துன்பத்திலும் கிடைத்த நன்மை

‘ஏங்க ! நல்லா ஞாபகம் வைச்சுங்கோங்க..நமக்குப் பணம் முக்கியம். நம்ம பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கணும். அதுக்கு ஏத்தமாதிரி பேசி பணத்தை வாங்கப் பாருங்க. வட்டியை மாதா மாதம் கட்டிடலாம்.அசலை ஒரு வருடத்திலே திருப்பிக் கொடுத்துடலாமுன்னு சொல்லுங்க..’ என்றாள் சட்டையை மாட்டி கிளம்பிக்கொண்டிருந்த தனது கணவரிடம் கமலம்.
‘ ஏ! கமலம் ! நான் என்ன விவரம் இல்லாத ஆளா என்ன ? என்னவோ இதுவரை கடன்னு வாங்கிப் பழக்கமில்லாத காரணத்தால் கேட்கிறதுக்கு தயக்கமா இருக்கு அவ்வளவுதான் ‘ என்றார் ஆறுமுகம்.
‘அதுக்குத்தாங்க நானும் சொல்றேன்..தயங்கித் தயங்கி போன காரியத்தை மறந்துட்டு வந்திடப் போறீங்கன்னுதான் திரும்பத் திரும்பச் சொல்றேன்’
‘சரி கமலம்! நான் கிளம்புறேன் ‘
‘ஏங்க கைச்செலவுக்குப் பணம் எடுத்துக்கிட்டீங்களா ?’
அப்போதுதான் சட்டைப் பையைத் தடவிப்பார்த்த ஆறுமுகம் உணர்ந்தார். பணம் எடுத்து வைக்க மறந்ததை...
‘இல்லை கமலம் ! மறந்துட்டேன். நல்ல வேளை ஞாபகப்படுத்தினே..’ என்றவர் பணத்தை எடுத்து சட்டைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு கிளம்பினார்.
கணவர் கண்ணில் இருந்து மறையும் வரை, வாசலில் நின்று பார்த்துக் கொண்டு நின்ற கமலம், அவர் தெருவின் திருப்பத்தில் திரும்பி மறைந்ததும், வீட்டிற்குள் சென்று மீதம் கிடந்த வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். ஆனால் மனம் மட்டும் அடித்துக் கொண்டது போற வேலை நல்லபடியாக முடிய வேண்டுமே என்று.

ஆறுமுகம் வீட்டிலிருந்து கிளம்பிட்டாரே ஒழிய, அவரது உள்ளம் படபடவென்று அடித்துக் கொண்டே தான் இருந்தது. என்னதான் பழகிய நண்பராக இருந்தாலும் , எப்படி கடன் கொடுன்னு வாய்விட்டுக் கேட்கிறதுன்னு தவித்துக் கொண்டு இருந்தது அவர் மனம். தொலைபேசியில் தான் வருவதாகச் சொல்லி இருந்தாலும் , ஏன் வருகிறேன் என்று அவர் சொல்லிக் கொள்ளவில்லை. நண்பரும் எதுவும் கேட்டுக் கொள்ளவும் இல்லை . ‘வருகிறேன் ‘ என்று சொல்லும் நண்பரிடம் ‘எப்படி, எதுக்கு வருகிறாய்?’ என்று கேட்பது நாகரிகம் இல்லை என்று விட்டு விட்டார் போலும்.
மெல்ல நடந்து பேரூந்து நிறுத்தத்தில் வந்து நின்றார். அடுத்த பேரூந்து வருவதற்கு இன்னும் அரைமணி நேரம் இருந்தது. சரி அதுவரை உட்காரலாமே என்று, அங்கே இருந்த டீக் கடையின் முன்னால் இருந்த திண்ணையில் அமர்ந்து, அன்றைய நாளிதழை எடுத்துப் புரட்டினார்.
