2017ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
காந்தள் நாட்கள் (கவிதைகள்)
Author: இன்குலாப்
Category: கவிதைகள்
Price.: 130.00
புதுடெல்லி,
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சாகித்ய அகாடமி அமைப்பு ஆண்டுதோறும் 24 இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படைப்புக்கான விருது மறைந்த கவிஞர் இன்குலாப் எழுதிய ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதை நூல் படைப்புக்கு வழங்கப்படுகிறது.
கவிஞர் இன்குலாப் சமூக அக்கறை தோய்ந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட கவிதைகளை படைத்தவர். இவரது படைப்புகள் இலக்கிய உலகத்தால் மட்டுமல்ல, போராட்டக்காரர்களுக்கும், தொழிற்சங்கத் தோழர்களுக்கும் உரம் சேர்க்கும் படைப்புகளாக விளங்குகின்றன. இவருடைய ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ எனும் கவிதை பல மேடைகளில் பாடப்படுகிறது. இன்குலாப் எழுதிய ‘அவ்வை’ நாடகம் பெண்ணியம் பேசும் நாடக மேடைகளில் முக்கியத்துவம் பெறும் படைப்பாக விளங்குகிறது.
தஞ்சாவூர் அகரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘காந்தள் நாட்கள்’ நூல் 2016-ல் வெளிவந்தது.
கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் கூறும்போது, “அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம். இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும் காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார். இன்குலாப் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை” என்று தெரிவித்தனர்.