மையநிலப்பயணம் 8

மாலை ஏழுமணிக்கெல்லாம் குவாலியர் வந்துவிட்டோம். குவாலியர் கோட்டை ரயில்நிலையம் அருகில்தான் இருக்கிறது. அங்கேயே அறைபோட்டோம். நான் எழுத அமர்ந்தேன். நண்பர்கள் அந்தியுணவை தேடி கிளம்பினார்கள். வரும்போதே வாங்கிவந்திருந்த வாழைப்பழத்தையும் ஆப்பிளையும் நான் சாப்பிட்டேன். வெண்முரசு ஓர் அத்தியாயம் கூடுதலாகத் தேவைப்பட்டது. அதன்பின் 28 ஆம் தேதிவரை கவலையில்லை



நான் ஆடைகளை அதிகமாக எடுத்துச்செல்லவில்லை. துபாயில் என் அறையிலேயே சலவை இயந்திரம் இருந்தது. கிரீன்பார்க்கில் சில ஆடைகளை சலவை செய்து வாங்கினேன். பாதி ஆடைகளை பெட்டியில்வைத்து வினோத் வீட்டில் கொடுத்துவிட்டு வந்தேன். கையில் எடுத்துவந்தவை சில ஆடைகள் மட்டுமே. ஆகவே செல்லுமிடத்தில் சட்டைகளை துவைத்து நன்றாக உதறி காயப்போடுவேன். ஒரேநாளில் காய்ந்துவிடும், ஏனென்றால் வட இந்தியாவின் மையநிலப்பகுதிகளில் மழைக்காலத்திலன்றி காற்றில் ஈரப்பதம் மிகக்குறைவு.



காலையில் குவாலியரில் இருந்து கிளம்பி 25 கிமீ தொலைவில் இருக்கும் படேஸ்வர் ஆலயத்தொகைக்குச் சென்றோம். படேஸ்வர் ஆலயக்கொத்து இந்தியாவின் மிக முக்கியமான ஒரு சிற்ப வரலாற்றுக் கருவூலம். படவள்ளி எனும் கிராமத்திற்கு அருகே இருந்து ஐந்து கிமீ தொலைவில் இது உள்ளது



மையச்சாலையில் இருந்து உடைந்து சாக்கடைகள் உடைப்பெடுத்து ஓடும் கரடு முரடான கிராமத்துச் சாலையில் அலையில் படகு போல காரில் உலைந்தாடியபடியே சென்று பல இடங்களில் வழி கேட்டு அந்த ஆலயத்தை சென்றடைந்தோம்.



செல்லும்வழியில் சாப்பிடலாம் என கிளம்பியதில் சாப்பிடவே முடியவில்லை. எங்கும் டீக்கடைகள் கூட இல்லை. படவள்ளியில் ஒரு கடையில் ஐந்துரூபாய் பிஸ்கட் பொட்டலங்கள் இருந்தன. அதை வாங்கி சாப்பிட்டோம். கொஞ்சம் பசி ஆறுவதுபோலத் தோன்றியதை மறுப்பதற்கில்லை.



அப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வருவது மிக அரிது என்பது வழிகேட்கும் ஒவ்வொருவரும் கொள்ளும் திகைப்பிலிருந்து தெரிந்தது. இன்று கூகிள் வழிகாட்டி போன்ற வசதிகள் இருந்தும் கூட இதைக்கண்டுபிடிப்பது அத்தனை எளிதல்ல இத்தனைக்கும் சாலையோரத்திலேயே தொல்லியல் துறையின் அறிவிப்புப்பலகை இருந்தது



செல்லும் வழியெங்கும் பாறைகளை வெட்டி கற்பாளங்களாக ஏற்றுமதி செய்யும் தொழில் பெருமளவில் நடந்து கொண்டிருந்தது. இங்குள்ள பாறைகள் செந்நிறமானவை அல்லது வெண்பளிங்கு. அவற்றுக்கு ஐரோப்பியச சந்தையில் நல்ல மதிப்பிருக்கும் என்று தோன்றுகிறது. இப்பகுதியின் கல் வணிக குற்றக்குழு மிக மிக ஆற்றல் மிகுந்தது மத்தியப்பிரதேச அரசாலேயே அஅதைக்கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார்கள்.



