பெண் எழுத்து

இலக்கியச் சர்சைகள் பொதுவாகவே இரண்டு தளங்களில் நிகழ்கின்றன. ஒன்றாவது சர்ச்சையின் சாரம் உள்ளடக்கியுள்ள மையத்தை நோக்கியதாக விவாதங்களைத் தொடர்வது. மற்றது, சர்ச்சையில் ஆங்காங்கு நீண்டிருக்கும் வெகுசன கயிறுகளைப் பிடித்துக்கொண்டு, மையத்தை விட்டு மற்றவற்றையெல்லாம் சர்ச்சைப் பொருளாக்கி கோஷம் எழுப்புவது. பொதுவாகவே தமிழ்ச்சூழலில் இரண்டாவது நிலைக்குதான் கிராக்கி அதிகம். காரணம் அப்போது போடும் கோஷம் ஒரு கூட்டத்தின் குரல்களோடு இணைந்திருக்கும். அது பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அதுபோன்ற கோஷங்கள் எழுப்ப அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. எதையும் வாசிக்க வேண்டியதும் இல்லை. ஆனால் பொது பார்வையில் அந்தக் கூச்சலும் சர்ச்சையின் ஒரு பகுதியாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு கவனம் பெறும்.

கடந்த ஆண்டு, தயாஜியின் சிறுகதையோ அல்லது எனது கவிதையோ சர்ச்சைக்குள்ளானபோது இதை நன்கு உணர முடிந்தது. தாய்மையின் புனிதத்துவம் குறித்த எனது மாற்று அபிப்பிராயங்களையும் புனைவு சுதந்திரம் குறித்த எனது நிலைப்பாட்டையும் பக்கம் பக்கமாக எழுதியும் ஒருவரும் அதை வாசித்து வாதிட வரவே இல்லை. ஆனால், பத்திரிகைகளில் டாக்சி ஓட்டுனர்களும் இன்னப்பிற இயக்கத்தவர்களும் தங்கள் எதிர்ப்பை உஷ்ணம் தொணிக்கும் குரலில் தெரிவித்தப்படி இருந்தனர். என்ன அறிவு ரீதியில் வாதிட்டாலும் அதற்கு உடன்படாத பெரும் கூட்டம் ,இவ்வாறான கூச்சல் மூலமாகவாவது அறிவு தளத்தில் இணைந்துகொள்ள தங்கள் வீர ஆவேச சவடால்கள் மூலம் முயல்கிறது. இந்தக் கூச்சல்கள் நிகழும் தளத்தில் சிக்கி அமுங்காமல், ஒருவர் தனது கருத்துகளை முறையான உழைப்புக்குப் பின்பே வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

அவ்வுழைப்பு கூச்சலிடுபவர்களுக்கல்ல. உண்மையை அறிய நினைக்கும் ஓர் எளிய வாசகனுக்கு.

ஜெயமோகனின் ‘பெண்கள் எழுத்து’ தொடர்பாக எழுந்த சர்ச்சைகளும் இத்தகையவைதான். எதையுமே வாசிக்காத, இலக்கியம் அறியாதவர்களின் குரல்கள்தான் இங்கும் சதுரங்கம் ஆடுகின்றன. அவை போக, உணர்ச்சியில் கொதிக்கும் பல குரல்களையும் கேட்க முடிகிறது. பேசப்பட்ட விடயத்தை விட்டு ஏதாவதொன்றைப் பேசி தங்கள் தரப்பை நியாயப்படுத்தவே பெரும் முயற்சிகள் இங்கு எழுகின்றன. ஜெயமோகனின் கட்டுரை சர்ச்சையாகும் முன்பே நான் அதை வாசித்தேன். ஜெயமோகன் சொன்ன அதே கருத்தை நான் மலேசிய சூழலை கவனத்தில் கொண்டு ஏற்கனவே இரு முறை நேர்காணலில் சொல்லியுள்ளேன்.

