யார்க்கும் பழியாமை யேஅணியாம் பண்பு – அணியறுபது 10

நேரிசை வெண்பா

குடிகளைக் காத்தருளல் கோனணி கோன்சொற்
படிநடத்தல் அன்னார் பணியாம் – மடியில்
இழியாமை மக்கட் கினியவணி யார்க்கும்
பழியாமை யேஅணியாம் பண்பு. 10 அணியறுபது

- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

குடிமக்களை இனிது பாதுகாத்தல் ஆட்சியிலிருக்கும் தலைவனுக்கு அழகு.

நல்லாட்சி செய்யும் தலைவன் சொல்லியபடி நடத்தல் அம்மக்களுக்கு அழகு;

சோம்பலினால் முயற்சியின்றி இழிவடைந்து விடாமல் முயன்று உழைத்து முன்னேறுதல் மக்களுக்கு இனிமையும் அழகுமாகும்;

யாரையும் யாதும் பழியாத பண்பு எல்லோர்க்கும் எப்பொழுதும் அழகாகும்.

தன் நாட்டிலுள்ள மக்கள் சுகமாக வாழ்ந்துவர முயன்று நல்லாட்சி செய்து திட்டங்கள் தீட்டுவதே மன்னருக்கு இணையாக அரசியல் செய்யும் தலைவனுக்கு அழகாகும். அவன் ஆற்றிவரும் தொண்டினால் அவனும் ஏற்றம் பெறுகிறான். குடிமக்களின் மகிழ்ச்சியே தலைவனுக்கு மகிழ்ச்சி.

சோம்பல் மனிதரின் நல்வாழ்வைக் குலைத்து விடும்; சோம்பலில்லாத முயற்சி எல்லா உயர்வினையும் இயல்பாகக் கொடுத்தருளும்; மடி – உள்ளம் மடிந்து ஊக்கம் ஒடிந்துள்ள ஊனநிலை; இந்த ஈனம் இல்லாதவர் மான மனிதராய் மாண்பு சுரந்து மகிமையுறுகின்றனர்; ஆதலால், மடியின்மை மனிதர்க்கு இனிய அணியென அமைந்தது.

பிறரைப் பழித்துப் பேசுவது பெரிய பிழை; பழி கூறுபவர் எவ்வழியும் இழிவே அடைகின்றனர்; யாரையும் பழியாத விழுமிய மேன்மையே ஒரு மனிதன் உயர்ந்த பெருந்தகையாளன் என்பதற்குச் சிறந்த அடையாளமாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Nov-17, 8:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 81

மேலே