திகட்ட திகட்ட தண்ணீர் - தென்காசி பயணம்

இதே போன்ற, ஒரு சனிக்கிழமை காலையில்தான், பொதிகை விரைவு ரயிலில் சென்று இறங்கினோம், தென்காசிக்கு. அலுவலக நண்பரின் திருமணம். கிட்டதட்ட, இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டது. நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே பார்த்திபன், டீமுக்கு சொல்லிவிட, பேட்ச் பை பேட்சாக முன்பதிவு செய்திருந்தார்கள். அதுவே, ஒரு தனி ப்ராஜக்ட் போன்றுதான் இருந்தது.

திருமணம் ஜனவரி 26. அதற்கு முன் இரண்டுதினங்கள், சரியாக வாரயிறுதி. குடும்பம்,குட்டி என்று கிட்டதட்ட 35 பேர், எஸ் 6 பெட்டி வாசலில் குழுமியிருந்தோம். ஒருசிலருக்கு மட்டும் எஸ் 10. ஆரம்பத்தில், 'ஹாய் ஹலோ' என்று நலம் விசாரிப்புகள், பள்ளிக்கூட விபர பரிமாற்ற‌ங்கள்... 'என்ன சாப்பாடு', 'தண்ணி வாங்கணுமா' என்ற கவனிப்புகள்... ரயில் கிளம்ப, கொஞ்சம் கொஞ்சமாக பனிக்கட்டி விலக ஆரம்பித்தது.

அடுத்தநாள் காலையில், மாப்பிள்ளையும் குடும்பமும் ரயில் நிலையத்துக்கு வந்து வரவேற்க, தென்காசி எங்களை மொத்தமாக வாரி அள்ளிக்கொண்டது. அங்கு தங்கி யிருந்தது, மொத்தமே இரண்டு நாட்களே என்றாலும், ஏதோ பலகாலமாக அங்கேயே வாழ்ந்தது போன்ற உணர்வே ஏற்பட்டது. கல்லூரிகாலத்துக்கே சென்று மீண்டு வந்தது போல! நண்பர்களோடு செல்லும் பயணத்துக் கெல்லாம் இந்த உணர்வு வந்துவிடுவது,ஆச்சரியம்தான். இதே போன்று, இரண்டு வருடங்களுக்கு முன் சுபாஷின் திருமணத்துக்காக ராய்ச்சூர் மற்றும் ஹைதராபாத் சென்றது மனதிலேயே நிற்கிறது!

கைக்குழந்தை, குட்டிகளோடு இருந்தவர்கள், சற்று ஓய்வெடுக்க, தலை யணைக்கும், பாபநாசத்துக்கும் செல்ல ஒரு குழு கிளம்பியது. அந்த 'அடங்காத குழு'வில் நானும் பப்புவும் இருந்தோமென்று சொல்லவும் வேண்டுமா? 'சரி, எப்படின்னாலும் குளிக்கதானே போறோம், எதுக்கு ரூமிலே குளிச்சு, தண்ணியை வேற வீணாக்கிக்கிட்டு' என்று மாற்றுடையை கையில் சுருட்டிக்கொண்டோம்.

'குளிச்சுட்டு வந்தா பசிக்கும், அதனால, அதுக்கு முன்னாடி லைட்டா சாப்பிடலாம்' என்று ஒருவருக்கு பல்பு எரிய, மொத்த குழுவுக்கும் அதே பல்பு எரிந்தது. ஓட்டுநரிடம் சொன்னதும், 'சூப்பர் ஓட்டல் ஒன்னு இருக்குங்க...போற வழியிலே, விட்டீங்கன்னு நாம போற வழியிலே வேற எங்கேயும் இல்லே' என்று ஒரு இடத்தில் நிறுத்தினார்.

பொட்டல்புதூர். வெஜ், நான் வெஜ் உணவகம். மட்டன்/சிக்கன் பிரியாணி, மட்டன் வறுவல், சுக்கா, மீன் வறுவல் ஆம்லேட், ஃபுல் மீல்ஸ், பரோட்டா,தயிர்,மோர்.....உணவு ஒரு பக்கம் என்றால், 'பரோட்டா வேணுமா, கொத்துபரோட்டா வேணுமா? இன்னொரு ஆம்லேட்? பாப்பாக்கு பிரியாணி?' என்று அவர்களது உபசரிப்பு மறுபக்கம்....ஆகா! என்ன ஒரு விருந்தோம்பல்! அங்கேயே சில ஆர்வக்கோளாறுகள் உணவை படமெடுக்க துவங்க, அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. மனமும், வயிறும் குளிர்ந்து, அவ்விடம் நீங்கி, சிலபல வாழைப்பழங்கள், புளிப்பு மிட்டாய்கள், லாலிபாப் சகிதம் வியாபாரத்தை முடித்துக்கொண்டு சென்ற இடம், தலையணை.



