மழையே நீ

இரவுகள் கழிந்தன
விடியலை நோக்கி...
கதிரவன் வரவில்லை
புற்க்களின் சோம்பல் முறிக்க...

நிறைமாத கற்பிணியாய்
முகிழன்னை மெல்ல
தூறல் தூவ...
குளிரோடே புலர்ந்தது
விடியல்...

இரவுக்கு விடியலுக்குமான
இடைவெளியில்...
இன்பமாய் உறங்கியபின்னும்
இன்னும் சில கணங்கள்
உறங்கவே சொல்கிறது மனது...

கொல்லையில்
வைத்த முருங்கையில்
காகம் அடைகாத்தது
நியாபகம்.....
பதைப்பதைத்தது நெஞ்சு...
அங்கோ குஞ்சுகளுக்கு
உணவூட்டும் அழகே..
நனைந்ததை மறந்தேன்...

ஈர தரையில்
காலூன்றி நடையிட
அங்கே புற்றீசல்
வானமளக்க
சிறகை விரித்ததழகே...

மரம்,செடியெல்லாம்
பண்டிகைக்கு புதுவண்ணம்
தீட்டப்பட்டு பசுமையாய்
நின்றதழகே....

ஆங்காங்கே
தேங்கிய நீரில்
சிட்டுகள் நீந்திப்பழகும்
அழகே...

மண்ணெல்லாம்
நீர்ப்பருகி
மொட்டை தலையில்
அரைகூந்தலாய்
களைதன்னை வளர்த்திட்டு...

குளம்தன்னில்
மலரில்லா தாமரை
இலையோடே கையேந்தி
மழைத்துளியோடே
விளையாடும் அழகே....

மழையே நீ
வரமென்பதை
உணராதத்தை
உணர்த்திட்டாய்
ஒரேநாளில்...

எழுதியவர் : கருப்பசாமி (5-Nov-17, 8:12 am)
Tanglish : mazhaiyae nee
பார்வை : 276

மேலே