இங்குள்ள அனைத்து குன்றுகளிலும் ஏதேனும் ஆலய்ங்களோ வரலாற்று நினைவிடங்களோ உள்ளன அவையனைத்தும் இந்த கல் அகழ்வு தொழிலால் பாதிக்கப்படுகின்றன என்று அறிந்துகொண்டோம். இங்குள்ள கலை,தொல்லியல் ஆர்வலர் இதை யுனெஸ்கோ வரை கொண்டுசென்றுள்ளனர். ஆனால் கல் அகழ்வாளர்கள் அத்தனை பெரிய கட்சிகளையும் சேந்தவர்கள். இப்பகுதியே அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது



படேஸ்வர் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் கோயில்பரப்பு உண்மையில் ஒர் ஆலயம் அல்ல. ஒரு பெரிய பாறைச்சரிவு முழுக்க நூற்றுக்கு மேற்பட்ட சிறிய ஆலயங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவை சிவனுக்கும் எஞ்சியவை விஷ்ணுவுக்கும் அமைக்கப்பட்டவை. கிபி 8ம் நூற்றாண்டு முதல் இருநூறு ஆண்டுகாலம் இவை கட்டப்பட்டன. கூர்ஜரப் பிரதிகார வம்சத்தால் உருவாக்கப்பட்டவை இந்த ஆலயங்கள். கூர்ஜரப்பிரதிகார என்பது இன்றுள்ள குஜ்ஜார் இனமக்களின் அரசு.



இவை கஜுராஹுவுக்கு நூறு ஆண்டுகள் தொன்மையானவை. கஜுராஹொவை முன்னரே பார்த்தவர்கள் இந்த ஆலயம் அதன் ஒரு முன்வடிவம் என்று எண்ணக்கூடும். இங்கு படிப்படியாக வளர்ந்து வந்த நாகர பாணிக் கட்டிடக்கலையின் அடுத்தகட்ட வளர்ச்சியே கஜுராஹோவில் காணக்கிடைக்கிறது. மத்தியபிரதேசத்தில் உள்ள நாகரபாணி ஆலயங்கள் அனைத்துக்கும் உச்சம் என்பது கஜுராஹோவின் காந்தரிய மகாதேவர் ஆலயம்தான். இந்தியாவின் மகத்தான மாபெரும் கலைச்சின்னங்களில் ஒன்று அது



பத்து ஹெக்டேருக்கும் மேலாக பரந்து கிடக்கும் இந்த நிலத்தில் அமைந்த ஆலயங்கள் அனைத்துமே கஜுராஹோ ஆலயங்கள் கட்டப்பட்ட அதே செந்நிற சேற்றுப்படிவப்பாறையில் செதுக்கப்பட்டவை. ஆகவே காலத்தால் அனைத்து சிற்பங்களும் சற்று மழுங்கியுள்ளன. ஆனால் நாங்கள் சென்ற காலையிள வெயிலில் அவை மாமரம் தளிர்கொண்டு நிற்கும் காடு போல கண்களை நிறைத்தன ஆலயங்களின் நிழல் அதே செந்நிற கல்லில் அமைந்த தரைத்தளத்தில் விழுந்து நீண்டிருந்ததைக் கண்டபோது அந்நிழலும் பொன் என்றே தோன்றியது.



அத்தனை ஆலயங்கள் எனும்போது எவற்றையுமே முழுமையாகப் பார்க்க முடிவதில்லை. அவை அனைத்தும் இணைந்து ஓர் ஒட்டுமொத்த உளஎழுச்சியை அளிக்கின்றன. ஒரு நகைக்கடையில் அள்ளி பரப்பப்பட்டிருக்கும் நகைகொத்துகள் அவை என்று எடுத்துக்கொண்டால் உடனே திகட்டத் தொடங்கிவிடும் ஆனால் பூத்த கொன்றைக்காடென்றோ, தளிர்த்த மாமரத் தோட்டமென்றோ ஒளிபட்ட மலை முகடு நிரையென்றோ, காலை முகில் பரப்பென்றோ எண்ணிக்கொண்டோமென்றால் இயற்கையின் இயல்பான ‘முடிவற்ற அழகு’ என்னும் அற்புதத்தை நெருங்க முடிவற்ற கலை வழியாக முயலும் மனிதனின் உளஎழுச்சியை அங்கே காண முடியும்