‘கல்லூரி மாணவி குத்திக் கொலை’ காதலன் தலைமறைவு ‘ எனும் செய்திதான் அவர் கண்ணில் பட்டது. சட்டென புரியாத பயமொன்று அவர் மனதில் ஒட்டிக் கொண்டது. மேலே படித்தார். ‘காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தினான் ‘ என்று படித்ததும் ,தனது மகளுக்கு எவ்வளவு சீக்கிரம் மணம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என்னும் பரபரப்பு அவரது உள்ளத்தில் அழுத்தமாக வேரூன்ற ஆரம்பித்தது . அப்படி ஒரு நிலமை தனது மகளின் வாழ்வில் நடந்துவிட்டால் என்று நினைக்கும் போதே நெஞ்சம் வெடிப்பது போல் இருந்தது. அந்த எண்ணத்திலே எவ்வளவு நேரம் இருந்தோம் என்பதே தெரியாமல் இருந்த ஆறுமுகம், பேரூந்து வந்து ஒலி எழுப்பி நின்றபோதுதான் தன் நினைவுக்கு வந்தார்.
அதற்குள் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறத் தொடங்கி விட்டார்கள். வரிசையில் நின்றுதான் ஏறவேண்டும் என்னும் ஒரு நல்ல பண்பாடு என்றுதான் உருவாகுமோ ? என்று எண்ணமிட்டவராக, பேரூந்தின் படிக்கட்டை நெருங்கினார். எல்லோரும் ஏறிய பின், கடைசியாக ஏறுவதற்காக படிக்கட்டில் ஒரு காலை வைத்து, ஆதரவுக்காக படிக்கட்டில் இருந்த கைப்பிடியைப் பிடிப்பதற்காகக் கையை நீட்டினார்.
இவர் ஏறுவதை கவனிக்கவில்லையா ? இல்லை ஏறிவிட்டார் என்று நடத்துநர் நினைத்தாரா என்று தெரியவில்லை, நடத்துநர் விசில் கொடுக்க, ஓட்டுநரும் பயணிகள் ஏறிவிட்டார்களா என்று பார்ப்பதற்காக பொருத்தப் பட்டிருந்த கண்ணாடியை சரியாக கவனிக்காமலே பேரூந்தை கிளப்பி விட்டார் .இதைச் சற்றும் எதிர்பாரத ஆறுமுகம், நிலைத் தடுமாறி சாலையில் விழுந்துவிட்டார்.
விழுந்த அதிர்ச்சியில் ஆறுமுகம் மயங்கிக் கிடந்தார். சாலையில் கிடந்த கல்லொன்றில் அவரது தலை மோதிவிட , தலையிலிந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. உடலிலும் ஆங்காங்கே உரசி, இரத்தம் கசியத் தொடங்கியது. காலில் பலமான அடியும் பட்டிருந்தது.
பேரூந்தில் இருந்த பயணிகள் கத்தி கூச்சல் போடவே, சிறிது தூரம் ஓடிய பேரூந்து நிறுத்தப்பட்டது. பேரூந்தில் இருந்தவர்கள் இறங்கி ஓடி வந்தார்கள். ஓட்டுநரும், நடத்துநரும் இறங்கி வந்துவிட்டார்கள். ஆறுமுகத்தைச் சுற்றி கூட்டம் கூடியது. அதற்குள் ஒருவர் சோடா ஒன்றை வாங்கிவந்து ,மயங்கிக் கிடந்தவர் முகத்தில் தெளித்தார். சற்று மயக்கம் தெளிந்து நெளிந்தார். அதற்குள் ஓட்டுநர் ஓடிப்போய், வண்டியில் இருந்து துண்டும், தண்ணீரும் எடுத்து வந்து, துண்டை நனைத்து அடிபட்டு இரத்தம் கொட்டிய இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்தார். சற்று மயக்கம் தெளிந்தவர் வாயில் கொஞ்சம் சோடாவை ஊற்றி குடிக்க வைத்தார்கள். ஆறுமகம் எழுந்து உட்கார முயன்றார். ஆனால் காலில் பட்ட அடியால் வலி அதிகமாகத் தெரியவே, ‘ஆ’ வென்று கத்தினார்.
தன்னைச் சுற்றி கூட்டம் கூடி நிற்பதைப் பார்த்த பின்புதான், என்ன நடந்திருக்கிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
‘ஐயோ ! தனது பயணம் தடைபட்டு விட்டதே ! பொண்ணு கல்யாணம் நின்னு போயிடுமே ‘ என்னும் கவலை அவரை வாட்டத் தொடங்கியது.
‘ஐயா ! எப்படி இருக்கிறது ? ‘ என்று பணிவோடு கேட்டார் நடத்துநர்.
