சும்மா இருத்தல் சுகம்- பாகம் 2

சும்மா இருத்தல் சுகம்- பாகம் 2

அங்கிங்கே பாய்ந்தலையும் உள்மனதை ஓரிடத்தில்
தங்கவைத்து ஓரிலக்கை த்யானித்து - அங்குள்ளே
எம்மா திரியான எண்ணமும் எண்ணாமல்
சும்மா இருத்தல் சுகம்

பூரகத்தில்* உள்ளிழுத்து கும்பகத்தில்* உள்ளிருத்தி
ரேசகத்தில்* ப்ராணனையே விட்டிட்டு# - நேராக
சம்மண மிட்டமர்ந்து சிந்தை நிலைநிறுத்தி
சும்மா இருத்தல் சுகம்.

கடலின் அலையென ஓயா ததிரும்
உடல்மன ஆட்டம் அடக்கி - விடியலில்
நிம்மதி ஆக இமைகளை மூடியே
சும்மா இருத்தல் சுகம்.


அம்புலியைத் தன்தலையில் கட்டிவைத்த உச்சியின்மேல்^^
சும்மாடு** போலணிந்து கங்கையினைத் தாங்கிநின்ற
பெம்மானை என்றென்றும் சிந்தை தனிலிருத்தி
சும்மா இருத்தல் சுகம்

* பூரகம் என்பது தன்னியல்பாக மூச்சை நீட்டி உள்ளிழுப்பது; கும்பகம் மூச்சை இழுக்காமலும், வெளிவிடாமலும் நிலை நிறுத்துவது. ரேசகம் மூச்சை நீட்டி வெளிவிடுவது.
இவை பிராணாயாமத்தின் மூன்று பகுதிகள்.
# வெளியில் விட்டு
^^ - உச்சி - தலையில் முடிந்த முடி, குடுமி
** சும்மாடு = பாரத்தைத்தாங்க உதவும்படி தலையிற்கொள்ளும் அணி

எழுதியவர் : கணித்தோட்டம் ramesh (16-Dec-17, 8:57 am)
பார்வை : 102

மேலே