உலகே மாயம்

வண்ண வண்ண வான வில்லே
யார் வரைந்தார் உன்னை வானில்
உன் அழகை ரசித்துக்கொண்டிருக்கையிலே
ஏன் வண்ணமாய் வரைந்த உன்னை
வரைந்தவனே அழித்துவிட்டானோ
நீ காணாமல் போய்விட்டாய் ( நிலையா வானவில்)

உச்சி வெய்யிலிலே பாலை
நிலத்தை கடக்கையிலே-தாகம்
தொண்டையை அடைக்க
கண்ணெதிரே தோன்றியது
ஆங்கு ஓர் நீர்த்திட்டு -தாகம்
தனித்துக்கொள்ள கிட்ட நெருங்க
ஆங்கு மாயமானது அந்நீர்த்திட்டு ...........( கானல் நீர்)


தாவி மிக்க வேகமாய் ஓடிய
வேங்கைப்புலி -தன் முன்னே
பலமடங்கு பெரிய வேங்கை
ஓடியதைக் கண்டு ,அதைத் துரத்தி
ஓடிற்றாம் -பாவம் ஓடி
ஆங்கு ஓர் குகைவாயில்
தலை முட்ட கண்ணிருள, நோக்கிற்றாம்
முன்னால் சென்ற வேங்கை
அங்கிப்போதில்லாததை! .........................(நிழல்)

,
இப்படித்தான் வானவில்லைபோல,
அந்த கானல் நீரைப்போல
அந்த வேங்கைக் கண்ட வேங்கையின்
நிழலைப்போல, நாம் இன்பம் என்று
நாடி செல்லும் இன்பங்கள் பலவும்-
நிழல் நிஜமாவதில்லை ; கானல் நீராகாது
வானில் நிரந்தரமாய் நிற்பதில்லை
அந்த வண்ண வண்ண வானவில்லும்!
மாயை சூழ்ந்த உலகில் -அந்த மாமாயன்
ஒருவன்தான் நிஜம், உண்மை என்று
தெளிந்தால் மனமே பொன்னும்,பொருளும்
புனைபூங்கோதையும் வெறும் மாயை
என்பது தெரியும் தெரிந்தால் இன்னும்
என்ன வேண்டும் இவ்வாழ்விற்கு!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Nov-17, 5:55 pm)
Tanglish : ulake maayam
பார்வை : 125

மேலே