மலேசியாவில் தற்கால பெண் படைப்பாளிகள்

மலேசிய இலக்கியத்தில் இளம் பெண் எழுத்தாளர்கள் என என் கவனத்தில் மீண்டும் மீண்டும் வருபவர் பூங்குழலி. அடுத்து யோகி . இருவருமே கவிஞர்கள். சிறுகதைகள் எழுத முயன்றுள்ளனர். பத்திகள் எழுதியுள்ளனர். குழலி நல்ல இலக்கியங்களை அறிமுகம் செய்து தொடர்ந்து எழுதுகிறார். வாசிப்பு விசாலமாகிக்கொண்டு செல்கிறது. தினேசுவரியும் குறிப்பிடத்தக்க அளவு எழுதியுள்ளார். ஆனால் அவர் கவனம் எப்போதுமே இலக்கியத்தில் நிர்ப்பதில்லை. விஜயலட்சுமி ஆய்வு ரீதியிலான கட்டுரைகள் எழுதுவதில் மிளிர்கிறார். மணிமொழி கவிதைகளில் முயன்றுள்ளார். நோவா, நித்தியா போன்றவர்கள் அவ்வப்போது எழுதுகிறார்கள். இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் சில பத்து கவிதை எழுதியதோடு ‘வேறு வேலை பார்க்கலாம்ல சித்தப்பு’ என போனவர்களின் பட்டியலும் உண்டு. இவர்களைத் தவிர, ஊடக பலம் இருப்பதாலும் கொஞ்சம் அரசியல்வாதிகளின் அறிமுகம் இருப்பதாலும் நூல் போட்டு பணம் சமாதிக்கும் பெரும் கூட்டமும் உள்ளது. இவர்கள் எதை எழுதினாலும் அது பணமாகும். யாரை எப்படி அணுகி பணம் பெறுவதென்று இவர்களுக்குத் தெரியும். ஊடகத்தொடர்பு இவர்களை பத்திரிகையில் முதல் பக்கத்தில் போட்டு அசத்திவிடும் . பிறகு என்ன? இவர்கள் தொலைக்காட்சிகளில் இலக்கியம் குறித்து கருத்து சொல்வார்கள். ஏதாவது ஒரு எழுத்துக்குவியலை புகழ்ந்து முக நூலில் நான்கு கருத்து சொல்வார்கள். இதற்கு அண்மைய உதாரணமாக ‘பெர்னாமா’ ஜமுனா மற்றும் ‘விழுதுகள்’ கோமதியைச் சொல்லலாம். ஒட்டுமொத்தமாகவே சமகால மலேசியப் பெண் எழுத்தை என்னால் இவ்வளவுதான் அளக்க முடிகிறது.

இவர்களுக்கு முந்தைய தலைமுறையினரின் உழைப்பில் பாதியைக்கூட இவர்கள் தொடவில்லை என்பதை நான் பலமுறை கூறியுள்ளேன். கவனிக்க! இங்கு நான் சொல்வது உழைப்பு. கலையல்ல. இதற்கு முந்தையத் தலைமுறை பெண் படைப்பாளர்களின் இலக்கியப் பார்வையையும் படைப்பும் அதிகபட்சம் மு.வ அல்லது ந.பா விடமிருந்து பெறப்பட்டவை. பிரச்சாரத்தன்மை கொண்டவை. பட்டிமன்றத்தில் மிகச்சரியாக கைத்தட்டல் பெரும் வசனங்களை தங்கள் ஆக்கங்களின் வசனங்களாக்குபவை. இன்னும் சொல்வதென்றால் ஆண்களின் பார்வைக்கு உகந்த பெண்களாகதான் அவர்கள் படைப்புகளில் பெரும்பாலும் பாத்திரங்கள் விரவிக்கிடக்கும்.

