எம் மண்ணின் மொழி

செண்டூருக்கு(சென்னூருக்கு) போனா செம உண்டு.
வரக்குள்ள போக்குள்ள உத உண்டு.

~ என் ஊர் செண்டூருக்கு (செந்தூருக்கு) வழங்கும் பழமொழி.

இந்த பழமொழிக்கு பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது.

செண்டூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர்.
திண்டிவனத்திற்கும் விழுப்புரத்திற்கும் இடையில் உள்ள ஊர்.
திண்டிவனம் (திந்திரிவனம்->புளியங்காடு) வட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் , மயிலம் ஒன்றியத்தில், மயிலம் சட்டமன்ற தொகுதியில், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள ஊராட்சி.

சிறுபாணாற்றுப்படை பாடப்பட்ட ஓய்மானாட்டின் ஆட்சியின் (இன்றைய திண்டிவனம்) கீழ் அமைந்துள்ள ஊர்.

அருகில் உள்ள சங்க இலக்கியங்களில் உள்ள ஊர்கள்
1.திருவக்கரை 2.செஞ்சி
3.நன்மாவிலங்கை(ஓய்மானாடு) 4.கிடங்கில்
5.பெருமுக்கல் 6.மேல் சித்தாமூர்
7.எயிற்பட்டினம் (மரக்காணம்)
8.கீழ்மாவிலங்கை
9.மேல்மாவிலங்கை
10) திருக்கோவலூர்.....

நிறைய ஊர்கள் உள்ளது.ஒரு சில ஊருக்கு கல்வெட்டுகள், பண்பாட்டு அடையாளங்கள் இருக்கிறது.
நானே சில ஊர்களை குறிப்பிட்டிருக்கிறேன்

வரலாறை சொல்லாமல் இழுக்கிறேன்.என்று தானே எண்ணுகிறீர்.இதோ வரலாறு.

சில தசாப்தங்களுக்கு முன்னால்.
அப்பொழுதும் செண்டூர் தேசிய நெடுஞ்சாலை தான்.
வடக்கையும் தெற்கையும் இணைக்கும் முக்கியமான பிரதான சாலை.

இப்பொழுது இருப்பது போல் அப்பொழுது பெரியதாக தார் சாலைகள் கிடையாது.மண் பாதையாகத் தான் பெரிதும் இருந்தது.அதே போல் அதிகம் எல்லோரும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்தே செல்வர்.அப்படி நடந்து செல்பவர்கள் தங்கி சற்று ஓய்வெடுக்க.அந்த காலத்தில் இங்கே ஆட்சி புரிந்த மன்னன் இங்கே ஒரு சத்திரம் கட்டினான்.

இன்றும் அச்சத்திரத்தின் கடகால் (கடைகால் - அஸ்திவாரம்) என் பள்ளிக்கு (அரசு உயர்நிலைப் பள்ளி, செண்டூர்) பின்னால் உள்ளது.
மிகவும் நீண்ட சத்திரம் (ஒரு தெருவின் முனையில் இருந்து இன்னொரு தெரு முனையில் முடிகிறது).அருகிலேயே ஒரு குட்டை உள்ளது.

வடக்கு நோக்கி திண்டிவனம், சென்னை செல்பவர்களாகட்டும், கிழக்கு நோக்கி மயிலம், பாண்டி, தெற்கு நோக்கி விழுப்புரம்,கடலூர்... கன்னியாகுமரி செல்பவர்களாகட்டும்.யாராக இருந்தாலும் அந்த வழியாக அந்த ஊரை (எங்கள் செண்டூரை) கடந்து போகிறவர்கள்.பக்கத்து ஊர்களில் (இரு பக்கமும் இல்லை முப்பக்கம் இல்லை நான்கு பக்கத்திலும்)
செங்கல் சூலைகள் போட்டிருப்பார்கள்.அதில் உன்னால் முடிந்த நான்கு செங்கற்களை எடுத்துக் கொண்டு .வரும் வழியில் செண்டூரில் வைத்து விட்டு செல்ல வேண்டும் என்பது மன்னனின் உத்தரவு.

வடக்கு , தெற்கு என்று இரு பக்கத்திலும் எல்லா ஊர்களிலும், செங்கல் சூலை போட்டிருக்கும் இடங்களில்.

" நில்லுப்பா செண்டூர் தாண்டி தான போற.
செண்டூர்ல சத்திரம் கட்றாங்க. அந்த வழியா போறவங்கலாம் .வழியில கல்லு வாங்கி எடுத்துட்டு போயி வச்சிட்டு போனம்னு மன்னரோட உத்தரவு"

" நான் யார்னு தெரியுமா.என்னையா சுமை தூக்க சொல்ற"ன்னு சொல்றவங்கள .சவுக்கால உதச்சி எடுத்துட்டு போக சொல்வாங்க.வீராப்பு பேசறவங்கள.

அதனால தான்

செண்டூருக்கு போனா செம(சுமை) உண்டு.
வரக்குள்ள போக்குள்ள உத உண்டு.

என்ற பழமொழி பிறந்திருக்கு.

இப்பழமொழி ஒரு காலகட்டத்தின் ஒரு ஊரின் அடையாளம்.
யாருக்கும் இனி இப்பழமொழி அதிகம் தெரியாது.காரணம் யாரும் அடுத்த சந்ததிக்கு சொல்லவில்லை.இப்படித் தான் செல்கிறது வரலாறு, அடையாளம் யாவும்...

நம் வரலாறை காப்போம்...
வாழ்க செந்தமிழ்...

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
செண்டூர்

குறிப்பு :
வரலாறை எழுதுவது கடிது
சொல்வது எளிது
கேட்டதை அப்படியே கொண்டுவர சற்று மிகையாகி விடும்.

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : செண்டூர் (6-Nov-17, 7:38 am)
Tanglish : yem mannin mozhi
பார்வை : 92

மேலே