பழந்தமிழ் வாசிப்பு

நண்பர் நிக்கோலஸ் லூயிஸ் அனுப்பிய கேள்வி:

“இந்த இணைப்பில் இருக்கும் பாடல்கள் படிக்க நன்றாக இருக்கின்றன. ஆனால் எனக்குப் பொருள் விளங்கவில்லை. இவற்றின் பொருள் தெரிந்துகொள்ள நான் என்ன செய்யவேண்டும்?”

அவர் தந்திருந்த இணைப்பு, கம்பரின் ஏர் எழுபது. ஆனால், கேள்வி பொதுவானது என்பதாலும் பலருக்கும் இந்தக் கேள்வி இருப்பதாலும், அவருக்குத் தந்த பதிலை இங்கே எழுதுகிறேன்.

பழந்தமிழ் நூல்களை வாசிப்பது சிரமம் என்பது வெறும் மனத்தடைதான். நிச்சயம் தாண்டிவரக்கூடியது, கொஞ்சம் பயிற்சி தேவை, அவ்வளவுதான்.

குறுந்தொகையையோ தொல்காப்பியத்தையோ ஆழ்வாரையோ நாலடியாரையோ வாசிக்கும்போது நமக்குப் புரியாமலிருக்கக் காரணம் அந்தக் கவிஞர்கள் அல்ல, நாம்தான். தெலுங்குப்பாடலொன்றைக் கேட்கும்போது எனக்கு ஒன்றும் புரியாது, அதற்காக நான் தெலுங்குக் கவிஞரைக் குறைசொல்ல ஏலாதல்லவா? அதுபோல, இந்தத் தமிழ்ப்பாடல்கள் நமக்குப் புரியவில்லை என்றால், அதற்கு இரண்டு காரணங்கள்: நாம் இழந்த சொற்கள், செய்யுள் இலக்கணம்.

தமிழில் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சொற்கள் ஆயிரம் என்றால், பயன்படுத்தாமல் இழந்த சொற்கள் பல்லாயிரம். அவை நமக்கு எவ்விதத்திலும் தினசரிவாழ்க்கையில் பயன்படப்போவதில்லை என்பதால், நாம் அவற்றைத் திரும்பப்பெறப்போவதும் இல்லை. செய்யுள் படிக்கும்போதுதான் இந்தச் சிரமத்தை உணர்வோம்.

செய்யுள்களை எழுதுவதற்குப் பல கட்டுப்பாடுகள் உண்டு, அவற்றுக்கு இணங்கி, வாக்கிய அமைப்புகள் மாறும், இவையும் நிஜவாழ்க்கையில் (அதாவது, பேச்சுவழக்கில்) வராது. உதாரணமாக, ‘நிற்க அதற்குத் தக’ என்று ஒருபோதும் நாம் பேசமாட்டோம், ‘அதற்குத் தக நிற்க’ என்றுதான் சொல்வோம், இங்கே ‘தக’ என்ற சொல்லுக்கு உங்களுக்குப் பொருள் புரிந்தாலும்கூட, ‘நிற்க அதற்குத் தக’ என்பதை மாற்றி ‘அதற்குத் தக நிற்க’ என்று புரிந்துகொள்ளும் நுட்பம் தெரியாவிட்டால், திகைக்கவேண்டியதுதான்.

புலவர்கள் ஏன் அப்படி எழுதுகிறார்கள்? நமக்குப் புரிகிறாற்போல் எழுதக்கூடாதா?

சந்தத்துக்கு/ ஓசைக்கு/ யாப்புக்கு எழுதுவதில் பல சிரமங்கள் உண்டு. அவற்றை விளக்குவது நம் நோக்கமில்லை. சினிமாப்பாட்டில் ‘ஆடுங்கடா என்னச்சுத்தி’ என்று ஒருவர் பாடினால், ‘என்னச்சுத்தி ஆடுங்கடா’ என்று புரிந்துகொண்டு ரசிக்கிறோமல்லவா? அதையே இங்கேயும் செய்தால் போதும்!

