தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் – பத்மினி நடித்து 1960 ல் வெளிவந்த ’தெய்வப்பிறவி’ என்ற படத்திற்காக கவிஞர் தஞ்சை என்.ராமையாதாஸ் இயற்றி, கே.வி.மஹாதேவன் இசையமைப்பில், சிவாஜிகணேசனுக்காக சிதம்பரம் எஸ்.ஜெயராமன் பாடிய கருத்தான ஒரு அருமையான பாடல் ’தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்’.

வாழ்க்கையில் ஒவ்வொருவர்க்கும் பிறர் மேல் நம்பிக்கை வேண்டும் என்றும், சந்தேகப்படலாகாது என்றும் கவிஞர் கூறுகிறார். சிலர் தன்னையே நம்புவதில்லை. மனிதாபிமானம் மறைந்து, சந்தேகம் வளர்ந்தால் அறிவு கெடும், விபரீதச் செயல்களை உருவாக்கும் என்றும் சொல்கிறார்.

சிந்திக்கும் திறனின்றி, நம்பிக்கை குறைந்தால் உடலையும் உள்ளத்தையும் அரித்து நோய் வாய்ப்பட வேண்டிவரும். இதற்கு நல்ல விவேகத்துடன் சிந்தித்து, ’கண்ணால் காண்பது பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து நடந்து கொள்வதே நன்று’ என்று உணர்ந்தால் வாழ்வில் என்றும் துன்பமில்லை, இனி சோகமில்லை, வரும் பெரும் இன்பமே என்று கவிஞர் தஞ்சை என்.ராமையாதாஸ் இப்பாடல் வழியாக தெளிவுபடுத்துகிறார்.

இப்பொழுது பாடலைக் கேட்டுப் பாருங்கள்:

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தானே நம்பாதது சந்தேகம்

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல
மாண்புடைய மக்களை மடையராக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும்
வீணான யோசனைக்கே இடமாக்கும் - பல
விபரீத செயல்களை விளைவாக்கும்

(தன்னைத் தானே தன்னைத் தானே
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்)

ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே
உள்ளத்தை ஓடவிடும் - பின்னும்
சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்
திசை மாறச் செய்து விடும்

ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை
உரைப்பார் சொல் தப்பெனவே விலக்கிவிடும் - மனம்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மாறாத காதலர்க்குள் பகைமை மூட்டி விடும்
மனிதனை விலங்காக்கிடும்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்

ஞானோதயம் குறைந்தால் தொற்றும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் – சுத்த
ஞானோதயம் குறைந்தால் தொற்றும் ரோகம்
நம்பிக்கை அற்றவர்க்கே துன்பமாகும் - அது
ஆணோடு பெண்ணிடம் வரும் போகும்
ஆணோடு பெண்ணிடம் வரும் போகும் - அதற்கு
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்
ஔஷதம் ஒன்றே தான் நல் விவேகம்

(தானே, தன்னைத் தானே,
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Dec-17, 1:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 334

சிறந்த கட்டுரைகள்

மேலே