‘திகட்டத் திகட்ட’ என்பதே ஒருவகையில் செவ்வியலின் அழகியல் எனலாம் ஒருசெவ்வியல் படைப்பை ஒருபோதும் முழுக்க பார்த்து முடிக்க முடியாது. பார்க்குந்தோறும் பெருகுவதும், பார்க்கப்படாமல் எப்போதும் ஒருபகுதி எஞ்சியிருப்பதும் செவ்வியல் கலையின் இலக்கணம். சிறிய நுட்ப வேறுபாடுகளுடன் மீண்டும் மீண்டும் ஒன்றையே செய்வதும், படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டே இருப்பதும்தான் செவ்வியல் கலை



படேஸ்வர் ஆலய்த்தொகுதியில் மிக எளிய வடிவில் அமைந்த ஒற்றை ஆள் உய்ரமே கொண்ட ஆரம்ப காலச் சிற்றாலயங்கள் உள்ளன பல அடுக்குகளாக எழுந்து நிற்கும் பெரிய ஆலயங்களும் உள்ளன. பெரும்பாலான கருவறைகள் ஒழிந்துகிடக்கின்றன. சிவலிங்கம் எஞ்சியிருக்கும் ஓரிரு ஆலயங்களில் உள்ளூர் பூசகர் ஒருவர் வந்து பூசை செய்வதைக்கண்டேன். அந்தணர் அல்ல. தன்னுடைய தனிப்பட்ட அர்ப்பணிப்பினால் ஒவ்வொரு நாளும் வந்து அந்த ஆலயங்களுக்குள் நுழைந்து பூசை செய்கிறார்.



பல ஆலயங்களுக்குள் நுழைவதற்கே உடலை ஒடுக்கி இடிபாடுகளினூடாக செல்ல வேண்டும். நீரூற்றி, மலர் வைத்து, பூசை செய்து இறைவனுக்கு வைத்த படையலாக வைத்த அரிசியை அங்கு மேய்ந்துகொண்டிருக்கும் மயில்களுக்கு கூவிக் கூவி அழைத்து அளித்துக்கொண்டிருந்தார். அவர் கையிலிருந்தே மயில்கள் வந்து அரிசியை வாங்கித் தின்பதைக்கண்டோம்.



கூர்ஜரப் பிரதிகார அரசர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம் 12-ம் நூற்றாண்டு வாக்கில் சுல்தானிய படையெடுப்பாளர்களால் சிதைக்கப்பட்டது. பின்னர் நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட முழுமையாகவே அழிந்தது. சுல்தானியப் படையெடுப்புகளில் அனைத்து கருவறைகளிலும் தெய்வங்கள் உடைத்து வீசப்பட்டன. அன்று அந்த இடிபாடுகளிலும் இது போல பிடிவாதமாக ஒருவர் நுழைந்து வழிபாடு செய்துகொண்டிருந்திருப்பார் என்று தோன்றியது. அழிக்க இயல்வது கல்லில் எழுந்த பருவடிவக்கோயிலைத்தான். உள்ளில் எழுந்த கோயிலை அல்ல. படமாடக் கோயில் அழியும் ,நடமாடக்கோயில் வாழும்.



படேஸ்வர் கோயில் சம்பல் நதியின் கரையில் அமைந்துள்ளது ஒட்டுமொத்தமாகவே இப்பகுதி சம்பல்பள்ளத்தாக்கு எனப்படுகிறது. இந்திய சுதந்திரத்துக்கு முன்னரே இந்நிலம் முழுக்க கொள்ளைக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது. சம்பல் ஒருவகையில் பாலை நிலம். ஏனெனில் சம்பல் நதி கரைப்பரப்பிலிருந்து மிக ஆழத்தில் ஓடுகிறது. நெடுங்காலமாக அதில் வந்த வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட வண்டலால் உருவான நிலம் இது. மழை பெய்து நீர் ஓடிய வழிகள் வண்டலை அரித்துச் சென்று ஆழமான நீள்வழிகளாக ஆகியிருக்கின்றன.



