நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-01

.....நெஞ்சோடு கலந்திடு.....

அத்தியாயம் : 01

உன் காதல் மறுத்த
வேளையிலும் என்னோடு
நீ இருந்தாய்...
இன்று என் காதல்
சொல்லக்
காத்திருக்கிறேன்...
எங்கே நீயும் ஒளிந்து
கொண்டாய்....??


நேரம் ஐந்து மணியையும் கடந்து வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது...ஆனால் இப்போதும் அவன் வருவதாகத் தெரியவில்லை...எப்போதுமே அவன்தான் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பான்...ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக நான் அவனிற்காய் காத்துக் கொண்டிருக்கிறேன்...

அதுவும் அவனிடத்தில் என் காதலைச் சொல்வதற்காய் காத்துக் கொண்டிருக்கிறேன்...ஏழு வருடங்களாய் அவனை ரொம்பத்தான் அலையவிட்டுவிட்டேன் போலும்...அதற்குத்தான் இப்போது சேர்த்து வைத்துப் பழி வாங்குகிறான்...

அவனது இருபத்தியொராவது வயதில் என்னிடத்தில் அவன் காதலைச் சொல்லியிருந்தான்...அப்போது எனக்கு பதினெட்டு வயதுதான் ஆகியிருந்தது...பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறக்கும் பருவமது...அவனது காதலுக்குள் கைதாகிட மனம் துடித்தாலும்,அந்த வயதில் காதலையும் என் கனவுகளையும் போட்டுக் குழப்பிக் கொள்ள நான் விரும்பவில்லை...

அதனால் அப்போது அவனது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை...ஆனால் அவனுக்குத் தெரியும் நான் அவனைக் காதலிக்கிறேன் என்று...அது உண்மைதான் அவனை எனக்கு மிகவும் பிடிக்கும்...என் வாழ்க்கையின் முழுப் பகுதியுமே அவனைச் சுற்றியதாகவே இருந்திருக்கிறது...

மழலை வயதில் அவனது பிஞ்சுக் கைகளோடு என் பிஞ்சு விரல்கள் விளையாடிய போது உருவான நட்பு,பருவமெய்தி பாவாடை தாவணி அணிந்து அவனை நிமிர்ந்து பார்க்க முடியாது திணறிய போது அதற்கும் மேலான நேசத்தை எனக்குள் அறிமுகம் செய்து வைத்தது...

அன்றுதான் நானும் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொண்டேன்,அவன் மேல் நான் கொண்டிருப்பது நட்பு மட்டுமல்ல,அதனுடன் இணைந்த காதலுமென்று...ஆனாலும் அவனிடத்தில் என் காதலை நான் காட்டிக் கொண்டதில்லை...

அவனும் என் காதலைக் கண்டு கொண்டதாய் என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டதில்லை...என்னிடம் காதல் சொல்லி நான் மறுத்த போது என்ன சொன்னானோ,அதை இந்த ஏழு வருடங்களாக எனக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறான்...அதனாலேயே அவனை இன்னும் இன்னும் காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது...

இதை என் மனம் நினைத்த அதே நேரத்தில் அவன் காதல் சொல்லிய அந்த அழகான தருணம் என் கண்முன்னே ஊஞ்சலாடத் தொடங்கியது...

"அன்று எனக்கான தனியார் வகுப்புகள் முடிந்து,நான் மட்டும் தனியாக துவிச்சக்கர வண்டியில் கொட்டும் மழையில் நனைந்தவாறே வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்...வழமையாக என்னோடு வரும் நண்பியும் அன்று வராததால் அந்த ஒடுங்கிய பாதையில் நான் மட்டுமே தனித்துச் சென்று கொண்டிருந்தேன்..."

"மழைநாள் என்பதால் கொஞ்சம் இருள் மயமாகவே இருந்தது...ஆனாலும் எந்தப் பயமும் இல்லாமல் பாடலை வாயில் முணுமுணுத்துக் கொண்டே சென்று கொண்டிருந்த நான் எனை மறித்து அவன் வந்து நின்ற தோரணையில் கொஞ்சம் பயந்துதான் போனேன்...ஆனால் அந்தப் பயமும் அவன் முகத்தினைக் காணும் வரையில் மட்டும்தான்...அவனென்று அறிந்ததும் பயமெல்லாம் தூர தேசத்திற்கு பயணமாகிவிட்டது..."

"டேய் வருண்,இப்படித்தான் பயமுறுத்துற மாதிரி வந்து குதிப்பியாடா...??நான் யாரோன்னு நினைச்சு பயந்தே போயிட்டேன் போ..."

"பின்ன ஐயாவோட என்ட்ரி சும்மா அதிரடியா இருக்க வேண்டாமா...??..என்ன நீ மட்டும் வாற....எங்க உன்னோடயே எப்பயும் ஒருத்தி ஒட்டிட்டு திரிவாளே,அவள் எங்க...?"

"அவள் இன்னைக்கு வரல...அவள் மட்டும் வந்திருந்தால் நீ பண்ண வேலைக்கு உன்னைத் தூக்கிப் போட்டு மிதிச்சிருப்பாள்...."

"ஆமா அவள் மிதிக்கும் வரைக்கும் நாங்க கையைக் கட்டிட்டு நிப்போமாக்கும்...ஒரு கை பார்த்திட மாட்டம்..."என்றவாறே இல்லாத மீசையை முறுக்கிக் கொண்டான் அவன்...

அதைக் கண்டு நன்றாகவே வாய்விட்டுச் சிரித்த நான்,

"பஞ்சு டயலோக் பேசுற மூஞ்சிய பாரு....."

"இதான் உங்க ஊரில பஞ்சா...??.."

"அப்படி சொல்லித்தானே நீ ஊரை ஏமாத்திட்டு இருக்காய்...??..."

" ரொம்பத்தான் போடி..."

"நீ இப்படி மலை மாதிரி நின்னா நாங்க எங்க போறதாம்..."என்றவாறே அவனது சைக்கிளை இடித்துத் தள்ளிய நான் என் சைக்கிளில் வேகமெடுத்துக் கிளம்பினேன்...

அவனும் என்னை அழைத்தவாறே துரத்திக் கொண்டே வந்தான்...


நினைவலைகள் தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (26-Nov-17, 1:51 pm)
பார்வை : 546

மேலே