எனது இந்த எண்ணம் தகர்ந்து போனது முத்தம்மாள் பழனிசாமியின் ‘நாடு விட்டு நாடு’ வாசித்தப் பின்தான். தனது அறுபதாவது வயதுக்குப் பிறகு ஒருவர் தன் சுயவரலாறை எழுதுகிறார். அதுவரை எவ்விதத்திலும் தமிழ் இலக்கியத்தோடு தொடர்பற்றவர். ஆனால், அவர் சுயவரலாறு எனக்குள் ஒரு நாவலாக விரிகிறது. எங்கெங்கோ தேடி அவர் எண்களைக் கண்டடைந்தேன். சந்தித்தேன். நேர்காணல் செய்தேன். தான் எழுதியது குறித்த எவ்வித பெருமிதமும் அவரிடம் இல்லை. அதைவிட பெரிய அதிர்ச்சியாக அவரது இரண்டாவது நூலான ‘மலேசிய நாட்டுப்புற பாடல்கள்’ தொகுப்பை நீட்டினார். அடுத்து ‘சயாம் மரண இரயில்வே’ தொடர்பாகத் தகவல் திரட்டி அவர் எழுதிய ஆங்கிய நூல் ஒன்றையும் பதிப்பிக்க முடியுமா என அனுப்பி வைத்தார். இரண்டுமே கடும் உழைப்புக்குப் பின் உருவானவை. என் வாசிப்பில் முத்தம்மாளின் ‘நாடு விட்டு நாடு’ நூலே முந்தைய தலைமுறையின் மலேசியத் தமிழ் பெண் ஆக்கங்களில் முக்கியமானது. அந்த எல்லையைத் தொடக்கூட இன்றைய மலேசிய பெண் எழுத்தாளர்கள் முயலாமல் கவிதையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பதுதான் வருத்தம்.

நிர்க! இங்கு வழக்கமாக எழும் கேள்வி , “எங்க படைப்புகளைத் தரம் பிரிக்க நீ யாருலா?” என்பதுதான். நான் ஒரு வாசகன் . கொடுக்கப்படும் நூல்களை பொருட்படுத்தி வாசிக்கிறேன். அதன் மூலம் சமகால இலக்கியம் குறித்த எனது அபிப்பிராயத்தோடு ஒப்பிடுகிறேன். அதன் வழி ஒரு படைப்பு எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அதை சொல்கிறேன். என் அபிப்பிராயத்தை யாரும் நிராகரிக்கலாம். ஏன், நாளை மறுவாசிப்புக்குப் பின் நானே கூட நிராகரிக்கலாம். ஆனால், இன்றுவரை உள்ள வாசிப்பு அனுபவத்தில் மட்டுமே என் அபிப்பிராயத்தைக் கூற முடியும். வாசகனாக அதற்கான முழு சுதந்திரமும் எனக்கு உண்டு. என்னைப்போல எல்லா வாசகர்களுக்கும் உண்டு. அதே சுதந்திரம் என் அபிப்பிராயத்தை நிராகரிப்பதில் பெண் படைப்பாளர்களுக்கும் இருக்கவே செய்கிறது. காத்திரமாக இயங்கும் சக பெண் படைப்பாளிகளுடன் இணைந்து பயணிப்பவன் என்ற முறையில் எங்கள் இலக்கிய வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்டங்கள் குறித்த அக்கறை வேறு யாரைவிடவும் கூடுதலாக எங்களிடம் உள்ளது. மலேசிய தமிழர்களின் வாழ்க்கை வெறும் ஆண்களின் ஒற்றைப் பார்வையோடு அமிழ்ந்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வு எனக்குள் எப்போதும் உயிர்த்துள்ளது. சமரசமற்ற கருத்துகள் மூலமே எங்களை நாங்கள் தீவிரப்படுத்துகிறோம். அதுவே இலக்கியத்தில் அவர்களின் சாவகாசத்தை விமர்சிக்க வைக்கிறது.

