கொடுமை உனக்கில்லை

கண்ணாலம் முடிஞ்ச
ஏழெட்டு வருசத்துல- நாலும்
பொட்டையா பொறந்ததுன்னு
கள்ளிப்பாலை வாயில ஊத்தி
கதை முடிச்சாங்க...
நெல்லு மணியை தொண்டையில அழுத்தி
உசிரை எடுத்தாங்க...
சூடா சூப்பு கொடுத்து
குடலை வேக வைச்சாங்க...
துணியை இறுக்கமாக்கட்டி
மூச்சுத் திணற அடிச்சாங்க...

பெத்த வயிறு துடிக்குதே
பேதையாகி தவிக்குதே
தடுக்க வழியில்லாம
தனிச்சு நின்னு மயங்குதே
பிரசவ வலி தீருமுன்னே
புதைச்ச ரணம் கொல்லுதே!

கள்ளமில்லாத வயசுங்கறதால
பழிவாங்காம கிடக்குதோ?
தெய்வமா மாறி கருணையோட
காவலுக்கு திரியுதோ?
கொன்னு போடற கிழவி உயிரு
நீண்டுகிட்டே இருக்குதே?
கொல்லச் சொல்லுற பய மக்க வாழ்வும்
நிச்சலனமா கிடக்குதே..?

கொல்ல வாசலைத் திறந்தாலே- நீ
அழுங்குரலு கேட்குதே
பூமியில காலு வைக்க- என்
நெஞ்சாங்குலை நடுங்குதே
எந்த இடத்துல என் ராசான்னு
தேடித்தேடி அலையுதே
எந்நேரமும் உன் நினைப்பு
என் உயிரைக் கொல்லுதே

கண்ணை உசத்திப் பார்த்தாலே
கட்டிப்போட்டு உதைக்கிற பூமி இது
பொம்பள சிரிச்சா போச்சுன்னு
புழுதிவாரி அடிக்கிற உலகம் இது
புள்ள பெக்கறது மட்டும்தான்
பொம்பளன்னு பேசிகொல்லுற பூமி இது
ராத்திரிக்கு மட்டும் தான்
பொண்டாட்டின்னு தேடுற உலகம் இது

நன்றியில்லாத மனுசனுக்கு
நாயா உழைக்கிறதை விட
நம்மைத்தாங்குற மண்ணுக்கு
உரமா போனதை
பெருமையா நினைச்சுடு
என் ராசாத்தி!
உன் மகளை
கொல்ல வேண்டிய
கொடுமை உனக்கில்லை
சந்தோஷமா உறங்கிடு
என் ராசாத்தி...

எழுதியவர் : kalavisu (29-Dec-17, 1:03 pm)
சேர்த்தது : kalavisu
Tanglish : kodumai unakkillai
பார்வை : 297

மேலே