பாலியல் குற்றங்களைத் தடுக்க என்ன வழி- மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதி கிருபாகரன் 25 கேள்விகள்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தடுக்க என்ன செய்ய போகிறோம் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், மத்திய மாநில அரசுகளுக்கு அடுக்கடுக்கான 25 கேள்விகளை முன்வைத்து அவற்றிற்கு வரும் ஜனவரி 10-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

மனநலம் குன்றிய 60 வயது மூதாட்டியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பாலியல் வல்லுறவு கொண்ட இரு இளைஞர்கள், இரு சிறார்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கில் இளைஞர்கள் ஆண்ட்ரூஸ், பிரபு ஆகியோர் ஜாமீன் கோரிய வழக்கில் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கில் நீதிபதி என். கிருபாகரன் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவில் "பாரதமாதாவே, உன் நிலத்தில் ராட்சஸர்களால் உனது மகள்கள் எப்படி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் பார். அந்த ராட்சஸ ஜென்மங்களை மனித இனம், மிருக இனம் எவற்றிலும் சேர்க்க முடியாது". உ.பி.யில் 100 வயது மூதாட்டியை குடிகாரன் ஒருவன் பாலியல் வல்லுறவு கொள்கிறான். சண்டிகரில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான 10 வயது சிறுமி குழந்தை பெற்றெடுக்கிறாள்.

தனது பிள்ளைகள் முன்னிலையிலேயே, 18 மாத குழந்தையிடம் பாலியல் வல்லுறவு கொள்கிறான். உ.பி.யில் 4 பேர் கொண்ட கும்பல் 33 வயது பெண்ணை பட்டப்பகலில் கூட்டாக பாலியல் வல்லுறவு கொள்கின்றனர்.

ம.பி-யில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு கொண்டதால் தீக்குளிக்கிறாள். சென்னையில் 7 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்டு எரித்து கொள்கிறான்.

ஒருவர் மீதான பாலியல் தாக்குதல் என்பது அவர்களுக்கு ஆறாத வடுவையும், மனவலியையும் தருகிறது. ஒவ்வொருவருக்கும் தங்கள் உடல் மீதான உரிமையில், அவர்களின் அனுமதி இல்லாமல் யாரும் தலையிட முடியாது.

2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா மீதான கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பிறகு பல சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. இவ்வளவு சட்டங்கள் இருந்தாலும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இந்த குற்றங்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு குற்றங்கள் தடுக்கப்படவேண்டும்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2005-ல் 1 லட்சத்து 55 ஆயிரத்து, 553 ஆகவும் அது படிப்படியாக உயர்ந்து 2016ல் 3 லட்சத்து,38 ஆயிரத்து, 954 ஆக உள்ளது.

பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 2005-ல் 18 ஆயிரத்து 359 ஆகவும் அது படிப்படியாக உயர்ந்து 2016ல் 39 ஆயிரத்து 068 ஆக உள்ளது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க வேண்டிய அவசர நிலையில் நாம் இருக்கிறோம். எனவே பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஜனவரி 10ஆம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதி கிருபாகரன் அடுக்கடுக்கான 25 கேள்விகளை முன் வைத்து இந்த வழக்கில் பதிலளிக்க உத்தரவிட்டார்.

அந்த கேள்விகள் வருமாறு:

1. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் பெருக காரணம் என்ன?

2. இதுதொடர்பான புகாரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை என்ன பிரச்சினைகளை சந்திக்கிறது?

3. இந்த குற்றங்களில் கடந்த 10 ஆண்டுகளில் பதியப்பட்ட, வழங்கப்பட்ட தண்டனை விகிதம் என்ன?

4. டி.என்.ஏ. மற்றும் கைரேகைகளை கொண்டு இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

5. உடுமலை சங்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க கண்காணிப்பு கேமரா உதவியாக இருந்ததுபோல, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை மத்திய மாநில அரசுகள் ஏன் பொருத்தக்கூடாது

6. நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான குற்றங்கள் நடைபெறும் நிலையில், டி.என்.ஏ மற்றும் கைரேகை ஆய்வு மையங்களை ஏன் மத்திய மாநில அரசுகள் அமைக்கக்கூடாது.

