பண்புடைமை - கலி விருத்தம்

நகைநனி தீது துனிநன்றி யார்க்கும்
பகைநனி தீது பணிந்தீ யாரோடும்
மிகைமிகு பொருளென்(று) இறத்தல் இலரே
வகைமிகு வானுல(கு) எய்திவாழ் பவரே. 64 வளையாபதி

பொருளுரை:

எத்தகையோர்க்கும் மிகையாய நகைப்பும் தீங்கே பயப்பதாகும்; பிணக்கும், சிறுபகையும் கூட பெரும்பகையுமாகும்;

ஆதலால், பல்வேறு வகையானும் மிக்க மேனிலை யுலகத்தை எய்தி வாழுந் தகுதியுடைய மேன்மக்கள் தம் பகைவரிடத்தும் வரம்பு கடந்தொழுகும் ஒழுக்கம் மிகையாம்: மிகவும் தீமை பயப்பதாம் என்றறிந்து வரம்பு கடந்து ஒழுகுதலிலர்.

துனி: பிணக்கு, ஊடல், ஒரு வித சண்டை, சிறுபகை

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. 1306 புலவி

நீண்ட பிணக்கும், ஊடலும் இல்லையெனில் காமம் முதிர்ந்த கனியும், இளம் பிஞ்சையும் போல நுகர இனிமையாய் இருக்காது.

விளக்கம்:

நனி நகை தீது எனவும், மிகுபொருள் மிகைநனி தீது என்றும் மாறிக் கூட்டுக. நன்று - பெரிது பணிந் தீயார் – பணியாதார், பகைவர், இறத்தல் - வரம்பு கடந்தொழுகுதல்.

மிகையாயவழி நகையும் தீதாம், துனியே பெரும்பகையுமாம். ஆதலால் சான்றோர் பகைவரிடமும் வரம்பு கடந்து ஒழுகுதலிலர். யாவரிடத்தும் அடக்கமாகவே ஒழுகுவர் என்பது கருத்து.

மிகை - அடங்காமை. அஃதாவது செருக்குடைமை காரணமாக எச்செயலினும் மிகுதிதோன்றச் செய்தல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-17, 8:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 122

சிறந்த கட்டுரைகள்

மேலே