இவ்வாறு மென்மணல் மேடுகள் நடுவே இருபதடி ஆழத்தில் வளைந்து நெளிந்து ஒன்றோடொன்று பின்னி வலைபோலச் செல்லும் இந்தப்பள்ளப்பாதைகள்தான் சம்பலின் நிலப்பகுதியின் சிறப்பமைப்பு .முகலாய ஆட்சிக்காலத்தில் ராஜபுத்திர அரசுகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டபோது சிதறிப்பரந்த ராஜபுத்திர வீரர்கள் சம்பலுக்குள் குடியேறினார்கள். தங்களுக்கென ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அங்கே வரிவசூல் செய்து சுதந்திரமாக வாழ்ந்தார்கள்.



முகலாயப்படைகள் துரத்தி வருகையில் சம்பலுக்குள் நுழைந்துகொண்டார்கள். சம்பல் நிலத்தின் சிறப்பு அம்சமான இந்த ஆழ்ந்த பள்ளங்கள் ஒருவகை புதிர்ப்பாதைகளாக மாறி அவர்களைக்காப்பாற்றின. அவர்களுக்கு அந்த வழி நன்கு தெரியும் அவர்களைத் துரத்திவருபவர்களால் அவர்களை அணுக முடியாது



நூறாண்டுகளுக்கு முன் கிராம மக்களுக்கு ஒருவகையான பாதுகாப்பாளர்களாகவும் சிறு ஆட்சியாளர்களாகவும் இருந்த அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கிய போது கொள்ளையர்களாக அடையாளம் காணப்பட்டார்கள். இப்பகுதியெங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட நவீன அரசொன்றை அமைத்த விரும்பிய பிரிட்டிஷாருக்கு இவர்கள் மிகப்பெரிய தொல்லையாக அமைந்தார்கள்.



ராஜபுத்திர கொள்ளைக்காரர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு தொடர்ந்து போராடி வந்தது பெரும்பாலும் அவர்களை கொன்று அழித்தார்கள் என்று சொல்லலாம். ஆயினும் சுதந்திரத்துக்கு பின்னரும் சம்பலில் வெல்ல முடியாத கொள்ளைக்காரர்கள் எஞ்சினார்கள் இந்தப்பகுதி மான்சிங், பான்சிங் தோமர், மல்கான் சிங் போன்ற கொள்ளைக்காரர்களால் ஆளப்பட்டது



முதற்காலகட்டத்தில் கொள்ளைக்காரர்கள் பெரும்பாலும் ராஜபுத்திர வீரர்களாக இருந்தனர். தொடர்ந்த தலைமுறைகளில் கிராமங்களிலிருந்து அவர்கள் தங்கள் படைவீரர்களைத் தெரிவு செய்துகொண்டனர். கிராமங்களில் நிலப்பிரபுத்துவ அமைப்பினால் ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்தும் பல்வேறு பூசல்களால் குற்றவாளிகளாகி அரசின் பிடியிலிருந்து தப்ப விரும்புவர்களிடமிருந்தும் அவர்கள் தங்கள் வீரர்களைத் எடுத்துக் கொண்டனர்.

இறுதியாக இப்பகுதியை ‘ஆட்சிசெய்த’ கொள்ளையனாகிய நிர்பய் சிங் குஜ்ஜார் இந்த ஆலயங்களைக்கட்டிய கூர்ஜர பிரதிகார வம்சத்தை சேர்ந்த ராஜபுத்திரர். உத்தரபிரதேசத்திலும் பீகாரிலுமாக பரந்துகிடக்கும் சம்பல்நிலத்தில் சக்ரநகர் என்னும் பகுதியைத் தலைமையாகக் கொண்டு ஒரு நிகர் அரசாங்கத்தையே நிர்பய் சிங் நடத்தி வந்தார். அவர்மேல் 205 குற்ற வழக்குகள் இருந்தன என்கிறார்கள்.

ஏறத்தாழ 30ஆண்டுகாலம் இரு மாநில அரசுகள் முயன்றும் அவரைப்பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அவருக்கு மக்களாதரவும் இருந்தது. அவருடைய தலைக்கு இரண்டரை லட்சம் ரூபாய் விலை வைக்கப்பட்டது.


படேஸ்வர் ஆலயம் அவருடைய முகாம்களில் ஒன்றாக இருnதது அதற்குள் ஒரு தாக்குதல் நடத்த இந்திய அரசு தயங்கியது. படேஸ்வர் ஆலயம் பூகம்பத்தால் சரிந்து ஒவ்வொன்றாக விழுந்துகொண்டே இருந்தது இந்நிலையில் மலையாளியாகிய் தொல்லியல் துறை அதிகாரி கே.கே.முகம்மத் இப்பகுதியில் பொறுப்பிற்கு வந்தபோது இந்த ஆலயங்களை பாதுகாக்க உறுதி பூண்டார்.



