கம்பன் மனைவி -----கம்பன் ---கம்ப ராமாயண யுத்த காண்டம்

அட, நம்ம வீட்லதான், டெலிவிஷன் ஸீரியல் (SERIAL) பார்க்கும் ஆர்வத்துல அடுப்புல பாலைப் பொங்கவீட்டு வீடு முழுதும் மணக்க வைக்கறா என் மனைவின்னு நான் நினைச்சேன்; தப்பு; தப்பு; தப்பு.

இதெல்லாம் நம்ம வீட்ல மட்டும் இல்ல. கம்பன் வீட்லேயும்தான். அவன் ஆயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்தபோதும் அவன் மனைவி அரட்டைக் கச்சேரியில் மற்ற பெண்களோட சேர, வீட்ல பால் பொங்கியது கூடத் தெரியல்ல. கம்பன் போய், பாலில் தண்ணீரைத் தெளித்து பால் பொங்குவதை நிறுத்தினான்.

இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரிஞ்சுச்சு? என்று கேட்கிறீர்களா?



கம்ப ராமாயண யுத்த காண்டம் படித்தபோது அவன் பத்தே பாடல்களில் அள்ளித் தெளித்த மூன்று உவமைகளில் ஒன்று, அடுப்பில் பால் பொங்கும்போது, அதைத் தணிக்க தண்ணீர் தெளிக்கும் உவமையாகும்!

என்ன அற்புதமான உவமை பாருங்கள். நாம் அன்றாடம் காணும் நிகழ்ச்சி கம்பன் வீட்டிலோ அல்லது அவர் போன நண்பர் வீட்டிலோ நடந்திருக்க வேண்டும். அதைக் காளிதாசன் போல தகுந்த இடத்தில் பயன்படுத்தியதே அவன் சிறப்பு.

இதோ பாருங்கள் கம்பன் பாடலை:-



இராமன் சினம் எப்படித் தணிந்தது என்று வருணனை வழி வேண்டு படலத்தில் இது வருகிறது.

பருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படரா நின்ற

உருப்பெறக் காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன

அருப்பறப் பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல்

நெருப்பு உறப் பொங்கும் வெம்பால் நீர் உற்றது அன்ன நீரான்



பொருள்

ஒரு பெரிய மலை எரிகின்றது என்று கண்டோர் எண்ணுமாறு பரவுகின்ற ஒளியுடைய தீ படர்கின்ற தன் வடிவத்தை நன்கு புலப்படுத்தி நின்று வருணன், ‘ நான் உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன்’ என்று கெஞ்சினான். அதனால் எரியும் தீயினால் பொங்கும் பாலில் நீர் தெளித்தது போன்ற தன்மை கொண்டவனாய் இராமன், சினம் தணியப் பெற்றான்.



அதாவது பொங்கும் பாலில் நீர் தெளித்தால் அது எப்படித் தணியுமோ அது போல பொங்கிய சினம் /கோபம் தணிந்தது.



இரண்டாம் உவமை- தீவினை உடையார்க்கே தீங்கு வரும்



இன்னொரு பாட்டில் எப்படி ‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’ என்று நாம் சொல்லுகிறோமோ அப்படி நல்லோர் கோபமும் நன்மையில் முடியும்’ என்கிறான் கம்பன்.

ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கெல்லாம்

ஏய்வனே நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ

மாய் வினை இயற்றி முற்றும் வருணன் மேல் வந்த சீற்றம்

தீவினை உடையார் மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே

பொருள்

தருமம் தவறாதவர்க்கு எல்லாம் நன்மையே வரும்; கெடுதல் வருமா? அழிவைச் செய்யக்கூடிய ராமனின் கோபம் வருணனுக்குத் தீமை செய்யாது அவுணர்க்கே தீமையைச் செய்தது அன்றோ!



பெரியோர் கோபம்= தீயோர்க்கு அழிவு





மூன்றாம் உவமை– தீபமும் சாபமும்



பாபமே இயற்றினாரை பல்நெடுங்காதம் ஓடி

தூபமே பெருகும் வண்ணம் எரியெழச் சுட்டது அன்றே

தீபமே அனைய ஞானத் திருமறை முனிவர் செப்பும்

சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா



பொருள்

இராமனின் அம்பு பல தூர காதம் சென்று புகையும் தீயும் தோன்றப் பாவச் செயலைச் செய்தவரைச் சுட்டதன்றோ? அந்த அம்பு எதைப் போன்றது என்றால் ஞான தீபமாக விளங்கும் மறைகளில் வல்ல முனிவர்கள் சபிக்கும் சாபத்தைப் போன்றது.

அதாவது ராமனின் அம்பு, முனிவரின் சாபம் போலத் தவறாமல் இலக்கைத் தாக்கி அழிக்கும்

அருமையான உவமை

இராமனின் அம்பு= முனிவரின் சாபம்



–சுபம் –
லண்டன் ஸ்வாமிநாதன்
பகிர்க

எழுதியவர் : (23-Dec-17, 2:35 am)
பார்வை : 72

மேலே