கடலின் நிறம் சிவப்பு

இயற்கையே..!
எதற்கு நீ
கடலாய்..
கனலாய்..
புயலாய்..
பூகம்பமாய்..
சினம் கொண்டு சீறுகிறாய்..!

சினம் நீ கொண்டால்
மனித இனம்
வாழ்வதெங்கே ?

எத்தனை கோடி
விசித்திர உயிரினங்களின்
வசிப்பிடமாய் இருக்கிறாய்..

இருந்தும் ஏன்
எங்கள்
இருப்பிடம் புகுந்து
இருப்பதையும் பார்க்கிறாய்..

அலையாய் இருந்தால்
அழகாய் கவிபாடலாம்
பனையாய் உயர்ந்தால்
பழிதான் சுமப்பாய்...

அன்னையும்
அலை கடலும்
ஒன்றெனக் கொண்டோம்...

ஒ.. ! கவிஞர்களே
கடல் பற்றிய
உங்கள்
கவிதைக் காகிதங்களை
கப்பல் செய்து
கண்ணீரில் மூழ்க விடுங்கள்..!

காதலின் நிறமும்
கடலின் நிறமும்
நீலமெனக் கண்டோம் ..!

ஓ ..! ஓவியர்களே
இனி
கடல் வரைய
தூரிகைகளில்
தொட்டுக்க கொள்ளுங்கள்
ரத்தத்தை...!

- வெள்ளூர் ராஜா

( 2005 ம் ஆண்டு தினகரன் - பொங்கல் மலர் போட்டி கவிதையில் முதல் பரிசினை பெற்ற சுனாமி பற்றிய எனது கவிதை. பரிசு பெற்ற விவரம் பெரிதாக அன்றைய தினகரன் நாளிதழில் என் புகை படத்துடன் வெளி வந்தது. தற்செயலாக டைரி புரட்டிய போது கிட்டியது.)

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (10-Dec-17, 2:36 pm)
பார்வை : 230

மேலே