ஜெயமோகனின் கருத்து

இந்த இடத்தில் ஜெயமோகன் சொன்ன ஒரு வரியுடன் மலேசிய இலக்கியச் சூழலை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஊடகங்கள் மூலமாக விரிவாகிவிடும் பெண் எழுத்தாளர்களின் பிம்பம் அடுத்தத் தலைமுறையினர் இலக்கியத்தை நோக்கிச் செல்வதை தடுக்கும் என்கிறார். 2005ல் காதல் இதழைத் தொடங்கியபோது சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி போன்றவர்களின் கவிதைகள் அதிகம் பேசப்பட்டன. எல்லா இலக்கியக் கூட்டங்களிலும் பெண் உடல் சார்ந்த கவிதைகள் ஒரு பேசும் பொருளானது. அது குறித்து பேசாதவன் இலக்கியவாதியே இல்லை என்பதுபோல ஆனது சூழல். அதன்பின் நவீன இலக்கியம் என்பது ஓர் அதிர்ச்சிப் புனைவுகளில் உண்டாக்குவதுதான் என்ற மாயை ஆண் பெண் என இரு படைப்பாளர்களிடமும் இருந்தது. ஆளாலுக்கு அதிர்ச்சியளித்து மகிழ்ந்தோம். கவித்துவம் குறித்த எந்த அக்கறையும் அப்போது எழவில்லை. விளைவு! இன்றும் மலாயா பல்கலைக்கழக முனைவர் கிருஷ்ணன் மணியம் மேடைகளில் பெண்கவிஞர்களின் எழுத்தாக இவர்களை மட்டுமே சுட்டுகிறார்.

இது அந்தப் படைப்பாளிகளின் குற்றம் அல்ல. இன்றும் நான் மதிப்பளிக்கும் படைப்பாளிகள் அவர்கள். தமிழ் இலக்கியத்தின் ஒரு காலக்கட்டத்தை கொஞ்சம் உலுக்கி, பிடித்திருந்த துறுவை உதிரச்செய்தவர்கள் என்ற வகையில் அவர்கள் முக்கியமானவர்கள் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு கணம்! அவ்வளவே. இன்று அவர்களின் அரசியல், இலக்கிய நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்களின் அக்கணம் நிராகரிக்கக் கூடியதல்ல. இங்கு விஷயம் அதுவல்ல. ஊடகங்களுக்கு விற்க சந்தையில் செல்வாக்குள்ள ஒரு பொருள் தேவை. அது எப்போதும் இலக்கியமாக இருந்ததில்லை. என்றாவது ஒருமுறை அந்த விபத்தும் நிகழும் போது அதையும் விற்க மெனக்கெடுகிறார்கள். எங்கள் ஊர் முனைவர்களே தங்களை பத்து வருடங்களாக புதுப்பித்துக்கொள்ளாத பட்சத்தில் எளிய வாசகர்களும் தேங்கி விடுவதில் ஆச்சரியம் இல்லை. அதற்கடுத்தோ அதற்கு முன்பு தமிழில் நிகழ்ந்துள்ள பெண் இலக்கியங்களின் சாதனைகள் குறித்து யாரும் பேசாததுதான் இங்கு வருந்தத் தக்க நிலை.

ஜெயமோகனின் கருத்து இந்த வகையானதுதான் என நான் கருதுகிறேன். எனக்குத் தெரிந்து எந்த இலக்கியக் கூட்டத்திலும் சு.வேணுகோபால், ஜோ. டி. குரூஸ், ஷோபா சக்தி போன்றவர்களின் பெயர்கள் இங்கு (மலேசியாவில்)உச்சரிக்கப்படுவதே இல்லை. ஆனால், குட்டி ரேவதி, சல்மா போன்றவர்களை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். ஜோ.டி.குரூஸ் தமிழ் இலக்கியத்துக்குக் கொடுத்துள்ள பங்களிப்பின் போது கண்டுக்கொள்ளப்பட்டதைவிட, அவர் மோடியை ஆதரிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பலராலும் கவனிக்கப்பட்டார். தமிழில் ஒரு சிறுகதை மொழிப்பெயர்ப்பின் மூலம் உலகப்பார்வைக்குச் செல்ல வேண்டுமென்றால் என் தேர்வு ஷோபாவுடையதாக இருக்கும். ஆனால், ஷோபாவை தமிழ்ச்சூழலில் பலரும் அறிந்துவைத்திருப்பது அவர் மேல் எழும் சர்ச்சைகளால்தான். சு.வேணுகோபால் பாவம். அவரது சிறுகதைகள் எந்த இதழ்களிலும் பிரசுரமாகாமல் நேராக நூலுரு பெருவதால் உலக இலக்கியங்களையெல்லாம் தன் விரல் நுனியில் தேக்கி வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும்!? சாருவுக்குக் கூட தெரியவில்லை என நேர் பேச்சிலேயே அறிந்தேன். இவையெல்லாமே ஊடகங்களின் தேவையைப் பொறுத்துதான். எது விற்கும் என அவர்கள் நினைக்கிறார்களோ அதை முன்னிலைப் படுத்துகிறார். கவனிக்க! ஊடகம் முன்னிலைப் படுத்துவதால் பெண் எழுத்தாளர்கள் அதற்கொப்ப எழுதுகிறார்கள் என நான் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்திலிருந்து வரும் எந்த ஜனரஞ்சக இதழையும் அண்மைய காலமாக நான் வாசிப்பதில்லை. விகடன் மட்டும் அவ்வப்போது முடித்திருத்தும் நிலையத்தில் கிடைக்கும். எனவே அந்தத் தளத்தில் நடக்கும் அரசியல் குறித்து பேச எனக்கு அருகதை இல்லை. அதே போல நாஞ்சில் சொன்ன பெண் எழுத்தாளர்களின் படைப்புகளில் ஒன்றிரண்டு வாசித்த நிலையில் அது குறித்து கருத்து கூறுவது அபத்தம். ஆனால் வாசித்த ஒருவர் கருத்து கூறுவாரானால் அது தவறே இல்லை என்பதே என் நிலைபாடு.

