தமிழரின் அடையாளம் நிலைநிறுத்தப்படுவது -----பண்பாட்டால் - கவியரங்கம்

தமிழரின் அடையாளம் நிலைநிறுத்தப்படுவது
-----பண்பாட்டால் !!!

தமிழ் வணக்கம் :-

வணங்குகின்றேன் தமிழன்னை வணக்கத்தை உரித்தாக்கி !
குணத்தினிலே சிறந்தவளே குலதெய்வம் நீயன்றோ
பணத்தாலே விலைகொடுத்து பண்பாட்டை வாங்கிடவும்
கணமேதும் முடியாதே காசினியில் அடையாளம் !!!

அவையடக்கம் :-

முற்றத்தின் தலைமையே ! முத்துபேட்டை விருட்சம்நீ !
கற்றிற்ற கலையாவும் காசினியில் காட்டுகின்றீர் !
பெற்றதுவே நிலாமுற்றம் பேராண்மை திறத்தாலே !
உற்றவர்கள் உறவுகளின் உதவும்கை நீயன்றோ !

தலைமை வணக்ககம் :-

மலைக்கோட்டை மாநகரின் மகாராணி வாழியவே !
கலைக்கோட்டை உன்திறமை கவியரங்க நாயகியே !
சிலைக்கோட்டை நிறைந்திட்ட சிகரமான நாமக்கல்
தலைமையாக நிற்கின்றாய் தாரணியும் புகழ்பெறவே !!

கவியரங்கம் :-

தமிழரின் அடையாளம் நிலைநிறுத்தப்படுவது
-----பண்பாட்டால் !!!

செந்தமிழ் நாடெனும் போதினிலே என்று
செப்பினான் அன்றே நம் முண்டாசுக் கவிஞன் .
பாரதியின் கோணத்தில் இன்று பாரதம் இல்லை .
பாழடைந்த கோயிலாய் இன்றைய பாரதம் .

நாளைய தமிழருக்குள் நன்றாய் பேதமைகள் .
ஆங்கிலமும் செந்தமிழையும் ஒன்றாய் ஆக்கினரே .
தீது இதுவென்று எவரேனும் சொல்லிவிட்டால்
திரும்பி அவர் வீடு வரல் இல்லை இல்லை .

மாசற்றத் தமிழை மீட்டுவிடு தமிழா - நீ
காசற்றக் கள்வனாய் இருந்து விடாதே .
வள்ளுவனின் வாக்கிற்கு நிகர் ஏதுமுண்டோ ?
கம்பனின் கற்பனையை கனவிலும் கண்டதுண்டோ ?

ஒளவையின் மொழிதன்னை ஒளடதமாய் எண்ணிடுவோம்
ஆத்திச் சுடியிலே அனைத்தும் அடங்கி விடும் .
வீரமும் விவசாயமும் தமிழரின் இருகண்கள் அன்றோ ?
தமிழினிலே கணினியையும் கற்றிடுவோம் வாரீர் !

நாளைய நம் தமிழ் நன்றாய் நாட்டில் மல்கி
நாளைய தமிழர் வாழ்வில் ஒளி ஏற்றட்டும் .
தமிழும் தமிழரும் பிரிக்க முடியாத உயிருமுடலும் .
தமிழை வாழவைப்போம் ! தமிழராய் வாழ்ந்திடுவோம் ..!!!

பண்பாடு உயர்ந்திடவே பாடுபட்டு நாட்டினையும்
எண்ணங்கள் மேலோங்க எம்மருங்கும் தமிழரென்றே
மண்ணுலகில் வாழ்ந்திடுவோம் வாருங்கள் தமிழர்களே !
விண்ணுலகும் நின்றிடுமே விந்தைஎனச் செப்பிடுமே !!

நன்றி :-

அழகான கவியரங்கம் அனுபவமாய் நிலைத்திடவே
தழைத்திடவே சீராக தரமான என்கருத்தும்
மறுப்பேதும் ஈங்கின்றி மனத்தாலே எடுத்துரைத்தேன் .
வாய்ப்புக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் கோடி கோடி !

நன்றி ! வணக்கம் !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன் ,திருச்சி .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Nov-17, 7:31 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 78

மேலே