'இது அருவியல்ல, ஆறு மற்றும் அணை' என்பதை உணர்ந்துக்கொண்ட சில ஜீவன்கள், ' தண்ணின்னா கொட்டணும்...நேரா அருவிக்குத்தான்..எட்றா வண்டிய!' என்று அருவாள் பார்ட்டிகளாக மாறத்துவங்கினர். ஓட்டுநரது, 'இதுக்குமேலேல்லாம் இந்த வண்டி போகாதுங்க என்ற பருப்பெல்லாம் வேகவில்லை. அடுத்த ஸ்டாப் பாபநாசம்(அகஸ்தியர்?) அருவி. கொட்டும் தண்ணீரை பார்த்ததும், கர்ணனின் கவசகுண்டலம் போல கழுத்தில் மாட்டியிருந்த டிஎஸ்எல்ஆர் காமிராவை கழற்றி பெஞ்சின் மீது வைத்துவிட்டு, 'மச்சி டீ சொல்லேன்' ரேஞ்சின் 'மச்சி நீ பார்த்துக்கோ....தோ வந்துர்றேன்' என்று உடமைகளை துறந்து அருவியை நோக்கி பாய்ந்தனர். நாங்கள், பெண்கள் பக்கம் ஒதுங்கினோம்.



அது எப்படிதான் அருவிகளுக்கென்று ஒரு தனி கடிகாரம் இருக்கிறதோ தெரியவில்லை.இன்டர்ஸ்டெல்லரின் மில்லர் ப்ளானட் போல! அருவிக்குள் இருக்கும்போது என்னவோ, இப்போதுதான் வந்ததுபோல தோன்றுகிறது. வெளியேறி சென்றபோதுதான், ஒன்றரைமணி நேரம் ஆடியிருக்கிறோம் என்பதே புரிகிறது. 'ஆத்திலேயும், தண்ணியிலேதானே ஆடப்போறோம்' என்று உடைமாற்ற சோம்பல்பட்டு, ஈரத்துணிகளோடு அடுத்த‌ ஸ்டாப்.... தலையணை! ஆகா...தண்ணீர்...தண்ணீர்...தண்ணீர்! திகட்ட திகட்ட தண்ணீர்!

கொட்டும் அருவியிலேயே மனமும் உடலும் குளிர்ந்து போனது. தலையணையின் தளும்பிப்பாயும் தண்ணீரைப் பார்த்ததுமே, எல்லா கவலைகளும், பாரங்களும் கரைந்துபோயின. எருமை மாடுகள் போல, கிட்டதட்ட இரண்டரை அல்லது மூன்று மணிநேரம் ஊறிக்கிடந்தோம். நிமிர்ந்து பார்த்தால், பின்னால் பசுமையான மலைமுகடுகள். அதன் உச்சியில் சூரியன். மலையின் அடிவாரத்தில் அணைத்தண்ணீர்...நிரம்பிய நீர், சுவரைத்தாண்டி அருவியாக கொட்டும் நீரின் சத்தம்...கவலைகளை மறந்து சிரித்த கணங்கள் அவை!




அணையின் தடுப்பை மீறிப்பாயும் கட்டுக்கடங்காத நீரின் அழுத்தம் நம்மை அழுத்த, குதூகலத்துடன் கத்திக்கொண்டே, பிடிப்புக்காக நீருக்குள்ளேயே படிக்கட்டுகளை தேடிப் பிடித்துக்கொண்டு நின்றபோது....மனதின் எல்லா கசடுகளும், கவலைகளும், எதிர்கால குழப்பங்களும் காணாமலேபோனது!
அணையிலிருந்து நீர் தளும்பி வழியும் சுவரில் தலையை குப்புற வைத்து, தண்ணீர் நம் தலைவழியே கடந்து செல்லும்போது உண்டாகும் ஒலியில் மூச்சு முட்டிப்போனோம்.

தளும்பி வழியும் தண்ணீரை, எங்கள் மேலேயே அங்கியை போல் வழிய விட்டுக்கொண்டோம். சூரியன் மறையும் வரை அலுக்காமல் அங்கேயே ஆட்டம்.... செல்ஃபிகள்... ஃபோட்டோக்கள்...பப்புவுக்கு இனிய அனுபவம்.ஆரம்பத்தில் பயந்தாலும், பின்னர் தண்ணீரைவிட்டு வரவே இல்லை. ஜூரம் வந்து அடுத்தநாள், அத்திரி மலையேற்றம் தடைப்பட்டுவிடுமோ என்ற பயம் எனக்கு.

ஈர உடையுடன், நேராக பாபநாச சுவாமிகள் கோயில். முதன்முறையாக, கோயிலினுள் தமிழப்பாடல்கள் பாடி தீபாராதனை காட்ட, அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தோம். சாயங்காலம் ஆறு மணி பூஜையோ என்னவோ சொன்னார்கள்....ஒருவர் தலைமுதல் தோள்பட்டை வரை ஒரே ருத்ராட்சை மாலையாக போட்டுக்கொண்டு ஒவ்வொரு சன்னதியாக் அமர்ந்து தமிழில் பாடல்கள்(குனித்த புருவமும்?) பாட, தீபாராதனை நடக்கிறது.