ரசனை விமர்சனம்

ஒரு இரசனை விமர்சகராக ஜெயமோகன் தன் அபிப்பிராயத்தைக் கூற என்ன தடை இருக்க முடியும் என விளங்கவில்லை. தமிழ் இலக்கியத்தை முழுமையாகக் கருத்தில் கொண்டு, அவர் வாசிப்புக்கு ஒவ்வாததை எப்படி ஒரே தளத்தில் வைத்து மதிப்பிடுகிறீர்கள் என கேட்கிறார். இரசனை விமர்சனம் என்பதே தனது வாசிப்பின் உச்சமான தருணத்தோடு பிறவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதுதானே. பல கோடி முதலீடு செய்து உருவாக்கப்படும் சினிமாவிலிருந்து ஓர் உணவகத்தின் சுவை வரை நாம் இந்த ஒப்பீட்டின் மூலம் தரம் பிரிக்கும் போது இலக்கியத்தில் செய்தால் ஏன் கோபப்பட வேண்டும். அது ஒரு கருத்து அவ்வளவே. ஒருவேளை பெண் கலைவெளிப்பாட்டில் என்னைக் கேட்டால் என் தேர்வு லீனா மணிமேகலையாக இருக்கும். நிம்மா அல் நவாப் போல அவரின் ஆளுமையைக் கவிஞராக மட்டுமே என்னால் சுருக்க முடியவில்லை. அவர் ஒரு கலைஞர். அதற்காக அவர் உழைக்கிறார். ‘செங்கடல்’ உள்ளிட்ட அவரது பிற ஆக்கங்களையும் பார்த்துள்ளதன் அடிப்படையில் அவரை கவனப்படுத்த முடிகிறது. ஜெயமோகனுக்கு லீனா பொருட்படுத்தக்கூடிய ஆளுமையாக இல்லாமலும் இருக்கலாம். அது அவரது வாசிப்பு மற்றும் ரசனைக்கான தனி உரிமை. ஆக, ஒருவரை நல்ல படைப்பாளியாக அடையாளம் காண நாஞ்சிலுக்கு இருக்கும் முழுசுதந்திரம் வாசிக்கும் அனைவருக்கும் இருக்கவே செய்யும்.

இதற்கு மாற்றான கருத்தை கொடுக்க முனைந்த இளம் பெண் இலக்கியவாதிகள் என்னென்ன ஆக்கங்களை எழுதியுள்ளார்கள் என விரிவாகக் கூற முற்பட்டால் என்போன்ற வாசகர்களுக்குப் பெரும் பயனாக இருந்திருக்கும். அந்தப் படைப்புகளைத் தேடிச் சென்று வாசிக்க உதவியாக இருந்திருக்கும். ஆனால், அவர்களின் உழைப்பு மீண்டும் வசையை நோக்கிச் செல்வதுதான் வருந்தத்தக்கது.

