ஒரு கிராமத்து கிணத்தடி

குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோடு என்ற இஸ்லாமியர் வாழும் கிராமத்தில் பழக்கத்திலிருந்த நிஜமான சொல்லாடலை வைத்து எழுதபட்ட பதிவு.

பல சொற்களுக்கு பொருள் விளங்காமல் போகலாம்.
கருத்தில் கேட்டால் முடிந்தவரை சொல்கிறேன்.
-நட்புடன் குமரி
******************

எங்கள் வீடு அமைந்திருக்கும் கவுலாஞ்சிமுடுக்கு(கமலபந்தி்த்தெரு) இருபக்கத்திலுமாக சுமார் பதினைந்து வீடுகளுடன் அந்தகாலத்தில் இருந்தது!இப்போது நிறையவே உள்ளன!ஒவ்வருவீடும் 25/30 சென்ட் மனையில் நல்ல காற்றோட்டமாக இருநதது போய், மூணு நாலு சென்டுகளில் வீடுகள்!எங்கள் 25 சென்ட் மனையில் இப்போது நாலு வீடுகள்!அப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் கிணறு கிடையாது.எங்கள் வீடு உட்பட ஒருசில வீடுகளில் மட்டுமே கிணறு!அக்கம்பக்கம் இருந்த சற்று வசதி குறைவானவர்கள் எமது வீட்டிலேயே வந்து தண்ணி கோருவார்கள்!அவர்களுக்காக எங்கவீட்டு கெணத்தங்கரை கதவு காலை ஸொபை(ஸுபுஹ்) முதல் மோந்தி(மாலை)வரை திறந்தே இருக்கும்!

சில நேரங்களில் எல்லோரும் ஒரே நேரத்தில் தண்ணீர் எடுக்க வரும்போது, வரிசைக்கிரமமாக காத்திருந்து எடுப்பார்கள்!அதுபோன்ற நேரங்களில் அவர்களிடையே பேச்சுக்கள் நடக்கும்போது வாய்த்கராறுகளெல்லாம் வருவதுண்டு!

அதுபோன்றதொரு ஞாயிறன்று பிற்பகல் ஒரு குரூப் தண்ணி எடுக்கவர,கிணற்றடியில் நல்ல சுவாரசியம்!

காத்தூன் அக்கா கையிற்றை இழுத்து கொண்டிருக்க, வீயாத்தையும், அஸ்மாக்காவும் நின்று கொண்டிருந்தனர்.

"புளா காத்தூன் நேத்தக்கி என்னளா அந்த பீரும்மாகிட்ட ஒனக்கு வலிய சண்டையாமே...உள்ளானாளா?"வீயாத்த கேட்டாள்!

"யாருளா சொன்னா ஒனகிட்ட?

ஓம்...இனி யாரு எவரு சேரு சவரு எல்லாம் வெச்சி ஒனகிட்ட சொல்லணுமோ.சண்ட வந்துதா இல்லியா சொல்லீட்டு போளா..

காத்தூன் சிரித்துகொண்டே அது ஒண்ணுமில்லளா! நேத்தக்கி உச்சக்கி இந்த மனுசன் நெத்திலிய வாங்கி தந்தூட்டு அர்சென்டா தக்கலக்கு பொயிட்டு வாறேண்ணு பொய்ட்டாரு. நெத்திலியாச்சே! தொரப்புல கெளங்கு விக்கிது ஒருகிலோ வாங்கி மயக்கிரலாமேண்ணு பாத்தேன்.கைல சல்லிப்பைசா இல்ல பாத்துக்கோ.அவரு வந்தபொறவு வாங்கிக் குடுக்கலாமேண்ணு அந்த துக்ககிட்ட நாலணா கடன்தான் கேட்டேன்.

அதுக்கு அவசொன்ன குத்துவர்த்தானம்....
கடம்வாங்கி இப்ப அத்தியாவசியமா கெளங்குமயக்காட்டா என்னண்ணு கேட்டுட்டாளா.!

எனக்கு என்னணெல்லாமோ
வந்துது!

"ஒனகிட்ட வந்து கேட்டேன் பாருண்ணு" சொல்லி நாலு அறுப்புகண்டம் குடுத்தூட்டு வந்தேன்!.