அதற்குள் கூட்டத்தில் ஒருத்தர் ‘ என்னய்யா வண்டி ஓட்டுறீங்க.. ஏறிட்டாங்களான்னு பார்த்துட்டு வண்டியை எடுக்க வேண்டாமா ? அவ்வளவு என்னய்யா அலட்சியம் ‘ என்று தனது கோபத்தைக் கொட்டினார்.
இவரது கோபத்தைப் பொருட்படுத்தாத ஓட்டுநரும், நடத்துநரும் ஆறுமுகத்தைக் கவனிப்பதிலேயே கவனமாக இருந்தார்கள்.
‘’ஐயா ! உங்களால் நடக்க முடியுமா ?’ என்றார் நடத்துநர்.
‘கால் ரொம்ப வலிக்கிறது’ என்றார் ஆறுமுகம். அடிபட்டவரின் வேதனையை உணர்ந்து கொண்ட நடத்துநர், தனது முதலாளிக்குத் தொலைபேசியில் தகவல் சொன்னார். அவரும் உடனே வருவதாகவும், அதுவரை அருகில் இருந்து பார்த்துக் கொள்ளும் படியும் கூறவே, ஆறுமுகத்தை கைத்தாங்கலாக தூக்கி டீக் கடை திண்ணையில் படுக்க வைத்தனர்.
ஒட்டுநரும் நடத்துநரும் நல்ல மனுசங்கய்யா.. யாரு விழுந்தாலென்ன, அடிபட்டாலென்ன என்று கண்டுக்காமல், தங்களது வருமானத்தை மட்டுமே பார்க்கும் இந்தக் காலத்திலும் அடிபட்டவரை கூடவே இருந்து கவனிக்கிறாங்கய்யா என்றும் சிலர் பாராட்டினார்கள்.
அதற்குள் பேரூந்து முதலாளியும், தனது பணியாளர்களுடன் அங்கு வந்துவிடவே, ஓட்டுநரும், நடத்துநரும் என்ன நடந்தது என்பதை அவரிடம் எடுத்துச் சொன்னார்கள்..நிலமையை உணர்ந்த முதலாளியும் ,
‘ சரி ! பயணிங்க காத்துட்டு நிற்கிறாங்க நீங்க வண்டியை எடுத்துட்டு கிளம்புங்க.. இவரை நான் மருத்துவ மனையில் சேர்த்துடுறேன் ‘ என்று கூறிவிட்டு, ஆறுமுகத்தின் அருகில் வந்த முதலாளி,
‘ஐயா ! மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ தவறு நடந்து விட்டது’ என்றார்.
தனது பணியாளர்களின் உதவியுடன் ஆறுமுகத்தை மெதுவாகத் தூக்கி தனது வண்டியில் படுக்க வைத்து தானும் ஏறிக்கொண்டு நேரே மருத்துவ மனைக்குச் சென்றார்.. அங்கே மருத்துவரிடம் நடந்தவைகளை எடுத்துக் கூறி, ஆறுமுகத்திற்கு உரிய சிகிச்சை அளிக்கும் படிக் கேட்டுக் கொண்டார். காவல் துறைக்கும் தகவல் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்கும் படிக் கூறினார்.
கீழே விழுந்ததால் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கும் கட்டுப் போட்டு, தலையிலும் கட்டுப் போடப்பட்டு மருத்துவமனைப் படுக்கையில் சேர்க்கப்பட்டார் ஆறுமுகம். தகவல் அறிந்து கமலமும் ஓடிவந்தாள் அவருக்கு அருகில் அமர்ந்து ஆறுதல் கூறுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவளால்.
குறைந்தது ஒரு மாத காலமாவது ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு, ஆடிப் போய்விட்டார் ஆறுமுகம். விபத்தால் ஏற்பட்ட வேதனையை விட ‘தனது மகளின் கல்யாணம் நின்று போய் விடுமோ ?’ என்னும் வேதனை தான் அவருக்கு அதிகமாக இருந்தது..
விபத்தைப் பற்றி கேள்விப்பட்ட ஊடகங்கள் ஒவ்வொன்றாக வந்து பேட்டி கண்டு சென்றார்கள். ஓட்டுநர், நடத்துநரின் கவனக் குறைவால் ஏற்பட்ட விபத்து. உரிய இழப்பீட்டுத் தொகையினை பேரூந்து நிறுவனம் கொடுக்க வேண்டும் என்று எழுதப்பட்டு அன்றைய மாலை செய்தித் தாள்களில் வந்திருந்தன.
