என்செய்தாங்கு என்பெறினும் ஆகாதார்க்கு ஆகுவது இல் - பழமொழி நானூறு 127

இன்னிசை வெண்பா

ஆகும் சமயத்தார்க்(கு) ஆள்வினையும் வேண்டாவாம்
போகும் பொறியார் புரிவும் பயனின்றே
ஏகல் மலைநாட! என்செய்தாங் கென்பெறினும்
ஆகாதார்க்(கு) ஆகுவது இல். 127 பழமொழி நானூறு

பொருளுரை:

உயர்ச்சியையுடைய மலை நாடனே! செல்வம் ஆக்கும் ஆகூழ் வந்தெய்துங் காலம் நெருங்கியவர்களுக்கு செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை;

செல்வம் போக்கும் போகூழ் வந்தெய்துங்காலம் நெருங்கியவர்களுக்கு அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை;

எத்தகைய முயற்சியைச் செய்து, எத்தகைய துணையைப் பெற்றாராயினும் செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு ஆவதொன்றில்லை.

கருத்து:

ஆகூழ் நெருங்கியார்க்கும் முயற்சி வேண்டா; போகூழ் நெருங்கியார்க்கும் முயற்சி வேண்டா; போகூழ் நெருங்காதார்க்கும் முயற்சி வேண்டா; ஆகூழ் நெருங்காதார்க்கும் முயற்சி வேண்டா.

விளக்கம்:

'போகும் பொறியார் புரிவும்' என்றது போகூழ் நெருங்கப்பெறாதார் முயற்சியும் என்பது கொள்ளப்பட்டது. தானே முடிதலின் ஆள்வினை வேண்டா என்றார்.

போகூழ் காலம் நெருங்கப் பெற்றாரும், பெறாதாரும் எத்துணை முயற்சி செய்யினும் நிலை நிறுத்துதலும் நீக்குதலும் ஆகாமையின் புரிவும் பயனின்றே என்றார்.

ஆகுங்காலம் நெருங்கப்பெறாதார் துணைகொண்டு செய்யும் முயற்சிகளாலும் பயனின்றென்பார், 'ஆகுவது இல்' என்றார்.

ஊழ் நன்மை தீமைகளை ஊட்டுவது ஒவ்வொருவனது செயல்வாயிலாகவே யெனினும் காலம் மிக நெருங்கிய வழி அவனது செயலை அல்லது முயற்சியை எதிர்பாராது பிறரது செயல் வாயிலாக ஊட்டும் என்பதாம்.

ஆகவே ஆகூழ் மிக நெருங்கப் பெற்றானுக்கு முயற்சியால் வருந் துன்பமும் இன்றி வருமென்பார், ஆள்வினையும் வேண்டா என்றார்.

பொறி என்பது அறிவு. அறிவான் ஆயது வினை. உடம்பு செய்த வினைக்குக் காரியமாயும் மேல்வரும் பிறப்புக்களுக்குரிய வினைகளை இருந்து ஆற்றுதலின் கர்த்தாவுமாயும் இருத்தல்போல ஊழ், வினையது காரியமாயும், அதனை உடையானிடத்துச் செலுத்தும் தொழிலில் கர்த்தாவுமாயும் இருப்பது. வினையும் ஊழும் கருத்தா காரிய சம்பந்தம் உடையன. பொறி வினைக்காகிப் பின்னர் ஊழுக்காகி நிற்பது இருமடியாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Nov-17, 10:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 100
மேலே