அஸ்மா அக்கா கேட்டு கொண்டிருந்தவள்,
"ஒனக்கு வேணும்புளா!அந்த நக்கிநஸ்ராணிகிட்ட மனுசப்பய கேப்பானா...துக்க ..அறுத்த கைக்கு சுண்ணாம்பு குடுக்காத்த மூதேவி...." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அஸ்மாக்காவின் வார்த்தைகளைக் காதில் வாங்கியபடியே பீரும்மா குடமும் வாளியும் கயிறுமாக படியேறி வந்தாள்!

வந்தது வினை!

"யாருளா நக்கி நஸ்றாணி?என்னையாளா சொன்னா...கொளுப்பாளா ஒனக்கு..ஆமா...இவ வலிய எம்பற்சுல்தானுக்க மொவ...என்ன சொல்ல வந்துட்டா..."
என்று விலுவிலுவென பிடிக்க ஆரம்பித்து விட்டாள் பீரும்மா!

"ஓம்புளா நா எம்பற் சுல்தானுக்க மொவதான்..
ஒன்னமாதிரி களவாணி ஒண்ணும் ் இல்லளா...
வர்த்தானம் பேச வந்துட்டாளுவோ.." அஸ்மாக்காவின் அதிரடி...

"யாருளா கள்ளி....ஒனக்க கூத்தனுக்க ஊட்டுலையாளா களவாண்டேன்..."
பீரும்மா ஆக்ரோசமடைந்தாள்!

"எனக்கு தெரியாதுமுண்ணு நெனச்சியோ..அண்ணக்கி மைமலுக்கா மாமி ஊட்டுல வெளில கெடந்த ஈக்காம்பொட்டிய தூக்கீட்டு போனவதானேளா ..நீ..."

"அட மகாபாவி...நானாளா களவாண்டேன்..மைமலுக்காமாமிக்க மருமொவ எடுத்தூட்டு போண்ணு எனகிட்ட சொன்னதுனாலதான்..எடுத்துக்கிட்டு போனேன்.மாமிக்கும் பொறவுதான் தெரியும். மருமொவதான் குடுத்தாண்ணு...என்ன கள்ளீண்ணு சொன்ன ஒன்வாய் அவிஞ்சிபோவும்.மலுக்குமுசாப்பா இந்த லெவுண்டிய நீங்க பாத்துகுடுங்கோ...."
பீரும்மா சாபம்போட,

"புளா அவுலியாக்களுக்க மேல கள்ள ஆண போடாதளா...நாக்கு அளுவிப்போவும்..."
அஸ்மாக்காவின் எதிர்சாபம்!

"போளா ஜோலிய பாத்துகிட்டு...ஒரு வெள்ளியாச்ச மோந்தி விடாம பூவும் சந்நனத்திரியும் கொண்டு வெச்சி அப்பாக்க நடையில நிக்கியவளாக்கும் நான்...ஓற்ம இரிக்கட்டு...."

"ஹோ....இவ மட்டும்தான் அப்பாக்க நடைல போறா...ஊர்ல எல்லாம் ஓமுடிஞ்சுபோச்சி...கள்ள மினாவுக்கு..."

சப்தங்கள் உயர உயர , அஸர் (மாலை) தொழுகைக்காக புறப்பட்ட வலியாப்பாவின் குரல் ஓங்கி உயர்ந்தது!

"புளேய்...அங்க என்னளா சண்ட?நீங்கெல்லாம் பொம்புளியதானா...?ஹமுக்குகளே...பேசாம போங்களா...இனியும் இதுமாதிரி கூத்துபோட்டா இங்க தண்ணியெடுக்க வரப்புடாது. ஆமா சொல்லீட்டேன்.."
என்று சத்தம்போட ஒருவாறாக நிலமை கட்டுக்கு வந்தது!

வலியாப்பா தனது வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றியபடி மெயின்ரோட்டை நோக்கி நடக்க
கெணத்தங்கரை அமைதியடைந்தது!

எழுதியவர் : நூர் முஹம்மது (திருவை) (15-Dec-17, 2:20 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 262

மேலே