விபத்து நடந்த மறுநாள், கமலா தனது கணவருக்கு மதிய உணவைக் கொடுத்து, தர வேண்டிய மாத்திரைகளையும் கொடுத்து , அவர் தூங்கிய பின்பு, படுக்கையின் ஓரத்தில் ஆறுமுகத்தின் காலடியில் உட்கார்ந்திருந்தாள். அப்போது இரண்டு பேர் கமலத்திடம் வந்து,
‘அம்மா ! நீங்கதான் அவரோட மனைவியா ?’ என்றார்கள்.
யாரோ ,எவரோ என்று பயந்த கமலம் எழுந்து நின்று,
‘ஆமாங்கய்யா . நீங்க ‘ என்று இழுத்தாள்.
‘நாங்க இரண்டு பேரும் வக்கில்கள். உங்க கணவருக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றி செய்தித்தாள்களில் படித்து விட்டு வந்திருக்கிறோம். இந்த விபத்துக்குக் காரணமானவர்களிடமிருந்து நீங்க இழப்பீட்டுத் தொகை கோருவதற்கான வழிகள் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளன. நீங்க சரின்னு சொன்னீங்கன்ன நாங்க அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து இழப்பீட்டுத் தொகையினை வாங்கித் தருகின்றோம். நீங்க எதுவுமே செய்ய வேண்டாம் . நாங்க சொல்ற விண்ணப்பங்களில் மட்டும் கையெழுத்துப் போட்டுத் தந்தால் போதும். என்ன சொல்றீங்க...’என்றார்கள்.
‘ஐயா ! உங்களுக்கு ரொம்ப நன்றி.. ஆனா நீங்க சொல்றதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது.அவரு தூங்கி முழிச்சி எழுந்ததும் பேசிட்டு சொல்றேன் ‘ என்றாள் கமலம்.
‘சரிங்கம்மா ..நாங்க நாளைக்கு வர்றோம்.. அப்புறம் ஒண்ணு . வேறு யாராவது வந்து இதுபற்றி பேசினாங்கன்னா , ஏற்கெனவே ஏற்பாடு செய்திட்டோமுன்னு சொல்லிடுங்க. மறந்திடதிங்க ‘ என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்கள்.
அவர்கள் எதற்கு, எதைப் பற்றி பேசினார்கள் என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத கமலம், தனது கணவர் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தாள்.. எதை எதையோ பற்றிய எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, கண்களில் கண்ணீர் பொங்கி நின்றது.
கணவர் கண்விழித்து விட்டதைக் கண்ட கமலம் ,சட்டென தன்னைத் தயார் படுத்தி, முகத்தை புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு,,
‘ஏங்க இப்போ எப்படி இருக்கு...காலிலே வலி இருக்கா..தலைவலி எப்படி இருக்கு’ என்று கேட்டாள். ‘கமலம்! அடிபட்ட வலி கொஞ்ச நாள் இருக்கத்தான் செய்யும்.அதைத் தாங்கித்தான் ஆகணும்.ஆமாம் கமலம் நம்ம பொண்ணு எப்படி இருக்கா .பாவம் அவளுடைய கல்யாணம் தான் ..நினைச்சா நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு..’ என்றவரின் கண்கள் கலங்க, கண்ணீர் பெருகி நின்றது,கமலத்துக்கு நன்றாகவே தெரிந்தது.
‘இப்போ ..அதுபற்றி ஏங்க கவலை..எல்லாம் நடக்கிறபடிதான் நடக்கும்’ என்று ஆறுதல் கூறினாலும் கமலத்தின் உள்ளத்திலும் ஒருவித கலக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதனை வெளிக்காட்டினால் கணவர் இன்னும் வருத்தப்படுவார் என்று உள்ளத்துக்குள்ளே மறைத்துக் கொண்டாள்.
‘ஏங்க..நீங்க தூங்கிட்டு இருந்தப்ப இரண்டு வக்கில்கள் வந்தாங்க..ஏதோ கையெழுத்து மட்டும் போட்டால் போதும் ,இழப்பீட்டுத்தொகை வாங்கித்தர்றோமுன்னு சொன்னாங்க.’
