நிசப்தத்தை விழுங்கிய இரவுகள் - 03
ஒரு நீண்ட பயணத்தில்
நான் தொலைந்து போகிறேன்
இருள் சூழ்ந்த கிரகத்தில்
மிதந்து போகிறேன்
குருதியின் நடுவில்
குடியிருக்கும் உடலைச்சுற்றி
கூடியிருக்கும் மனிதர்கள்
மனிதத்தின் அடையாளமாய்
மரணத்தை வசவுகிறார்கள்..!
சிதறி கிடக்கும் சிரசைக்கண்டு
வழிப்பயணத்தில் இணைந்தவர்களே
வலிகொண்டு துடிக்கிறார்கள்
வாழ்க்கைப்பயணத்தில் இணைந்தவளே!
வந்துவிடாதே இங்கே!
பாதகி பாதை பார்த்து காத்திருப்பாளே..
பாசம் சேர்த்து சமைத்திருப்பாளே..
பாவியெனக்கு சாவு வருமென்றா
நினைத்திருப்பாள்?
அவசரமாய் வந்தவனுக்கு
கவசத்தின் அவசியம்
அறியாமல் போனதினால்
காலதேவனுக்கும் வசதியாய்
போயிருக்கக்கூடும்..!
நான்குவரி நோட்டும்,
நான்கு முழம் மல்லைகைப்பூவும்
தம் வசமிழந்து வாசமிழந்து கொண்டிருப்பதை
அவசர ஊர்தியை அழைக்குமிவர்கள்
கவனித்திருக்க வாய்ப்பில்லை..!