7. பாலியல் கொடுமைகளில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆலோசனை, ஆதரவு, நிவாரணம் ஆகியவை வழங்கப்படுகிறதா?

8. பெண்கள் மீதான குற்றங்கள் பெரும்பாலானவை வெளியில் கொண்டு வரப்படுவதில்லை என்பது உண்மையா?

9. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான கொடுமைகளுக்கு மதுவும் காரணமா?

10. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான கொடுமைகளால் கருக்கலைப்பு, சிசுக்கொலை நடப்பதுதான் ஆண் - பெண் பாலின விகிதாச்சாரம் குறைவதற்கான காரணமா?

11. கூட்டு பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதற்கான காரணம் என்ன?

12. இந்தியாவில் உள்ள ஆண்களின் பாலியல் வேட்கைதான் இந்த குற்றங்களுக்கான காரணமா?

13. பாலினம் குறித்த போதிய ஞானம் இல்லாததுதான் காரணமா?

14. பெண்களை போகப்பொருளாக நினைப்பதும், பெண்கள் மீதான ஆளுமையை காட்ட வேண்டும் என்பதுதான் இந்த குற்றங்களுக்கான காரணமா?

15. இணையதளம், ஸ்மார்ட் போன்களில் ஆபாசம் தொடர்பான தகவல்கள் கிடைப்பதும் இந்த குற்றங்களுக்கு காரணமா?

16. இப்போது தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் திரைப்படங்கள், தொடர்கள்தான் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பாலியல் வேட்கையை தூண்டுகின்றனவா?

17. வயதுக்கேற்ற பாலியல் கல்வியை வழங்கும் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன?

18. நன்னெறி கல்வியை ஆண்களுக்கான பாடத்திட்டத்தில் ஏன் மத்திய மாநில அரசுகள் சேர்க்கக்கூடாது?

19. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான கொடுமைகளுக்கான கடுமையான தண்டனைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் ஏன் அதிக அளவில் விளம்பரப்படுத்த கூடாது?

20. ஆண்களுக்கு நிகராக பெண்களை மதிக்க வேண்டும் என்பது குறித்து திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், சமுதாயத்தில் அந்தஸ்து மிக்கவர்கள் மூலம் அறிவுரை வழங்க கூடாது? குறும்படங்கள் மூலம் கூட ஏன் அறிவுரை வழங்க கூடாது?

21. இந்த குற்றங்களுக்கான காரணங்களை கண்டறிவதற்கும், சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கும் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு ஏன் ஏற்படுத்தக்கூடாது?

22. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை காண்டறியவும், அவர்கள் அதுபோன்ற குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கவும் ஒவ்வொரு பள்ளியிலோ அல்லது 5 பள்ளிகளுக்கு ஒரு பள்ளியிலோ பயிற்சி பெற்ற ஆலோசகர்களையும், உளவியல் நிபுணர்களையும் மத்திய மாநில அரசுகள் ஏன் நியமிக்கக்கூடாது?

23. பாலியல் வன்கொடுமை, பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்படும் மாற்று திறனாளிகளுக்கான ஒரே மாதிரியான இழப்பீடு வழங்குவதற்கான திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ளதா?

24. தனது எதிரிகளை பழிவாங்கும் நோக்குடன் போலியான புகார்கள் கொடுக்கப்படுகின்றன என்பது உண்மையா?

25. இதுபோன்ற கொடுமைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நவீன தொழில் நுட்பச் சாதனங்களை ஏன் வழங்க கூடாது?

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய உள்துறை, மகளிர் நலத்துறை, தேசிய மகளிர் ஆணையம், தமிழக உள்துறை, தமிழக டிஜிபி ஆகியோர் இந்த வழக்கில் சூமோட்டோவாக சேர்க்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவரது உத்தரவில் கூறியுள்ளார்.

எழுதியவர் : (18-Dec-17, 3:34 am)
பார்வை : 66

மேலே