இருட்டதுவங்க, மீண்டும் விடுதிக்கு பயணம். அங்கே ஒரு நொடியைக் கூட வீணாக்காமல், உடனே தயாராக, அடுத்து சென்றது, காசி விஸ்வநாதர் கோயில். கோபுரம் விண்ணை முட்டி நிற்க, உடனே செல்ஃபிக்கள்... செல்ஃபிக்கள் பின்னர் குருப்பிகளாக....

கோயிலில், பக்திமான்கள் பூஜைக்கு செல்ல, நானும் பப்புவும் சங்கீதத் தூண்களை ஆராயத்துவங்கினோம். எங்கள் ஆர்வத்தால் கவரப்பெற்ற தீபங்கள் விற்பவர், எங்களை விசாரித்தார். 'இந்த ஊர்க்காரங்களுக்கே தெரியாது இதெல்லாம்' என்று சொன்னப்படி தூண்களிலிருந்து ஸ்வரங்களை வரவழைத்தார். இந்த கோயிலின் முகப்பிலிருக்கும், ஆளுயர சிலைகள் அற்புதம்.

புளியோதரையும், லட்டுவும், அதிரசமும் வாங்கி அங்கேயே குழுவாக அமர்ந்து சிற்றுண்டியை முடித்தோம். வெளியில் வந்து அடுத்தநாள் மலையேற்றத்துக்காக பழங்களை வாங்கினோம். ஒரு மூலையில் மறைந்திருந்த 'லாலா புராதான மிட்டாய்க்கடை'யில் அல்வாவை காக்கைகள் போல பகிர்ந்துண்டு ருசித்தோம். அருகிலிருந்த உணவகத்தில் நுழைந்து இட்லியும், பரோட்டாவும், பனங்கல்கண்டு போட்ட‌ மிளகுப்பாலும் அருந்தினோம்.

ஏற்கெனவே, அத்திரிக்கு இரண்டுமுறை சென்று வந்திருந்த ரகுவை இப்போது 'குரு'வாக்கியிருந்தோம். அவரும், குருவாகவே மாறி, மலையேற வேண்டுமானால் ஆறு மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கட்டளை யிட்டிருந்தார். 'தொல்லை விட்டுச்சுன்னு எங்களை விட்டுட்டு போய்டாதீங்கய்யா...அஞ்சு மணிக்கு எழுந்ததும், மிஸ்ட் கால் கொடுத்து எங்களையும் எழுப்பி விட்டுடுங்க' என்று பொறுப்பளித்துவிட்டு உறங்கினோம்.

கனவிலெல்லாம், தண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது.... மேலே மேலே வந்து அழுத்தியது! முதுகில், தோள்பட்டையிலெல்லாம் படபடவென்றும் தொப் தொப்பென்றும் விழுந்தது.உறக்கத்திலேயே அருவி மாற்றி அருவியாக காடுகளுக்குள் நாங்களும் பயணித்தோம். அணையின் கற்படிக்கட்டுகளில் , நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மூச்சடைத்துப்போய் 'ஹோ' வென கத்திக்கொண்டிருந்தோம். நீரைக் கிழித்து, மாலையாக இருதோள் களிலும் போட்டுக் கொண்டு மலையடிவாரத்தில் நின்றுக் கொண்டிருந்தோம்.



குறிப்பு: முதல்நாள் குற்றாலம், அடுத்தநாள் முஸ்தபா இல்லத்திருமணம் என்றுதான் திட்டம். பாதிவழியிலேயே, மலையேறுவதற்கான திடீர் குழு உருவாகி, எங்களையும் இழுத்துப்போட்டுக்கொண்ட‌தில், தனியாக வர இயலவில்லை. தம்பி முஸ்தபா மன்னிக்கவும். ஆனாலும், உங்கள் பெருந்தன்மை ம்ஹூம்!! சான்சே இல்லை! வந்திருந்தால், ப்ளஸ் மக்களையும் சந்தித்திருக்கலாம்.

தங்கள் தம்பிக்கும், அவரது மனைவிக்கும் திருமண வாழ்த்துகள்! அம்பா சமுத்திரத்தின் தேவதையைக் காண இன்னொருமுறை வருகிறோம் :‍)Posted by சந்தனமுல்லை at 9:16 AM
:
கோமதி அரசு said...
அருவிக்குள் இருக்கும்போது என்னவோ, இப்போதுதான் வந்ததுபோல தோன்றுகிறது. வெளியேறி சென்றபோதுதான், ஒன்றரைமணி நேரம் ஆடியிருக்கிறோம் என்பதே புரிகிறது. //

நேரம் காலம் தெரியாது அருவி குளியலின் போது.

பயண அனுபவம் மிக அருமை.
குழந்தை பப்பு நலமா முல்லை?
இப்போது என்ன படிக்கிறாள்?

9:31 AM
Mahi_Granny said...
நிறைய இழந்தது போல உணர்கிறேன். எனக்கு மிகவும் அருகில் உள்ள ஊரைக் கூட பார்த்ததில்லை. பயணக் கட்டுரை அருமை முல்லை.


2:36 AM

எழுதியவர் : (24-Nov-17, 5:53 pm)
பார்வை : 131

மேலே