இந்த இரண்டு பிரச்னைகளையும் கடந்தால் பழந்தமிழ்ப்பாடல்கள் புரியும், சும்மா, சாதாரணமாகப் புரியாது, குமுதம், விகடன் படிப்பதுபோல் புரியும், தெள்ளத்தெளிவான நீரோடைபோல் புரியும், இதற்கு நான் நேரடிச் சாட்சி: ‘ஒண்ணுமே புரியலை, இதென்ன தெலுங்கா, கன்னடமா?’விலிருந்து, ஐந்து ஆண்டுகளில், ‘உரையெல்லாம் எதுக்கு? பாட்டுல 90% நேரடியாப் புரியுதே!’ என்ற நிலைக்கு நான் வந்துள்ளேன், இதைப் பெருமையாகச் சொல்லவில்லை, நெகிழ்ச்சியோடு சொல்கிறேன், நம் பழந்தமிழ் நூல்களில் எந்தப்பக்கம் தொட்டாலும் பேரின்பம், அதை நேரடியாக ருசிக்கிற பரவசம் சாதாரணமானதல்ல.

உணர்ச்சிவயப்படல் இருக்கட்டும், இப்போது எனக்கு எந்தப் பழம்பாடலும் புரியவில்லை. இதை நான் எளிதாக வாசிக்க என்ன பயிற்சி தேவை?

உணவே மருந்து என்பதுபோல, பாடலேதான் பயிற்சி, உங்களுக்குப்பிடித்த பழம்பாடல்களை நல்ல உரையுடன் வாசிக்கத்தொடங்குங்கள், அந்தப் பயிற்சி போதும்.

அதாவது, அகராதியைப்படித்து இழந்த சொற்களைத் திரும்பப் பெற இயலாது, ஆனால் பாடல்களைப் படிக்கும்போது, ஒவ்வொன்றாக விளங்கும், ஆரம்பத்தில் 20 சொல் கொண்ட பாடலில் 18 சொல் நமக்குப் புரியாது. உரையைப் பார்த்தால்தான் புரியும். ஆனால் கொஞ்சம்கொஞ்சமாக, இந்தப் பதினெட்டு என்ற எண் பதினாறு, பத்து, எட்டு, ஆறு, நான்கு, இரண்டு என்று குறையும், அதற்குமேல் குறையாது

அதேபோல், புலவர்கள் பயன்படுத்தும் வார்த்தைக்கட்டுகளும் நமக்குப் பழக ஆரம்பித்துவிடும். இந்தச் சொல்லை அங்கே வைத்து இதற்குப் பொருள் கொள்ளவேண்டும் என்று உரையாசிரியர்கள் சொல்லித்தருவார்கள்.

ஆக, பழந்தமிழ் நூல்களை அக்கறையோடு தொடர்ந்து வாசித்துவந்தால், பாடலில் 90% தானே புரியும், உரைநூல்களைச் சார்ந்திருக்கும் நிலை கொஞ்சம்கொஞ்சமாக மாறும். எந்தக் கோயிலுக்குப்போனாலும் கல்வெட்டுகளில் உள்ள ஆழ்வார், நால்வர் பாடல்களை வாசித்து மனத்துக்குள் பொருள்சொல்ல ஆரம்பிப்பீர்கள், கண்ணில் படுகிற எல்லாரிடமும் ‘இந்தப் பாட்டு என்ன அழகு பார்த்தியா?’ என்று நெகிழ்வீர்கள், இதெல்லாம் நடந்தே தீரும், சந்தேகமில்லை!

சரி, எங்கே ஆரம்பிக்கலாம்?

ஒவ்வொருவருக்கும் ஆரம்பம் மாறுபடும், நான் குறுந்தொகையில் ஆரம்பித்தேன், நீங்கள் திருக்குறளில் ஆரம்பிக்கலாம், சிலப்பதிகாரத்தில் ஆரம்பிக்கலாம், கம்பன், பெரியாழ்வார், பெரியபுராணம், தேவாரம், ஔவையார்… எங்கே வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், அடுத்து எங்கே செல்வது என்று உங்களுக்கே புரியும், ஐந்தாறு வருடங்கள் வேறெந்தப்பக்கமும் திரும்பாமல் முனைந்தால், உரைநாடா உத்தம வாசகராகலாம்.

ஐந்தாறு வருடமா என்று திகைக்கிறவர்கள், உரைநூல்களைச் சார்ந்தே வாசிக்கலாம், அல்லது, புதுக்கவிதைகள் படிக்கலாம், இதில் தாழ்த்தி, உயர்த்தி சொல்லல் பாவம், எப்படியோ தமிழைப் படித்தால் சரி!

***

என். சொக்கன் …

எழுதியவர் : (12-Nov-17, 6:13 pm)
பார்வை : 152

மேலே