‘அப்படியா? நீ என்ன சொன்னே ?’
‘எனக்கு அதுபற்றியெல்லாம் எதுவும் தெரியாது..உங்க கிட்டே கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே ,பேரூந்தின் முதலாளி அங்கு வந்தார்.
‘ஐயா ! எப்படி இருக்கீங்க..வலி குறைஞ்சிருக்கா ?எதைப் பற்றியும் கவலைப்படாம நல்லா ஓய்வெடுங்க..ஏதாவது பிரச்சனை என்றால் கூச்சப் படாம சொல்லுங்க . நான் பார்த்துக்கிடுறேன்’
‘ஐயா ! இதுவரை எந்தக் குறையும் இல்லை ‘
‘அப்புறம்..உங்க குடும்பத்தைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டேன்.உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்கப் போவதாகவும் , அதற்கான பணத்துக்காகத்தான் அலைந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.. மனசுக்கு ரொம்ப சங்கடமா போச்சு..கவலைப் படாதீங்க.. எவ்வளவு பணம் ஆகுமுன்னு சொல்லுங்க நானே ஏற்பாடு பண்ணி, உங்க பொண்ணு கல்யாணத்தை முன்னின்று நடத்துகிறேன் ‘ என்றார்
‘ஐயா ! அவ்வளவு பெரிய உதவியா ?’ என்றார் ஆறுமுகம்.
‘இதை உதவின்னு சொல்ல முடியாது. அதில சுயநலமும் கலந்துதான் இருக்கு. ஏன்னா யாராவது வக்கில்கள் வருவாங்க.. வழக்குப் போட்டு இழப்பீட்டுத் தொகை வாங்கித்தர்றேன், எனக்கு இவ்வளவு தொகை கொடுத்துடுங்கன்னு சொல்வாங்க..நீங்களும் வழக்கு நீதிமன்றமுன்னு அலை அலைன்னு அலைவீங்க.. அந்த வழக்கு முடிந்து..பணம் உங்க கைக்கு வந்து சேர எவ்வளவு காலமாகுமுன்னு தெரியாது. அதனால நானே உங்களுக்கு ஒரு தொகையினை கொடுத்து விடுகிறேன். நமக்குள்ளே பேசி முடிவு செய்து கொண்டு வீண் அலைச்சலையும், செலவையும் குறைப்பதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்தலாம். என்ன சொல்றீங்க .’ என்றார்.
‘ஐயா ! நீங்க சொல்றதப் பற்றி யோசிக்க எனக்கு அவகாசம் வேண்டும் ‘ என்றார்.
‘நாளைக்கு வருகிறேன். யோசித்து வையுங்க ‘ என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.
ஆறுமுகம் அதுபற்றி யோசித்தார். தன் மனைவிக்கும் விபரமாக எடுத்துச் சொல்லி அவளையும் சம்மதிக்க வைத்தார். தெரிந்தவர்களிடம் இதுபற்றி பேசி தன்னையும் தெளிவு படுத்திக்கொண்டார். எல்லோரும் சமாதான திட்டம் தான் சிறந்தது .அதற்கு ஒத்துக்கிடலாம் என்று கூறவே ஆறுமுகமும் ஒரு முடிவுக்கு வந்தார்.
ஒரு மாத காலத்தில் ஆறுமுகத்தின் உடல் நிலை நன்கு தேறிவிட்டது. தேவையான பணத்தையும் பேரூந்து முதலாளி தந்ததால் , மகளின் திருமணத்தைக் கடனே வாங்காமல் சீரும் சிறப்பாக குறிப்பிட்ட நாளில் நடத்தி வைத்தார்.
யாருக்கு எப்படியோ தனக்கு நடந்த விபத்து துன்பத்தைத் தந்தாலும் நன்மையில் தான் முடிந்திருக்கிறது. வேதனையிலும் ஒரு சாதனையைத் தந்த அந்த விபத்துக்கும், பெருந்தன்மையோடு நடந்துக்கிட்ட அந்த பேரூந்து முதலாளிக்கும் அவரது உள்ளம் நன்றி கூறிக்கொண்டது.
***********************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (20-Dec-17, 9:59 pm)
பார்வை : 209

மேலே