ஒதுக்கவா , ஒழிக்கவா

ஒதுக்கவா , ஒழிக்கவா?

காலையில் எழுந்து , கதவைத் திறந்து
கூட்டிப் பெருக்கி சேர்ந்த குப்பையை
மூலையில் குவித்து ஒதுக்கி வைத்தபின்
நீரைத் தெளித்து கோலங்கள் இட்டோம்.

கதவை மூடி உள்ளே சென்றபின்
அடித்த காற்றில் கலைந்த குப்பை
மிதந்து வந்து மீண்டும் நமது
வாசல் வந்து வாசம் செய்தது.

காலை எழுந்து கண்களை மூடி
மூலையி லமர்ந்து த்யானம் செய்தபின்
கோவில் சென்று கடவுளைத் தொழுதபின்
நாவால் அவனது நாமம் ஜபித்தபின்

ஒதுக்கி வைத்த மனதின் குப்பைகள்
புற்றினை விட்ட பாம்பினைப் போல
பதுங்கி இருந்த இடம்விட் டகன்று
மீண்டும் மனதில் இடம்பிடித் தனவே.

ஒதுக்கியும் பதுக்கியும் ஒளித்தும் வைத்த
குப்பைகள் மீண்டும் உயிர்த் தெழாமல்
ஒழிக்கும் வழியினைக் காண்போம் அதுவே
கழிக்கும் நமது ஊழ்வினைப் பயனை.

எழுதியவர் : கணித்தோட்டம் ரமேஷ் (11-Dec-17, 6:53 pm)
பார்வை : 76

மேலே