உழைத்த பணம்

உழைத்த பணம்

வீட்டில் மளிகை தீர்ந்து விட்டது என்பதை முருகன் மனைவி, குழந்தைகள் முன்னால் சத்தமாய் சொன்னபோது எப்பொழுதும் வரும் கோபம் அப்பொழுது வராமல் “பார்க்கலாம்” என்று முருகன் சொன்னதை அதிசயமாய் பார்த்தாள் அவன் மனைவி.
“பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டானே தவிர அண்ணாச்சி கடை முன்னால் தலையை சொறிந்து அவநம்பிக்கையுடன் தான் நின்றான். அண்ணாச்சி இழுத்தான்..என்ன பம்புக்காரறே பாக்கி இந்த மாசம் அப்படியே நிக்கே? அண்ணாச்சி முன்னெச்சரிக்கையாய் இழுக்க..இந்த மாசம் மழை நிறைய பேஞ்சுடுச்சு, அதனால மோட்டார் வேலை ஒண்ணும் வரலை அடுத்த மாசம் மழை வெறிச்சா கண்டிப்பா கூபிடுவாங்க, கணக்கை முடிச்சுடறேன் அண்ணாச்சி குழைந்தான். இந்த மாதிரி எத்தனை பேர் சொல்வதை அண்ணாச்சி கேட்டிருப்பார், சரி..சரி கணக்கை சீக்கிரம் முடியும்..அடுத்த ஆளை பார்க்க திரும்பினார். இவன் அவசரமாக அண்ணாச்சி இப்ப கொஞ்சம் மளிகை கொடுத்தா நல்லா இருக்கும் இழுத்தான், அண்ணாச்சி முகத்தை தூக்கவில்லை என்றாலும் குரலில் கடுமை ஏற்றி இப்படி வாங்கிட்டே இருந்தா பின்னாடி எப்படி கட்டுவீரு? என்றவர் கடை பையனை கூப்பிட அவன் இவன் அருகில் வந்து கையை நீட்ட தயாராய் வைத்திருந்த மளிகை பட்டியலை அவன் கையில் திணித்தான்.
ஒரு வழியாக மளிகை சாமான்கள் கட்டப்பட்டு இவன் சைக்கிள் காரியரில் ஏற்றி வீடு வந்து இறங்கிய பொழுது இவன் குழந்தைகள் சந்தோசமாக பார்க்க, இவன் மட்டும் கடன் பாக்கி அண்ணாச்சி கடையில் இரட்டிப்பானதை நினைத்து மனதுக்குள் வருந்தி மளிகை பிரச்சினை முடிந்து அடுத்து என்ன பிரச்சினை வரப்போகிறதோ? நினைத்து முடிக்கும் முன் வீட்டுக்காரர் ரூபத்தில் அது வந்தது. மூணு மாசமாச்சு வீட்டு வாடகை கொடுத்து, சீக்கிரம் காலி பண்ணிடுங்க, இந்த மாதிரி மாச மாசம் உங்களோட தொங்க முடியாது, வீட்டுக்காரரின் கர்ண கடூர குரல் வீட்டை சுற்றியுள்ள அத்தனை குடித்தனக்கார்ர்களின் காதுகளுக்கும் சென்றது. இது ஒரு எச்சரிக்கை என்பது வீட்டுக்காரரின் எண்ணம். ஆனால் அவமானத்தில் குன்றி போனது முருகனின் மனம். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்குங்க, மூணு மாச வாடகையையும் செட்டில் பண்ணிடுறேன் கெஞ்சினான். இந்த மாதிரி ஆயிரம் முறை சொல்லிட்டே, ஆனா வாடகைதான் வந்த பாட்டை காணோம். இன்னும் ஒரு வாரம்தான் டைம், அதுக்குள்ளே வாடகை வரலேன்னா தயவு தாட்சணை பாக்க மாட்டேன், அடுத்த வீட்டுக்காரரை பார்க்க போனார்.
