆகி’வரும் என்றார். அதற்குப் பொருள் என்னவென்று அப்போது தெரியவில்லை.

அந்தப் பாயை உண்மையிலேயே பட்டுப்புடைவையை விட கவனமாகக் கையாளுவார் என் மனைவி. சுருட்டிவைப்பதில் சற்றே அசிரத்தையாக இருந்தாலும் தொலைந்தேன். தனக்கே உரிய உவமைகளைச் சொல்லி வெருட்டுவார். ஆனால் என் முதல் மகள் பிறந்தவுடன் அவள் இந்தப்பாயைப் படுத்திய பாடு சொல்லிமாளாது. ஆனால் மகளைக் கோபிக்கும் வழக்கம் மனைவிகளுக்கு இல்லையே! மேலே போட்ட ரப்பர் ஷீட்டையும் மீறி ஈரமாகிவிடும் அந்தப் பாய். அதை நாசூக்காகக் கழுவி, நிழலில் உலர்த்தி எடுத்துவைக்கும் நளினம் அடடா..!

மூன்று குழந்தைகளை அந்தப் பட்டுப்பாய் பார்த்துவிட்டது. (இதுதான் ‘ஆகி’ வருதலோ?) ஆனால் அது அலுத்துக்கொண்டதே இல்லை. அதில் எப்போது படுத்தாலும் எனக்கு உடனே உறக்கம் வந்துவிடும். ஆரம்பத்தில் நல்ல நல்ல கனவுகளும் வருவதுண்டு. (பிற்பாடு நின்றுவிட்டது!)

எங்கள் சுக துக்கங்களில் தவறாமல் பங்கெடுத்துக்கொண்ட உற்ற துணை அது.

வேலைநிமித்தமாக நான் வெவ்வேறு ஊர்களுக்குப் பயணித்தபோதும் சென்னை வீட்டிலேயே அது நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவ்வப்பொழுது அதை வெளியில் எடுத்துச் சற்றே வெயிலில் காட்டி மீண்டும் உள்ளேவைப்பது வழக்கமாகியது.


இன்று அதற்கு வயதாகிவிட்டது. ஆனால் நைந்துபோகவில்லை. வண்ணம் மாறவில்லை. ஓரத்தில் தைக்கப்பட்ட பட்டுத்துணி மட்டும் நிறம் மாறியுள்ளது. கட்டில்களையே எல்லோரும் பயன்படுத்துவதால் இது சற்றே உயரமான பரணில் ஒதுங்கிவிட்டது. கடைசியாகப் பயன்படுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும், அதை எடுத்து வீச அவளுக்கு மனம் வரவில்லை. அதிலுள்ள எங்கள் இருவர் பெயரும் இன்னும் மெருகழியாமல் இருக்கிறதே! ‘வயதாகிவிட்டால் என்னையும் எடுத்து வீசிவிடுவீர்களா?’ என்பாள். அந்த மாதிரி ரிஸ்க் எடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை என்பதற்குக் காரணம் உண்டு.




நினைத்துப்பார்க்கிறேன். மல்லிகைப்பூ, ஊதுவத்தி மணத்தோடு தனக்கே உரிய மணத்தையும் பரப்பி, அந்த (முதல்) இரவுக்கு இனிமை ஊட்டிய பட்டுப்பாய்க்கு இப்போது நாற்பத்தொரு வருடங்கள் ஆகிவிட்டன! (மே 24 அன்று.) ‘எப்படித்தான் இவ்வளவு காலம் உங்களோடு குப்பை கொட்டினேனோ?’ என்று ஆச்சரியப்படுகிறாள் விஜி. பட்டுப்பாய் ஆச்சரியப்படுமா என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அது இன்னும் பணிசெய்யத் தயாராகவே இருக்கிறது.

சென்னைக்குப் போனவுடன் வெளியில் எடுத்துப் பார்க்கவேண்டும். முடிந்தால் ஒருமுறை பயன்படுத்தியும்!

எழுதியவர் : (21-Oct-17, 9:46 pm)
பார்வை : 77

மேலே