கரிங்கமண்ணுக் குழியில் முகம்மது என்பது அவரது இயற்பெயர் கோழிக்கோட்டில் பிறந்தவர். மீரான் குட்டி ஹாஜிக்கும் மரியத்துக்கும் மைந்தர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப்பட்டம் பெற்றவர் தொல்லியல்துறையின் தொல்லியல்பட்டயப் படிப்பை முடித்தபின் அலிகட் பல்கலையிலேயே தொல்லியல் மற்றும் வரலாற்றாய்வாளராகப் பணியாற்றினார். பின்னர் தொல்லியல் துறை அதிகாரியாக ஆனார்.



கே.கே.முகம்மது அக்பரின் தீன் இலாகி என்னும் சமரச மதத்திற்கு ஆக அமைக்கப்பட்ட இபாதத் கானா என்னும் விடுதியையும் அக்பர் கட்டிய கிறித்த தேவாலயத்தையும் அகழ்வில் கண்டுபிடித்தார். அசோகர் கட்டிய கேசாரியா ஸ்தூபத்தையும் ராஜ்கீரில் இருந்த புத்த ஸ்தூபத்தையும் கண்டுபிடித்தவரும் அவரே. வைஷாலி அருகே கொலுகாவில் பௌத்த சைத்யங்களின் அடித்தளத்தை அகழ்வுசெய்து கண்டுபிடித்தார். உத்தரப்பிரதேசத்திலும் மத்தியப்பிரதேசத்திலும் பல குடைவரைகளையும் பழங்கால தொப்பிக்கற்களையும் கண்டடைந்தார்



கே.கே.முகம்மதின் தன்வரலாறான ‘ஞான் எந்ந பாரதியன் ‘ [நான் என்னும் இந்தியன்] அவர் ஓய்வுபெற்றபின் 2016 ல் எழுதப்பட்டது. அதில் அயோத்தியின் பாபர் மசூதி இருக்குமிடத்திற்கு அடியில் பண்டைய ஆலயம் ஒன்று இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன என அவர் சொன்னது இடதுசாரிகளாலும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.



கே.கே.முகம்மது தொல்லியல்துறையின் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சட்டிஸ்கரில் மாவோயிய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டேவாடா ஆலயங்களை பராமரிப்பதற்கு தீவிரவாதிகளின் தலைமையைச் சந்தித்து அவர்களை சம்மதிக்கவைத்தார். அவர்களின் உதவியுடன் அந்த ஆலயவளாகம் எடுத்துக்கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது.



படேஸ்வர் ஆலயத்தை பாதுகாக்கும்பொருட்டு கே.கே.முகம்மது நிர்பய்சிங்க் குஜ்ஜாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தன் மூதாதையரால் கட்டப்பட்ட அவ்வாலயத்தைப் பேணுவது அவருடைய கடமை என நிர்பய் சிங் ஏற்கவைத்தார். அவர் உதவியுடன் அவ்வாலய வளாகத்தை சீரமைத்து இன்றிருக்கும் வடிவில் அமைத்தார்.



2005ல் நிர்பய்சிங் குஜ்ஜார் அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டார். அவரை வீழ்த்துவதில் பெரும்பங்கு வகித்தவர்கள் இப்பகுதியில் கல்அகழ்வு செய்பவர்கள். அவருடைய இறப்புக்குப்பின் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளையர் இல்லை. ஆனால் கல்லகழ்வாளர்களின் குற்றக்குழுக்கள் கட்டுப்பாடின்றி பெருகியுள்ளன. இங்குள்ள மலைகள் அவர்களால் அழிக்கப்படுகின்றன. படேஸ்வர் ஆலயம் உட்பட அனைத்து தொல்லியல் மையங்களும் அவர்களால் அழிக்கப்படும் நிலையில் உள்ளன. கே.கே.முகம்மது அதைப்பற்றிய தன் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜெயமோகன் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்

எழுதியவர் : (1-Nov-17, 3:12 pm)
பார்வை : 31

மேலே