பத்து ஒண்டு குடித்தனம் கொண்ட வீடுகளுக்கு அவர் முதலாளி, தன்னைப்போலவே பக்கத்து வீடுக்காரர்களுக்காக வருத்தப்பட்டது முருகனின் மனம். அதே நேரத்தில் இந்த மூன்று மாத வாடகை பணத்தை எப்படி புரட்ட முடியும்? இவன் மனம் மலைக்க தொடங்கியது. அடகு வைக்க தன் மனைவியிடம் ஏதேனும் நகைகள் இருக்குமா என நினைத்தான்.
ஏய்யா நான் வேணா வேலைக்கு போறேனே? பக்கத்து மில்லுக்கு ஆளு வேணுமாம், கேட்ட மனைவியிடம் வேலைக்கு போக சொல்ல மனம் துடித்தாலும், குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்தவுடன் அம்மாங்குமே ! அது வேறு மனசை சலனப்படுத்தியது.
காலையில் இவன் தொழில் செய்யும் இடத்துக்கு சென்ற போது பக்கத்து கடைக்கார்ர் முருகா நம்ம கந்தசாமி அவுக தோட்டத்துல மோட்டாருல தண்ணி ஏற மாட்டேங்குதாம் இப்பத்தான் ஆள் வந்து சொல்லிட்டு போறான். அவர் சொன்னவுடன் சந்தோசத்துடன் சைக்கிளை மிதித்தான் முருகன். அவனுக்கு மளிகை பாக்கி, வீடு வாடகை பாக்கி, இவை அனைத்தும் ஞாபகத்துக்கு வந்தன. ‘கந்தசாமி’ கை கொஞ்சம் தாராளம். கை நிறைய கொடுப்பார் அதனால் அவர் தோட்டம் மூன்று கிலோ மீட்டர் என்பது அவனுக்கு பெரிய தூரமாக தெரியவில்லை.
வேலை முடிய நடு இரவு ஆகி விட்டது. மோட்டார் உள்ளேயே பழுது ஆகியிருந்தது. இவனே டவுனுக்கு போய் எல்லா சாமான்களையும் வாங்கி வந்து மாட்டி விட்டு மோட்டார் ஓடி தண்ணீர் தோட்டத்தில் பாய்ந்த பின்னரே இவனுக்கு அப்பாடா என்றிருந்தது. நினைத்தது போலவே அவனுக்கு திருப்தியாய் பணம் கொடுத்தார். கவுண்டரிடம் சொல்லி விட்டு கிளம்பும்போது ஏண்டா இந்நேரத்துக்கு போகணும்னு என்னடா அவசரம்? உன் ஊட்டுக்காரிக்கு போனை போட்டு காலையிலே வர்றென்னு சொல்லிட்டு இங்கேயே படுத்து எந்திருச்சு காலையிலே போ. அக்கறையாய் சொன்னவரிடம் இல்லீங்கய்யா நான் கிளம்பறேன் சொல்லிவிட்டு வேகமாய் சைக்கிளை மிதித்தான்.
கொஞ்சம் தொலைவு வர வர இருள் கண்னை மறைக்க ஆரம்பித்தது. பயம் வேறு மனதில் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. இரண்டு கிலோ மீட்டர் வந்திருப்பான், திடீரென்று ஒரு ‘பைக்’ இவனுக்கு எதிராக வந்து நின்றது. அதிலிருந்த இருவரும் இறங்கி இவனை நகர விடாமல் பிடித்து கொண்டனர். ஒருவன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி குத்துவது போல் வைக்க மற்றொருவன் இவனின் சட்டைப்பைக்குள் கையை விட்டு துழாவியவன் முகத்தில் பெருத்த ஏமாற்றமே இருந்த்து. ஒரு சில துண்டு பீடிகளும் கொஞ்சம் சில்லறை காசுகளுமே தட்டு பட்டன.
