கங்கவ்வா கங்கா மாதா - சங்கர் மோகாசி புணேகர் எம் வி வெங்கட்ராம்

உங்கள் அம்மா கோலம் போடும்போது கவனித்திருக்கிறீர்களா? புள்ளிகள் வைத்து, நெளி நெளியாக வளைந்த கோடுகள் கொண்ட கோலங்கள் - எந்த முனையில் இருந்து இழுப்பார்களென்றே தெரியாது, பார்த்தாலும் புரியாது. ஆனால், கண்ணிகளை இணைக்கும் கைகளை கவனித்துக் கொண்டிருக்கும் போதே, சட்டென்று ஒரு முழுமைக்குள் வந்து முடிந்துவிடும் கோலங்கள்.

சிறுவயதில், அம்மா கோலம் போடுவதை பாராக்குப் பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு. வாசலில் நீர் தெளிக்கும்போதே, எங்கள் விளையாட்டுகள் முடிவுக்கு வந்துவிடும். வரிசை வரிசையாக எண்கணக்கு மாறாமல் புள்ளிகள் வைத்து, எந்த கண்ணியும் தனித்து தொங்கிக் கொண்டிராமல், வகைவகையான நெளிவுகளுக்குள் சுருங்கி, ஏதோ ஒரு கணக்குக்குள் அடங்கிவிடும் கோலங்கள் வடிவம் கொள்வதை பார்ப்பதே பிரமிப்புத்தானே!

கிட்டதட்ட, கிட்டதட்ட என்ன‌ அதே மாதிரியான பிரமிப்பு, "கங்கவ்வா கங்கா மாதா" என்ற கன்னட நாவலை வாசித்தபோது ஏற்பட்டது. வாசித்து முடித்ததும், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, நெடுநேரம் ஒவ்வொரு புள்ளியாக மனதுக்குள் இழுத்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

மொத்தத்தில் மூன்று குடும்பங்கள்...கங்கவ்வா, ராகப்பா,தேசாய். ஆனால், இந்த குடும்பங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு கண்ணியும், ஏதோ ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளியோடு பாந்தமாக இயைந்து, ஒரு முழுமையான‌ சித்திரத்துக்கு வந்துவிடுவது ஆச்சரியமாக இருந்தது.

இத்தனைக்கும், சிறார்களுக்கான‌ போட்டியொன்று நிகழும் பள்ளி வளாகத்தினுள் வைத்து இந்த புத்தகத்தை வாசித்திருந்தேன். சுற்றி நிகழும் எந்த கூச்சல்களும் கூப்பாடுகளும் எந்த விதத்திலும் பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டது, நாவலின் சுவாரசியமின்றி வேறெதுவும் இல்லை. சொல்லப்போனால், போட்டியை பற்றிய பதைபதைப்புகளிலிருந்து என்னைக் காத்தது கங்கவ்வாவும், கிட்டியும்தான். :‍)

மகனுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, தன் கணவனை இழந்த பெண். நன்கு வாழ்ந்த குடும்பம். உறவினர்கள் சதித்திட்டத்தால், முக்கியமாக கங்கவ்வாவின் தம்பி ராகப்பாவால் செல்வத்தை இழக்க, மனக்கலக்கத்தின் காரணமாக கணவன் உயிரை விடுகிறான்.

யாருடைய நிழலிலும் இல்லாமல், தம்பிகள் கண்களில் படாமல் வைராக்கியமாக மகனை வளர்க்கிறாள் தாய். சில வீடுகளில் வேலை செய்து, தான் அரை வயிற்றுக்கஞ்சியும், மகனுக்கு முழு வயிற்றுக்கும் கொடுத்து ஆளாக்குகிறாள். மகன் கிட்டி, மெட்ரிக் படித்து பாஸானதும், தெரிந்த, பெரிய மனுஷர்களிடம் சொல்லி அவனை குமாஸ்தாவாக ஒரு அரசாங்க வேலையில் அமர்த்துகிறாள்.

குடும்பத்து பெரியவர்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டோம். ஆனால், குடும்ப நண்பர்கள் என்ற பெயரில் யாராவது ஒரு பெரிய மனுஷர் சிக்கியிருப்பாரில்லையா... அவர் சொல்லிவிட்டால் மறுபேச்சில்லாமல் தலையாட்டுவோமே! எந்த பிரதியுபகாரமும் எதிர்பாராமல், அடுத்தவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற கொள்கையில் 'நம்மைவிட்டால் இவர்களுக்கு சொல்வதற்கும் செய்வதற்கும் யார் இருக்கிறார்கள்' என்று எண்ணிக்கொண்டு அவர்களும் உதவுவார்களே...

அப்படிப்பட்டவர்கள் இப்பொழுது அழிந்துபோகும் உயிரினமாக அருகிவருகிறார்கள்.ஆனால், நாவல் நடக்கும் காலகட்டத்தில் அப்படிப் பட்டவர்களே நாடெங்கும் நிறைந்திருந்தார்கள் என்று ஒவ்வொரு குடும்பத்து தாத்தா பாட்டியை கேட்டாலே தெரியும். அப்படி, கங்கவ்வா குடும்பத்துக்கு சிக்கியிருப்பவர் தேசாய்.

கங்கவ்வாவுக்கு ஆலோசனைகளோடு, அவ்வப்போது பண ரீதியாக உதவியும் செய்பவர் தேசாய். தேசாய்க்கு, இரண்டு மகன்கள். மூத்தவன் அச்சுதராவ், பம்பாயில் கல்லூரியில் படிக்க, இளையவன் வசந்தராவ் நாடக/சினிமா மோகத்தில் ஊர் சுற்றிக்கொண்டும், தந்தையின் பணத்தை செலவழித்துக்கொண்டும் அப்படியே, பொய் புரட்டுகளால், தந்தையின் நற்பெயரை கெடுத்துக்கொண்டும் இருக்கிறான்.

கிட்டி, அரசாங்க வேலையில் அமர்ந்ததும், நைச்சியமாக அவனை சந்திக்கிறான் மாமா ராகப்பா. எல்லாம் காரணமாகத்தான். மூத்த மகள் ரத்னாவுக்கு அவனை கட்டி வைத்துவிடலாமென்ற கனவோடு கிட்டியை தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறான்.

மகனது, போக்கிலிருந்தே கிரகித்துக்கொள்ளும் கங்கவ்வா, ராகப்பாவின் ஏமாற்றுவேலைகளை, நயவஞ்சகத்தை கண்ணீரும் கோபமுமாக, சிலசமயங்களில் தன்மையாக புரிய வைக்கிறாள். இருந்தாலும், எல்லாம் சில காலம்தான். இறுதியில், தேசாயின் உதவியை நாடுகிறாள்.

முதலில், கங்கவ்வாவுக்கும் ராகப்பாவுக்குமாக இருந்த போர், இப்பொழுது தேசாய்க்கும் ராகப்பாவுக்குமாக மாறுகிறது. இதில்,ராகப்பாவுக்கு பகடைக்காயாக சிக்குபவன், தேசாயின், ஊதாரித்தனமான இரண்டாம் மகன் வசந்தராவ்.

ரத்னாவுக்கும், கிட்டிக்கும் திருமணம் நடந்ததா, வசந்தராவ் என்ன ஆனான், கங்கவ்வாவின் மற்றொரு தம்பியான வெங்கட்ராவ் இருக்கும் இடம், அவனுக்கும் அச்சுதராவிற்குமான தொடர்பு, கங்கவ்வாவின் குடும்பம் நொடிக்கும் அளவுக்கு அப்படி என்ன மோசடி நடந்தத என்ற கண்ணிகளெல்லாம் தார்வார், தேசாயின் சொந்த கிராமம், பூனா, சௌபாத்தி, பம்பாய் போன்ற நெளிகோடுகளில் இணைக்கப்பட்டு முழுமையான நாவலாக மாறுகிறது.

நாவல் நடப்பது, 19களின் ஆரம்பத்தில் ‍ - சுதந்திரப் போராட்ட காலம். அப்போது நடக்கும் சத்தியாகிரக போராட்டங்கள், பத்திரிக்கைகள், மாணவர்கள் போராட்டத்துக்குள் ஈர்க்கப்படுவது, பெண்கள் கொடி பிடித்து வீதியில் செல்வது, ஏச்சு பேச்சுகள், அதோடு சினிமா என்ற புது வகையான பொழுதுபோக்கு அன்றைய இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் எல்லாம் ஊடுபாவாக பிணைந்திருக்கிறது. இதனாலேயே, நாமும் ஏதோ அவர்களோடே வாழ்வது போலவே தோற்றமயக்கம் வாசிக்கும்போது ஏற்படுகிறது.

அந்த கால பழக்க வழக்கங்கள் - சில சுவாரசியமான கலாச்சார ரீதியான பழக்கங்கள், நம்பிக்கைகள், மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் சமநிலை எல்லாம் வாழ்க்கை பதிவுகளாகவே வருகிறது. உதாரணத்துக்கு, பணக்கார வீடுகளில் ஏழை மாணவர்கள் ஒவ்வொரு வாரமாக முறை வைத்து உண்பார்களாம். வாசிக்கும்போது, ஆச்சரியமாக இருந்தது. இந்த சமூகம்தான் தன்னை எத்தனை விதமான சமநிலைகளில் நிறுத்திக்கொள்கிறது. புதிய தகவல்தான்.

கிட்டி, தேசாய் வீட்டிலும் கிராமத்தவர்கள் வீட்டிலும் அப்படித்தான் வளர்கிறான். அதனாலேயே, தன் விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஒருவித அழுத்தம் அவனுக்குள் உருவாகிறது. அதுவே பிற்காலத்தில், அவனது தன்னம்பிக்கை குலைத்து அலுவலகத்தில் கேலிப்பொருளாக்குகிறது. அவனது இந்த நிலையை ராகப்பா தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான்.

அதேபோல், தீபாவளிக்கு வீட்டு ஆண்களுக்கு ஆரத்தி எடுப்பது, சோமாசி,புக்கரி போன்ற கர்நாடகத்தின் உணவு பொருட்களை உண்ணும் விதம், வாழ்க்கைமுறை, சம்பிரதாயங்கள், வரதட்சிணையின் முக்கியத்துவம், பூசைகள் என்று மற்றொரு உலகத்தை பார்ப்பது போலவே தோன்றுகிறது.

நாவலின் சுவாரசியமான பக்கங்களில் ஒன்று, ரத்னாவின் திருமணத்தில் ராகப்பாவின் இரண்டாவது மனைவி மஹபூப் வளைய வருவதும் அதையொட்டிய நிகழ்ச்சிகளும். இப்படி இதனை முழுமையான குடும்ப நாவலென்று மட்டும் சொல்லிவிட முடியாது. இதிலிலேயே, த்ரில்லரும், துப்பறிவதும், நாடக பாணியிலான முடிவுகளுக்கும் குறைவில்லை.

இறுதியில்,நாவல் ஒரு மரணத்தில் முடிவடைந்தாலும், நமக்கு சோகமோ, மனவருத்தங்களோ உண்டாவதில்லை. அதுதான் நாவலின் வெற்றி போலும்.

கிட்டியின் அலுவலக பகுதியும், லஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்க இயந்திரத்தில் ஊடுருவது தெளிவாக வருகிறது. ரத்னாவுக்கும், கிட்டிக்குமான காதல், இதனால் மகனுக்கும் கங்கவ்வாவுக்கும் இடையிலான பிளவு, ராகப்பாவின் மனைவிக்கும் கங்கவ்வாவுக்குமான உறவு எல்லாமே சிக்கலான உணர்ச்சி போராட்டங்கள் மிகவும் சுவையாக எழுதப்பட்டுள்ளது.

நாவலின் ஆரம்பத்தில், கங்கவ்வா கங்கைக்கு போய்விட்டு சொம்பில் கங்கைநீரை கொண்டு வருவாள். அவளது உயிர் பிரியும் தருணத்தில், மகன் கிட்டி அவளது வாயில் இந்த கங்கை நீரை ஊற்ற, அவளது உயிர் பிரிய வேண்டும். இது, சாதாரணமாக எல்லோருக்கும் இருக்கக்கூடிய நம்பிக்கைதான்.

ஆனால், ரயிலின் ஓட்டத்தில், அந்த கங்கை நீர் சொம்புக்குள் ஆடுவது, கங்கவ்வாவுக்கு சாவை, மகனை விட்டு பிரிவதை, தனது கடமைகளை நிறைவேற்றாமல் பேரக்குழந்தைகளை பார்க்காமல் செல்வதை நினைவூட்டி மனதை பலத்த சஞ்சலத்துக்குள்ளாக்குகிறது.

சொம்பு கங்கை நீரை ரயிலில் வழியிலேயே எடுத்து கவிழ்த்தபிறகுதான் நிம்மதியான உறக்கம் வருகிறது. அதே கங்கைநீர், அவளது பிற்கால வாழ்க்கையில் தாமாகவே வீடுவந்து சேர்கிறது. கிட்டியின் தந்தை பெரும் நம்பிக்கையோடு பூசை செய்த, சாலக்கிராமம் பூசையறையில் சேரும் பகுதியும் சுவாரசியமானது.

பிராமண குடும்பத்தை மையப்படுத்திய‌ நாவலாக இருந்தாலும், அவர்களுக்கான அந்த பிரத்யேகமான மொழியை எங்கும் காண முடியவில்லை. கன்னடத்திலிருந்தி இந்திக்குப் போய் அங்கிருந்து தமிழுக்கு வந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் வரும் எழுத்துப்பிழைகள், 'அவன்.......வந்தாள்' என்பது போன்ற பிழைகள் தவிர்த்து, உறுத்தாத, அதே சமயம் சுவாரசியம் கொஞ்சமும் குன்றாத எளிமையான மொழி பெயர்ப்பு.

சில ஆண்டுகளுக்கும் முன் வாசித்தாலும் இன்னும் மனதில் நிற்கும் முழுமையான நாவல்கள் 'சிப்பிக்குள் முத்து', 'சிக்கவீர ராஜேந்திரன்', 'தென்காம ரூபத்தின் கதை' போன்றவை. அந்த வரிசையில், கங்கவ்வா கங்கா மாதாவுக்கு நிச்சயம் இடமுண்டு. மோகாசி எழுதிய ஒரே நாவல் இதுதான் என்று முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது, ஒரே நாவல் ஆனால் முக்கியமான நாவல்.

கங்கவ்வா கங்கா மாதா
சங்கர் மோகாசி புணேகர் (எம் வி வெங்கட்ராம்)
வெளியீடு: என் பி டி
விலை: 70
பக்: 260Posted by சந்தனமுல்லை

எழுதியவர் : (7-Dec-17, 11:45 am)
பார்வை : 78

மேலே