உடைந்த வானம்

சற்றுமுன் தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையெங்கும் மேடு
பள்ளம் முழுதும் நீர் தேங்கி நின்றது... அப்போது தான் வேலைக்குச்
செல்வோர் கையில் குடையுடன் கடிகாரத்தில் நேரம் பார்த்தபடி, சாலையோர
விரோதிகளுக்கு பயந்து பயந்து நடக்க ஆரம்பித்தனர். அவர்களது பயப்படுதல்
தெரிந்தே, சில அசகாய சூரர்கள் தனக்கு புதிதாக கிடைத்த இருசக்கர
வாகனத்தில் பறந்து பாதசாரிகளை அழுக்குப்படுத்திக் கொண்டிருந்தனர்..

அப்போது தான் சாலையோர குழாய்க்குள் ஒதுங்கிப் படுத்திருந்தவன்..
மெல்ல கண் திறந்து பார்த்தான்.. சாப்பிட்டு முழுதாய் ஒரு நாள்
ஆகியிருந்தது.. விட்டு விட்டு மழை பெய்வதால், எங்கும் சென்று யாரிடமும்
சாப்பாடு கேட்கமுடியவில்லை. பசி மயக்கம் அவன் கண்ணில் அப்பட்டமாகத்
தெரிந்தது. மெல்ல வெளியே தடுமாறி தடுமாறி நடந்தான். யாராவது எதாவது
தரமாட்டார்களா என எதிர்பார்த்தபடி வெளியே வந்தவனுக்கு, அவசரமாய் ஓடும்
மக்கள் கூட்டம் தான் கண்ணில் பட்டார்கள். அவர்களிடம் பேசக் கூட முடியாது.
'வள் வள்' என விழுவார்கள்..

வழக்கமாக எப்போதும் செல்லும் டீக்கடைக்குப் போகலாமென
முடிவெடுத்தான். அதன் முதலாளி தான், நேற்று அதிகமாக இவனைத் திட்டி,
அடித்து கூட வைத்து விட்டார். அந்த வலியுடன் போனவன், இப்போது தான் வந்து
கொண்டிருக்கிறான். தூரத்தில் இவன் வருவதை, அவர் பார்த்து விட்டார் போல..
வேகமாக இவனை நோக்கி வரத் தொடங்கினார்..

இவனுக்கு பசியுடன் சேர்ந்து, அடிவயிற்றில் ஒரு பயமும் வந்துவிட்டது.
திரும்பிக் கூட போகலாமா என நினைக்க ஆரம்பித்த நொடி, அவர் பக்கத்தில்
வந்தே விட்டார்..

"வாப்பா.. ரொம்ப வலிச்சிச்சா.. நான் அடிச்சது.... நான் யாரையும்
கையோங்கி அடிச்சதில்ல.. ஆனா நேத்து என்னமோ தெரியல.. உன்ன
அடிச்சிட்டேன்.... அதுக்கப்புறம் ரொம்ப வருத்தமாயிருச்சு.. கை
ஏந்தறவங்களுக்கு உதவி செய்யாட்டியும் பரவால்லா... உபத்தரவமாவது செய்யாமா
இருக்கணுமேனு மனசுகுப் பட்டுச்சு.. அப்ப இருந்து நீ எப்ப வருவே...
வருவேன்னு பார்த்துட்டே இருந்தேன்.. அப்ப இது கூட யோசிச்சேன்.. ஒரு
கையேந்திர நிலையில இருக்கறவங்களயாவது, நாம அதிலிருந்து மாத்தினா, அது சில
பேரு மனத தாக்கினா, இன்னும் சில பேருக்கு ஒரு நல்ல காலம் பொறக்கும்... அத
நான் உங்கிட்ட இருந்து தொடங்கலாமுன்னு இருக்கேன்.. இப்ப கடைக்கு வா..
என்ன வேணுமோ வயிறார‌ சாப்பிடு.. அப்பறம் கொஞ்சம் காசு தரேன்... அதுல
கொஞ்சம் நல்ல துணிமணி வாங்கிக்க.. கடையில எங்கூட ஒத்தாசையா இரு.. கொஞ்சம்
சம்பளம் தரேன்.. என்ன நான் சொல்றது,,"

அவர் பேச பேச இவனுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது... உடைந்து
அழுக வேண்டும் போல தோணியது... அப்போது அவனது காலடியில் திப்பி திப்பியாய்
அங்கும் இங்கும் கிடந்த தண்ணீரில் உடைந்து போய் கிடந்த வானம், இவன் நிலை
கண்டு மெல்ல ஆனந்தக் கண்ணீர் உதிர்க்க ஆரம்பித்தது...

எழுதியவர் : Velanganni A (29-Dec-17, 10:45 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : udaintha vaanam
பார்வை : 135

மேலே