ஏண்டா நாயே ஒண்ணுமில்லாம இந் நேரத்துக்கு இங்க எதுக்குடா சுத்தறே? ஓங்கி ஒரு அறை விட்டு ஓடறா நாயே விரட்டி விட்டனர், என்ன நடந்தது என்பதை கூட கிரகிக்க முடியாமல் இருந்த முருகன் விட்டால் போதும் என்று தாறுமாறாக சைக்கிளை மிதித்தான். கொஞ்ச தூரம் வந்த பின்னரே தன்னிலை பெற்றான். ஆமாம் கவுண்டர் கொடுத்த பணத்தை சட்டை பையிலேதான வச்சோம், பிறகு எப்படி இவர்கள் கையில் கிடைக்காமல் போச்சு? அவனுக்கு கவலை வந்து சூழ்ந்தது. பணம் என்னாச்சு? வழியில் பணத்தை தவற விட்டு விட்டோமா? கவுண்டர் தன் கையில் பணத்தை கொடுத்ததும், தான் அதை சட்டை பையில் வைத்த்தும் நன்றாக ஞாபகம் வந்தது.அதன் பின் பணம் எப்படி தன் சட்டை பையில் இருந்து மறையும்? திரும்பி சென்று வழியில் தேடி பார்ப்போம் என்றாலும், திருடர்களை நினைத்து பயமாக இருந்த்து. எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.
இந்நேரம் வரை விழித்திருந்து காத்திருந்த அவன் மனைவி இவன் கதவை தட்டியவுடன் சட்டென்று சென்று கதவை திறந்தாள். “மோசம் போயிட்டேண்டி”, இவன் தன் மனைவியிடம் நடந்த்த அனைத்தையும் சொல்லி புலம்பினான். கடவுள் என்னை இப்படி கஷ்டப்படுத்துகிறாரே? சொல்லி கண்ணீர் விட்டான். இவன் அழுகையை பார்த்த இவன் மனைவி பேசாம போய் படுங்க, காலையில பாத்துக்கலாம், குழந்தைங்க எல்லாம் தூங்குது அக்கம் பக்கம் எல்லாம் தூங்கறாங்க, சொல்லி அவனை படுக்க வைத்தாள். படுத்தும் புலம்பிக்கொண்டிருந்தவன் அப்படியே தூங்கி விட்டான்.
தட்..தட்..கதவை தட்டும் சத்தம் கேட்டு இவன் மனைவி கதவை திறந்து பொழுது விடிந்திருந்தது. இவனும் தூக்கம் கலைந்து வெளியே வந்தான். வெளியில் கந்தசாமி தோட்டத்தில் வேலை செய்யும் ஆறுச்சாமி நின்றிருந்தான். ஏம்ப்பா நீ பாட்டுக்கு பணத்தை கிணத்து மேட்டுல வச்சுட்டு வந்துட்டே,. நல்ல வேளை கவுண்டர் பார்த்தாரு., இல்லேண்ணா கிணத்துக்குள்ள விழுந்திருக்கும், “வெள்ளென” கொண்டு போய் கொடுத்துருன்னு அனுப்பிச்சாரு.
அப்பொழுதுதான் முருகனுக்கு ஞாபகம் வந்தது. ரிப்பேர் வேலைகள் முடிந்து மோட்டாரில் இருந்து தண்ணீர் வெளியேறியதும் தான் அதில் கை கால் கழுவ சென்றவன், பணம் தண்ணீரில் நனைந்து விடும் என்பதால் பணத்தை சட்டை பையில் இருந்து எடுத்து கிணத்து மேட்டில் வைத்ததும். அதை மறந்து விட்டு கிளம்பியிருக்கிறோம்
. மனசெல்லாம் மகிழ்ச்சி, உழைத்த பணமல்லவா !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Jan-18, 10:00 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 357

மேலே