தீக்கடைகோல் - கலி விருத்தம்

கரணம் பலசெய்து கையுற்(று) அவர்கட்கு
அரணம் எனுமிலர் ஆற்றிற் கலந்து
திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு
அரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப. 55 வளையாபதி

பொருளுரை:

கணிகையர் தம்மை அடைந்த காமுகர் திறத்திலே அவர் இன்புறும் வகையில் பல்வேறு செயல்களையும் செய்து, அவர் விரும்பிய வழியிலே இயங்கி, அக்காமுகர்க்குச் சிறிதும் பாதுகாவல் ஆகாதவராய் அவரது திண்ணிய பொருள்களைக் கைக்கொள்ளும் வகையில் அவரை அழித்து விடுதலால் சிறிய துய்யாகிய பஞ்சினை மெல்லக் கடைந்து செய்யும் ஓருபாயத்தாலே அதன்கண்திணிந்த தீயினைக் கோடற்கு அப்பஞ்சினையே அழித்து விடுகின்ற தீக்கடை கோலையே நன்கு பொதுத்தன்மை பொருந்தி வரும்படி ஒப்பாகுவர் என்பதாம்.

விளக்கம்:

திரணி - நொய்ய பொருள். துரும்பு பஞ்சு முதலியன. திரணி உபாயம். தீப்பிறப்பிப்போர் நொய்ய துரும்பு முதலியவற்றைக் குழிப்பாண்டத்திட்டுக் கடையுமொரு செயல்.

இவர் கடையுங்கால் அத்துரும்புக்கு நன்மை செய்வார்போற் கடைகுவர். இங்ஙனம் கடைவதால் துரும்பினுள் நுண்ணிதாக அடங்கியிருக்கும் தீயினை வெளிப்படுப்பர். தீ வெளிப்படவே அத்துரும்பு அழிந்து ஒழியும்.

எனவே, கணிகை மகளிர் தம்மை விரும்பும் காமுகர் வழிநின்று அவர்க்கிதஞ் செய்வார் போன்று செயல்கள் பலவற்றையுஞ் செய்து, அவர் கொண்டுள்ள பொருளனைத்தும் கைக்கொண்டுவிடுவர்; பொருளிழப்பாலே அக்காமுகர் அழிந்துபடுவர்; ஆதலால் கணிகையர் தீக்கடைகோலையே நிகர்ப்பர்.

அரணம் எனும் இலர் - பாதுகாவல் சிறிதும் ஆதல் இலர். அரணம் - பாதுகாவல். எனும் - சிறிதும். திண்பொருள் கோடற்கு என்பதனைப் பின்னுங் கூட்டுக.

கணிகையர் காமுகர்க்குப் பெரிதும் அரணமாவார் போன்றொழுகினும் அங்ஙனம் அரணம் ஆதல் இலர். அவர் அழிவிற்கே காரணம் ஆவர் என்பதாம். தீக்கடைகோலும் கடையுங்கால் அதற்கு அரணமாவது போல் தோன்றி அழிவிற்கே காரணமாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Nov-17, 8:10 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே