நான் பெற்ற வரம்

உதடு துடிக்கிறது
இதயம் இனிக்கிறது
யாரிடம் சொல்வேன்
எப்படி சொல்வேன்
என்னவென்று சொல்வேன்

இறைவன் கண் திறந்தான் என்றா
நான் தேடிய தெய்வம் என்றா
வரம் கிடைத்தது என்றா
விடை வந்தது என்றா
வாழ்வு மலர்ந்தது என்றா
குலம் தழைத்தது என்றா
துன்பம் தொலைந்தது என்றா
காலம் பிறந்தது என்றா
கனவும் பலித்தது என்றா ...!

தினம் தினம் துடி துடித்தவள்
இன்பத்தில் திளைக்கிறேன்...!

வார்த்தைகள் வராமல்
தவிக்கிறேன்...!

சொல்ல முடியா உணர்வு நீ
வரைய முடியா ஓவியம் நீ...!

எனக்கு தெரிந்த சில கிறுக்கல்கள்
உனக்காக...!

பிறந்து வா...! பார்த்து சொல்...!
உன் தாயின் கவிதை....... இதோ ...!

அம்மா என அழைக்க வந்த அழகே...

அவமானங்களை அகற்றிய அதிர்ஷ்டமே...

வருத்தங்களை போக்கிய பொக்கிஷமே...

ஏளனங்களை எட்டி உதைத்த உயிரே ...

நெஞ்சில் பாலூற வைத்த பாசமே ...

விரக்தியை விரட்டிய விதியே...

கலங்கிய மனதை
கரை சேர்த்த கலங்கரை விளக்கமே...!

பிறவியை முழுமையாக்கிய முழு நிலவே...!

இருளை போக்கிய இன்பமே
உறவாய் வந்த உயிரே...!

அழகு குட்டி செல்லம்
அள்ளி சுமக்க வந்தாய்...!

அனைத்தும் தருவேன்
அன்பாய் தருவேன்...!

எழுதியவர் : சுப்ரியா (13-Dec-17, 3:29 pm)
Tanglish : naan petra varam
பார்வை : 207

மேலே