நம் காதலின் பிறப்பிடம் எதுவோ

மோக கண்கள்
மோதி கொண்ட நேரம்
உதித்ததோ நம் காதல்.....

அம்மாவாசை நிழலில் ஒழிந்த
திங்களை தேடும் பொழுது
மலர்ந்ததோ நம் காதல்....

பவள வாய் திறந்து
மதுகரம் பேசிய நொடிகளில்
வெளிப்பட்டதோ நம் காதல்....

சிவந்த அலகில் கிளிகள் - தன்
சிறகை அழகுடன் வருடிய கணம்
சிறகு விரித்ததோ நம் காதல்...

வற்றிய குளம் கண்ட கொக்கு போல்
உன் பிரிவு என்னை வாட்டிய போது
தோன்றியதோ நம் காதல்...

என் கவிதை வரிகளை
நீ வாசிக்க கேட்ட தருணம்
மனம் சேர்ந்ததோ நம் காதல்....

முழுமதி ஒளியில்
முகம் ரெண்டும் உரசிய போது
பூத்ததோ நம் காதல்...

புற்கள் முளைக்கும் சந்தம் போல்
நம் இமைகள் சந்தம் பேசி
முளைத்ததோ நம் காதல்...

கிளையிடை தென்றல்
தோல் வருடிய மென்மையில்
இசைத்ததோ நம் காதல்...

மேகத்திரள் வீசிய பனித்துளி
மண் வந்து விழும் வைகறையில்
கனிந்ததோ நம் காதல்...

சண்டைகள் பல செய்து
உருவாகிய மௌன இசையில்
காதோரம் வந்ததோ நம் காதல்...

பிறப்பிடம் எதுவாகினும்
இருப்பிடம் நம் மனமே
மாறாத நம் காதல்...

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (15-Nov-17, 10:58 am)
பார்வை : 121

மேலே