வாதாபி கணபதிம் பஜே - ஹம்சத்வனி

பெரும்பான்மையான கர்நாடக இசைக் கச்சேரிகளில் முதலாவதாகப் பாடப்படும் பாட்டு. இப்பாடலை இயற்றியவர் முத்துசாமி தீட்சிதர் என்னும் பெரிய அம்பாள் உபாசகர் ஆவார்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் எட்டயபுரத்து மன்னரின் ஆதரவில் வாழ்ந்தவர். இந்த வாதாபி கணபதிம் என்னும் கீர்த்தனையை அவர் திருவாரூரில் உள்ள மூலாதார கணபதியின் மேல் பாடியிருக்கிறார். அந்த கணபதியை 'வாதாபி கணபதி' என்றும் அழைப்பார்கள்.

.'ஷோடச கணபதி கீர்த்தனை' என்றும் அந்தக் கீர்த்தனைக்குப் பெயர். இந்தக் கீர்த்தனையில் அவர் பதினாறு விதமாக கணபதியின் பெருமைகளைச் சொல்வார்.

திருவாரூர் வாதாபி கணபதி ஷோடச கணபதி கீர்த்தனை

பல்லவி

வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்
வீதராகிணம் வினதயோகினம் விச்வகாரணம் விக்னவாரணம்

சரணம்

பூராகும்ப ஸம்பவ முனிவர ப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்
முராரி ப்ரமுகாத்யு பாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்
பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம்
நிரந்தரம் நிடில சந்த்ர கண்டம் நிஜவா மகர வித்ருதேகக்ஷு தண்டம்
கராம்புஜபாச' பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்
ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும், வரங்களைக் கொடுக்கின்றவராகவும் விளங்கும் வாதாபி கணபதியை நான் பஜனை செய்கிறேன்.

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர்.

பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர்.

ஆசையில்லாதவர். வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர். இடையூறுகளைப் போக்கடிப்பவர். முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்னும் சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர். விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர். மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.
பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர். தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம் இவற்றை உடையவர். பாபமற்றவர். பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும் சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர். ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்.

இப்பாடலை VATHAPI GANAPATHIM- GHANTASALA என்று பதிந்து யு ட்யூபில் திரு.கண்டசாலா பாடுவதைக் கேட்கலாம்.

இப்பாடலை Dr M Balamuralikrishna 02 Vathapi Ganapathim Bhaje wmv என்று பதிந்து யு ட்யூபில் Dr. M. .பாலமுரளி கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

இப்பாடலை Vathapi Ganapathim by K J.Yesudas என்று பதிந்து யு ட்யூபில் K J.ஜேசுதாஸ் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jan-18, 10:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே