நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-04

.....நெஞ்சோடு கலந்திடு.....

அத்தியாயம் : 04

வீட்டை வந்தடைந்த என்னை வாசலிலேயே எதிர்கொண்டார் எனது அப்பா...துவாலையோடு காத்துக் கொண்டிருந்தவர்,நான் சைக்கிளை விட்டு இறங்கியதுமே என் தலையினைத் துவட்டத் தொடங்கிவிட்டார்....

அவரது அன்பில் வழமை போலவே என் உள்ளம் நெகிழ்ந்தது....அதுவரை நேரமும் எனக்குள் அழுத்திக் கொண்டிருந்த பாரங்கள் அனைத்தும் அவரது அன்பான அரவணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வதாக உணர்ந்து கொண்டேன் நான்...

அவருக்காக மட்டுமே எதையும் செய்யலாமென்று தோன்றியது எனக்கு...சிறுவயதிலேயே அம்மாவை இழந்துவிட்ட எனக்கு அம்மாவாய்,அப்பாவாய்...அனைத்து உறவுமாய் எனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர்...எனக்காக அனைத்தையுமே பார்த்துப் பார்த்துப் செய்து கொண்டிருப்பவருக்கு இதுவரையில் எதுவுமே செய்ததில்லை நான்...

அவருக்காக என்னால் செய்யக் கூடியது,அவர் ஆசைப்பட்டது போல் படித்து சிறந்த வழக்கறிஞராக வருவது மட்டுமே....சிறுவயதிலிருந்தே எனக்குள் அக் கனவினை ஊட்டி வளர்த்தவர்,"அவ் இலட்சியத்தை நீ நிறைவேற்றிக் கொள்ளும் வரை வேறு விடயங்களில் உன் மனதை திசைதிருப்பிக் கொள்ளாதே"என்பது மட்டுமே அவர் எப்போதும் என்னிடம் கூறிக் கொள்வது...

இந்தப் பதினெட்டு வருடங்களாய் எனக்காகவே அனைத்தையும் செய்து கொண்டிருப்பவர்,தனக்காக கேட்டுக் கொண்டது இது ஒன்றை மட்டுமே...அதைக் கூட
என்னால் அவருக்காக செய்ய முடியவில்லையென்றால்,அவருடைய மகளாக நான் இருப்பதில் அர்த்தமில்லையென்றே தோன்றியது எனக்கு...எனது இலட்சியத்தை அடைந்து என் அப்பாவின் கனவுகளை நான் நிறைவேற்றிக் கொள்ளும் வரை வேறு எந்த உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளும் நிலையிலும் நானில்லை...

அவருக்காக எனக்குள் இருக்கும் காதலை எனக்குள்ளேயே ஒளித்துக் கொண்டேன்...இதனால் அவன் எவ்வளவு காயப்படுவான் என்பதையும் நான் அறிவேன்...ஆனாலும் என்னை அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டு...இந்த வயதில் காதலென்று என் அப்பாவின் மனதை வேதனைப்படுத்தவும் நான் விரும்பவில்லை...அதே நேரத்தில் அவருக்குத் தெரியாமல் காதல் செய்வதற்கும் என் மனச்சாட்சி இடமளிக்கவில்லை...

அவருக்காக என் காதலை இந்த ஏழு வருடங்களாய் எனக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன்...அன்று எனக்குள்ளேயே என்னால் புதைக்கப்பட்ட என் காதலை இன்றுதான் அவனிடம் முழுமையாகத் திறந்து காட்டப் போகிறேன்....அதற்காகத்தானே இத்தனை வருடங்களாய் நான் காத்துக் கொண்டிருப்பதும்...

அவன் காதல் சொன்ன அன்றைய நாளின் நினைவுகளை என் மனம் எப்போதெல்லாம் மீட்டிப் பார்த்துக் கொள்கிறதோ,அப்போதெல்லாம் என் மனதில் அவன் இறுதியாகக் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும்தான் எதிரொலித்துக் கொண்டிருக்கும்....

அன்றைய தினத்தில் அவனுக்கு வலிகளை மட்டுமே நான் பரிசளித்திருக்கலாம்...என்னைக் கண்ணீர் மட்டுமே நனைத்திருக்கலாம்...ஆனாலும் அவன் காதல் சொன்ன அந்த நிமிடங்கள்தான் என் வாழ்க்கையின் அழகான தருணங்கள்....என் வாழ்க்கையில் என்றுமே என்னால் மறந்திட முடியா நினைவுகள் அவை....

இந்த ஏழு வருடங்களாய் அவனிடம் என் காதலை நான் சொல்லிக் கொண்டதில்லையே தவிர...அவன் மேல் நான் கொண்ட காதல் கொஞ்சம் கூடக் குறைந்ததில்லை...சொல்லப் போனால் அவன் மீதான காதல் இன்னும் இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றது...

இன்று அந்த காதல் மொத்தத்தையும் அவனிடம் கொட்டிவிடப் போகிறேன்....ஏழு வருடங்களாய் அவனைப் படுத்தியதற்கெல்லாம் சேர்த்து இன்று ஒட்டுமொத்தமாய் அவனை என் காதல் மழையில் நனைத்துவிடப் போகிறேன்....எனக்குள்ளேயே சேமித்துக் கொண்ட காதலை அவன் இருதயத்திற்குள் சேர்த்துவிடப் போகிறேன்....

இந்தக் காத்திருப்பு ஒன்றும் எனக்குப் புதிதல்ல....என்று அவன் தன் காதலை என்னிடம் சொன்னானோ....அன்றிலிருந்து ஆரம்பமானது அவனுக்கான என் காத்திருப்பு...என் பின்னாலேயே அவன் காதலோடு வந்து கொண்டிருக்க அவன் அறியாமலேயே அவன் மனதை நான் பின்தொடர்ந்த தருணங்கள் எல்லாம் அவ்வளவு அழகானவை...ஆனால் அதை எல்லாம் அவன் அறிந்து கொள்ளும் நேரம்தான் இன்று வந்துவிட்டதே...

அவனிடம் என் காதலைச் சொல்லப் போகும் அந்த நிமிடங்களை மனம் எதிர்பார்க்கும் போதெல்லாம் என் உள்ளத்துள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வட்டமடித்துப் பறப்பதாய் ஓர் உணர்வு...என் உணர்வலைகள் மொத்தத்தையும் அவனிடம் கொட்டிவிடலாமென்றால்,அந்த இடியட் வருணோ என் முன்னால் வராது எனக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறான்....

ஓர் மகளாக என் அப்பாவின் கனவுகளை நான் நிறைவேற்றிவிட்டேன்...என் இலட்சியத்தையும் நான் வெற்றிகரமாகவே அடைந்துவிட்டேன்....ஆம் இன்று நான் ஒரு வழக்கறிஞராக உருவாகிவிட்டேன்....இனி என் மனதினை அவனிடத்தில் கொடுப்பதில் எந்தத் தடையுமே இருக்கவில்லை எனக்கு...ஆனால் அவனோ என் முன்னால் வராமல் என்னைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தான்....

அவனை வழமை போலவே மனதிற்குள் செல்லமாய் திட்டத் தொடங்கிய நான்,மீண்டும் பழைய நினைவுகளில் முழ்கத் தொடங்கினேன்...


நினைவுத்தூறல்கள் தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (10-Dec-17, 1:05 am)
பார்வை : 411

மேலே