நல்குரவு – கலி விருத்தம்

பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது
கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார். 65 வளையாபதி

பொருளுரை:

வறிய நிலத்தில் வாழ்ந்து கைப்பொருள் இல்லா வறியரான பொழுது மனைவியரும் நன்கு மதிப்பதிலர்;

நெருங்கிய சுற்றத்தாரும் சிறிதும் மதியார்;

உறுவது சீர்தூக்கி உபாயமாகக் கேண்மை கொண்டுள்ள நண்பர் தாமும் குறிப்பாலுணர்ந்து கேண்மையிற் குறைந்து அயலாராகுவர்;

தம்முடைய மக்கள் தாமும் ஒருசேர வேறுபட்டகன்று போவர் என்பதாம்.

விளக்கம்:

இவ்வுலகில் வறுமை வந்தபோது மனைவிமாரும் மதியார்; மக்களுக்கு கைவிட்டுப் போவார்; சுற்றத்தார் மதியார்; நண்பரும் நட்பு நாரற்றுத்தீர்வர். வறுமை பெரிதும் துன்பம் தரவல்லதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Nov-17, 11:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

சிறந்த கட்டுரைகள்

மேலே