பொதுவில் வந்த படைப்பு குறித்து பேசவும் அதை நிராகரிக்கவும் எந்த ரசிகனுக்கு உரிமை உண்டு. விமர்சகன் ஒரு படி மேலே சென்று ஒப்பீடும் செய்கிறான். ஒரு படைப்புக்குக் கிடைக்கும் எல்லை மீறிய அங்கீகாரத்தையும் கேள்வி எழுப்புகிறான். அது அவன் பணி. ஜெயமோகன் இதில் தமிழ்ச்சூழலில் ஆண் படைப்பாளர்களுக்கும் பெண் படைப்பாளர்களுக்கும் கிடைக்கும் ஊடக வெளிச்சத்தைப் பற்றி சொல்லியுள்ளார். அதை இல்லை என்று நிராகரிக்க தனியாகவோ கூட்டாகவோ உழைக்க முன் வராமல் வசைகளுக்கு மட்டும் எத்தனை பக்கங்கள். அதுவும் அம்பை, எழுதிய கட்டுரையில்தான் ஆதாரமற்ற அவருக்கு மட்டுமே தெரிந்த , பெயர் குறிப்பிட விரும்பாத யார் யாரோ சொன்ன கிசுகிசுக்கள் குவிந்திருக்கின்றன. இந்த அம்பையையா நான் முன்பு வாசித்தேன் என குழம்பியே போனேன்.

அதிலும் கட்டுரையில் ஜெயமோகன் பெண்களை இழிவு செய்தார் எனும் தோரணையில் விவாதத்தைக் கொண்டுச்சென்றது கண்டிக்கக்கூடியது.

பெண் இலக்கியம்

உலகம் முழுதும் பெண் படைப்பாளர்கள் இயங்கும் நிலையோடு ஒப்பிட்டால் தமிழில் குறிப்பாகத் தற்காலத்தில் அது மெதுவாகவே நகர்கிறதென்று நம்பத்தான் வேண்டியுள்ளது. இந்த சர்ச்சையில் பெண் படைப்பாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சில இணைய இதழ்களும் முக நூல் பதிவர்களும் ஏன் அம்பையும் கூட, குடும்ப அதிகாரத்துக்குக் கட்டுப்பட்ட பெண் பொதுவெளியில் இயங்குவதே சவால் மிக்கது எனும் தொணியில் கருத்துக்கூறியிருந்தனர். நான் உலக இலக்கியங்கள் அத்தனையும் கரைத்துக்குடித்தவன் இல்லை. ஆனால் தமிழ்ச்சூழலில் பொதுவாக வைக்கப்படும் இந்த வசனமும் பெரிதாக ஒன்றும் எழுதிவிடாமலேயே மலேசியாவில் உள்ள பெண் எழுத்தாளர்களிடம் வெளிபடும் ஓயாத களைத்தக் குரலும் உலகம் முழுக்கவும் பெண் படைப்பாளர்களின் வாழ்வு நிலை குறித்து கொஞ்சம் தேட வைத்தது. இணையம் மூலமும் சில நூல்கள் மூலமும் சிலரது வாழ்வைக் கண்டடைந்தேன்.

1. அமெரிக்காவின் தேசிய இலக்கிய விருதையும் புலிச்சர் விருதையும் வென்ற முதல் கறுப்பின பெண் எழுத்தாளர் அலிஸ் வோக்கர். 1982இல் வெளிவந்த இவரின் பேசப்பட்ட தி கலர் பெர்பள் என்ற நாவல் இந்த விருதுகளைப் பெற்றது. அந்நாளில் பெரிய பண்ணைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த வெள்ளை இனத்தவர்கள், கறுப்பினத்தவர்களின் பிள்ளைகள் நிலத்தில் வேலை பார்க்க வேண்டும் எனக் கருதினர். ஆனால், அலிஸை நான்கு வயதிலேயே முதல் வகுப்பில சேர்த்தார் அவரது அம்மா. எட்டு வயதாக இருக்கும்போது, அலிஸின் சகோதரர்களில் ஒருவர் சுட்டதில் அலிஸின் வலது கண் பாதிக்கப்பட்டது. வேண்டுமென்றே தனது சகோதரர் சுட்டபோதும், பெற்றோரிடம் காட்டிக்கொடுக்கவில்லை அலிஸ். அப்போது அவர்களிடம் கார் இல்லாததால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறமுடியவில்லை. ஒருவாரம் கழித்து அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றதால் அலிஸ் பார்வையை முற்றாக இழந்துவிட்டார். பல்கலைக்கழக காலத்தில் அமெரிக்க பொது உரிமை இயக்கத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கிய அலிஸ், ஒரு காலத்தில் அதில் தீவிரமாக இருந்தார். முழுநேர எழுத்தாளரான பின்னர் பெண்களின் உரிமைக்காக அதிகம் போராடத் தொடங்கிய அவர் சக எழுத்தாளருடன் இணைந்து Wild Tree Press என்ற பெண்ணிய பதிப்பகத்தை 1984இல் தொடங்கினார்.

2. ஜே.கே.ரவுலிங்கை தெரியாமல் இருக்க முடியாது. பி.ஏ படித்த ரவுலிங், ஹரிபோட்டர் முதல் நாவலை எழுதும்போது வாழ்க்கையில் தோல்வியின் உச்சத்திலிருந்தார். அம்மாவின் இறப்பு, விவாகரத்து, வேலையில்லை, மகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு, பட்டப்படிப்பை முடித்து ஏழாண்டுகளாகியும் வாழ்க்கையில் நிலைக்க முடியாத ஏமாற்றம் என இருந்த அச்சமயம் அரசாங்கத்தின் சமூக உதவித் திட்டத்தின்கீழ்தான் வாழ்க்கையை ஓட்டினார். மகளைக்கூட்டிக்கொண்டு நடப்பார், குழந்தை களைத்துப் போனதும் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு காபி கடையில் உட்கார்ந்து எழுதுவார் இப்படித்தான் உருவானது ஹரிபோட்டர். இந்த ஹரிபோட்டர் நாவல்கள் உலகெங்கும் 450 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

3. பி.ஏ ஆங்கிலம் படித்த ஸ்டெபனி பெரிதாக எந்த வேலையும் பார்க்கவில்லை. முதல் நாவலுக்கு முன்னர் ஒரு சிறுகதைகூட அவர் எழுதியதில்லை. 21 வயதில் திருமணம் செய்த அவர், முதல் குழந்தை பிறந்த பிறகு, பிள்ளையைப் பார்த்துக்கொள்ள வீட்டிலேயே இருக்க முடிவெடுத்தார். ஒருநாள் அவர் கண்ட கனவுதான் டுவிலிட். இவரின் நாவல்கள் திரைப்படங்களாகவும் எக்கச்சக்கமாக சம்பாதித்துள்ளன. சமூக ஊடகங்களின் மோகம் தொடங்கியிருந்த சமயம். இணையத்திலும் கணினி விளையாட்டுகளிலும் மூழ்கியிருந்த உலகெங்குமுள்ள சிறார்களையும் இளையர்களையும் வாசிப்பின் பக்கம் ஈர்த்த பெரும் பெருமை இவருக்கு உண்டு.

4. உலகில் ஆக அதிகமான நாவல்கள் விற்பனையான எழுத்தாளர் என்ற கின்னஸ் சாதனையை இன்றுவரையில் வைத்திருப்பவர் மர்ம நாவலின் அரசியான அகதா கிறிஸ்டி. இவரின் நாவல்கள் உலகெங்கும் நான்கு பில்லியன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன என இணையத்தில் கூறப்படுகிறது. இன்றுவரையில் அந்த சாதனையை எவரும் முறியடிக்கவில்லை. வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு அடுத்து, உலகெங்கும் அதிகளவில் படிக்கப்பட்ட எழுத்தாளராகக்கூறப்படுவர் இவர் சொல்லப்படுகிறார்.

