வாய்க்கு அணி வாய்மை – அணியறுபது 2

நேரிசை வெண்பா

மனத்துக் கணிதூய்மை; வாய்க்கணி வாய்மை;
தனத்துக் கணியே தருமம் – வனத்துக்கு
மாதவர்கள் வாழ்வதணி; மாதவர்க்கு ஞானமே
ஆதர வான அணி. 2 அணியறுபது,

- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளத் தூய்மை மனத்திற்கு அணியாகும்; உண்மை பேசுவதே வாய்க்கு அணியாகும்; தருமம் செய்வதே தனம் வைத்திருக்கும் செல்வர்க்கு அணியாம்; மெய்ஞ்ஞானம் விரும்பும் பெரும் தவசிகளுக்கு வனம் அணியாகும்; அஞ்ஞானியர்க்கு ஞானம் வரப்பெற்றிருப்பதே அணியாகும்.

விளக்கம்:

சத்தியத்தால் வாய் புனிதம் உறுகிறது; தருமத்தால் செல்வம் சிறப்படைகிறது; அரிய தவசிகளால் வனம் வனப்பு மிகுகிறது; தத்துவ ஞானத்தால் அருந்தவர்கள் சிறந்து திகழ்கின்றனர். இத்தகைய நற்குணங்களை மக்கள் அடைந்தால் நாடு செழிப்புறும்.

தூசி தோயாதது தூய்மை எனப்படும். உயிர்க்குக் கண்ணாய் உள்ளது உள்ளம். அதை மாசு படாமல் காத்து வருபவன் மகானாய்த் தேசு மிகுந்து வருகிறான். சித்த சுத்தியால் எல்லா நன்மைகளும் விளைகின்றன.

மனதில் கபடமும், அழுக்கும் படிந்தால் எல்லா நற்குணங்களையும் அது இழந்து விடுகிறது. மனத்தில் அழுக்கு அற்றபோதுதான் மனிதன் மகத்துவம் பெறுகிறான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Nov-17, 8:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 79

மேலே