நல்ல மனைவியும் நல்மக்களும் இல்லுக்குச் செல்ல அணிகள் – அணியறுபது 18
நேரிசை வெண்பா
பல்லுக் கணிவெண்மை; பார்வைக் கணிகூர்மை;
சொல்லுக் கணிதூய்மை தோய்ந்துவரல்; - இல்லுக்கு
நல்ல மனைவியணி; நல்மக்கள் அம்மனைக்குச்
செல்ல அணிகள் தெளி. 18 அணியறுபது
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
பல் துலக்கிச் சுத்தமாகவும், வெண்மையாகவும் வைத்திருப்பதே பற்களுக்கு அழகாகும்; கண்கள் நன்றாகத் தெரியும் கூர்மையே பார்வைக்கு அழகு;
பேசும் போது சொற்களில் ஏற்படும் தூய்மையே சொல்லுக்கு அணி; வீட்டிற்கு நல்ல குணவதியான மனைவியே அழகாகும்;
அத்தகைய பெண்ணுக்கு நல்ல பிள்ளைகளே செல்லமாகப் போற்றப்படும் அழகென்று தெளிவாகத் தெரிந்து கொள்.
முப்பத்தியிரண்டு எண்ணிக்கையிலுள்ள பற்கள் பல வகையான உணவுப் பண்டங்களை மென்று தின்று உயிர் வாழ்விற்கு உதவி புரிந்து வருகின்றன. ஒலிகளைத் தெளிவாக்கிப் பேச்சு மொழிகளை எவ்வழியும் நலமாய் வெளியிடுகிறது.
பல் இழந்தான் சொல் இழந்தான் என்பது பழமொழி; பற்களுக்கும், சொற்களுக்கும் உள்ள ஒலி நிலையையும், தொடர்பையும் இதனால் உணர்ந்து கொள்கிறோம்.
பற்கள் இயல்பாக வெள்ளை நிறம் ஆனதால், பல்லுக்கு முத்தை உவமை கூறுவது காவியக் கவிகளின் மரபு.
அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
முத்தம் கொல்லோ? முழுநிலவின்
முறியின் திறனோ? முறைஅமுதத்
சொத்தின் துள்ளி வெள்ளிஇனம்
தொடுத்த கொல்லோ? துறைஅறத்தின்
வித்தின் முளைத்த அங்குரம்கொல்?
வேறே சிலகொல்? மெய்ம்முகிழ்த்த
தொத்தின் தொகைகொல்? யாதென்று
பல்லுக்கு உவமை சொல்லுகேன்! ! 5388
- சுந்தர காண்டம், உருக் காட்டு படலம்
இராமபிரானுடைய பற்களுக்கு உவமை முத்துக்களோ? முழுமதியினுடைய துண்டுகளின் வகைகளோ? அமுதமாகிய செல்வத்தின் துளியும் வெள்ளியின் கூட்டமும் முறையாக தொடுக்கப் பெற்றனவோ? பல்வேறு வகைப்பட்ட அறத்தினுடைய விதையிலிருந்து தோன்றிய முளைகளோ? சத்தியத்திலிருந்து தோன்றிய பூங்கொத்தின் கூட்டமோ? இவற்றில் வேறுபட்ட சிலபொருள்களோ? இவற்றுள் எது என்று கூறுவேன் என்று இராமபிரானுடைய பற்களின் வெண்மையைக் குறித்துச் சிறப்பாகக் கம்பர் கூறுகிறார்.
வள்ளுவர் கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை என்கிறார்.
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். 577 கண்ணோட்டம், திருக்குறள்
இதையே பார்வைக்கு அணி கூர்மையான கண்ணோட்டம் என்றும், அழகான கண்கள் முகத்தில் இருந்தாலும், அல்லல் அடைந்தவர்களைக் கண்டபோது இரங்கி அருளவில்லையானால் அவைகள் பொல்லாத புலைக் குருடேயாகும் என்றும் கவிராஜ பண்டிதர் குறிப்பிடுகிறார்.
ஒவ்வொரு மனிதரும் குற்றமற்ற நலந்தரும் இனிய சொற்களையே பேச வேண்டும். அதுவே மனிதராய்ப் பிறந்தவர்க்கு அணிகலனாகும்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 60 வாழ்க்கைத் துணைநலம்
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே ஆகும்.
இக்கருத்தை வலியுறுத்தி நற்பண்புடைய மனைவியே வீட்டிற்கு நல்ல அணியாகும் என்றும், நன்மக்களைப் பெறுவதே அந்த வீட்டின் செல்வங்கள் ஆகும் என்றும் கவிராஜ பண்டிதர் கூறுகிறார்.