5. டாக்டர் அன்கிலோ ஒரு கவிஞர், நாவலாசிரியர், நடிகை, நடனக் கலைஞர், மனித உரிமைப் போராளி. அமெரிக்காவின் மிசோரி, அர்கான்சாஸ் மாநிலங்களில் வளர்ந்த அவர், இனவாதத்தின் கொடூரமான நிதர்சனங்களை நேரில் கண்டு வளர்ந்தவர். 5 மொழிகள் பேசும் அவர், உலகெங்கும் பயணம் செய்திருக்கிறார். மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங் இருவருடனும் பணி செய்திருக்கும் டாக்டர் அன்கிலோவிடம், தமது பதவியேற்புக்கு கவிதை எழுதித் தருமாறு அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் கேட்டுக்கொண்டார். On the Pulse of the Morning என்ற அந்தக் கவிதை 1993ல் உலகெங்கும் ஒளிபரப்பானது. இள வயதில் சமையல்காரராக, பாலியல் தொழிலாளியாக, இரவுவிடுதி நடனக்கலைஞராக, ஓப்ரா இசை உறுப்பினராக பலவேலைகளைப் பார்த்து பின்னர் கவிஞராகவும் எழுத்தாளராகவும் ஆனவர் .

6. Rebecca West 16 வயதில் படிப்பை பாதியில் நிறுத்தியவர். 14 வயதில் தந்தை குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இள வயதிலேயே காச நோய் கண்டவர். பெண்ணுரிமையை உறுதியாக கடைபிடித்தவர். 1947லில் The Times அவரை “indisputably the world’s number one woman writer’ என்று அடையாளப்படுத்தியது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் CBE, DBE போன்ற உயரிய கெளரவ விருதுகளை வென்றவர். ஏராளமான புனைவு, அல்புனைவு, விமர்சன கட்டுரைகள் என எழுதி குவித்துள்ளார்.

7. எச்.பீர்முஹம்மது தொகுத்திருக்கும் நவீன அரபு இலக்கியம் நூலில்தான் சவூதிய எழுத்தாளர் ரஜா அல் சானியாவை அடையாளம் கண்டேன். 33 வயது இளம் எழுத்தாளர். சவூதிய அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கும் பெண். அவர் எழுதிய நாவல் மத குருக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இவர் அமெரிக்காவில் வசிப்பதால் எதிர்ப்புகளைத் தாண்டி எழுத்தியக்கத்தைத் தொடர்ந்து வருகிறார்.

இன்னும் தேடினால் ஏராளமான பெண் எழுத்தாளர்களின் இக்கட்டான வாழ்வு கிடைத்துக்கொண்டே இருக்கும். இவர்கள் இந்தச் சூழலில் இருந்து வெளிபட பயன்படுத்திய ஆயுதமாகவே கலையும் இலக்கியமும் இருக்கிறது. இன்னும் தெளிவாகக் கூறுவதென்றால் அக அல்லது புற ரீதியான அதிகாரப்பிடியில் இருந்து தங்களையும் தங்கள் மனநிலையையும் பெயர்த்துக்கொணர இவர்கள் ஓயாமல் கலையினுள் உழைத்துள்ளார்கள். அப்படி இருக்க தமிழில் அதிகார மையமே பெண்கள் விஸ்தாரமாக இயங்க தடை எனச் சொல்வது அபத்தம்.

இறுதியாக

இந்தச் சிக்கலில் ஜெயமோகன் கருத்தில் பலருக்கு உடன்பாடு இருந்தாலும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காததற்கு எந்த எழுத்தாளரும் அவரவர் அரசியல் படி காரணங்களை வைத்திருக்கலாம். மனிதன் கருத்துகளால் ஆனவன். அவன் எத்தனை மாறான கருத்தினை வைத்திருந்தாலும் அவன் அக்கருத்தைச் சொன்னதற்காக நான் அக்கருத்துடன் முரண்படுவேனே தவிர ‘முகத்தைக் கூட பார்க்க பிடிக்கவில்லை’ என முகத்தைத் திருப்பிக்கொள்ளவே மாட்டேன். இலக்கியம் எனக்கு இறுதியாகக் கற்பித்தது அதை மட்டும்தான்

ம.நவீன்

எழுதியவர் : (15-Dec-17, 4:12 am)
Tanglish : pen eluthu
பார்வை : 109

மேலே