வயங்குதார் மாமாறன் கண்ணிரத்தம் தீர்க்கும் மருந்து – முத்தொள்ளாயிரம் 108

நேரிசை வெண்பா

தொழில்தேற்றாப் பாலகனை முன்நிறீஇப் பின்நின்(று)
அழல்இலைவேல் காய்த்தினார் பெண்டிர் – கழலடைந்து
மண்ணிரத்தல் என்ப வயங்குதார் மாமாறன்
கண்ணிரத்தம் தீர்க்கும் மருந்து. 108 – முத்தொள்ளாயிரம்

தெளிவுரை:

விளங்குகின்ற மாலையை அணிந்த மாட்சிமை பொருந்திய பாண்டிய வேந்தன் கண்களின் குருதி போன்ற சினத்தைப் போக்கும் மருந்து,

போர்த்தொழில் கற்றுத் தெளியாத தம் சிறுவனைப் பாண்டியனுக்கு முன்னர் நிறுத்தி வைத்து, கனல் பொருந்திய இலை வடிவில் அமைந்த வேலுக்குச் சின வெப்பத்தை உண்டாக்கிய பகை மன்னர்களின் மனைவியர்,

அவனது வீரக்கழல் அணிந்த திருவடிகளை வணங்கி அடைக்கலம் அடைந்து, தங்கள் நாடுகளை இரந்து வேண்டிப் பெற்றனர் என்பதாகும்.

விளக்கம்:

தொழில் தேற்றா – போர்த்தொழிலைக் கற்றுத் தெளியாத,
பாலகனை – சிறுவனை, தம் மைந்தனை,
முன்நிறீஇ – பாண்டியனுக்கு முன் நிறுத்தி,

அழல்இலைவேல் காய்த்தினார் – கனல் பொருந்திய இலைவடிவ வேலுக்குச் சினமூட்டியவர்கள்,

பெண்டிர் – பகைமன்னர்களின் மனைவியர்,

கழலடைந்து – பாண்டியனது வீரக்கழல் அணிந்த திருவடிகளை வணங்கி,

மண்ணிரத்தல் – நாட்டை அளிக்கும்படி இரந்து வேண்டுதல்,

வயங்குதார் – விளங்குகின்ற மாலை,

மாமாறன் - மாட்சிமை பொருந்திய பாண்டிய வேந்தன்,

கண் இரத்தம் – சினத்தைக் குறிக்கும் சொல், சினம் உள்ள போது இரத்தம் போல் கண் சிவக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jan-18, 1:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 129

மேலே