தார்வழுதி யானையெலாம் புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தனவே – முத்தொள்ளாயிரம் 104

நேரிசை வெண்பா

ஏனைய பெண்டீர் எரிமூழ்கக் கண்டுதன்
தானையாற் கண்புதைத்தான் தார்வழுதி – யானையெலாம்
புல்லார் பிடிபுலம்பத் தன்கண் புதைத்தனவே
பல்யானை அட்ட களத்து. 104 .– முத்தொள்ளாயிரம்

பொருளுரை:

வெற்றிமாலை அணிந்த பாண்டிய மன்னன், யானைகள் பலவற்றை அழித்த போர்க்களத்தில், இறந்த பகைவர்களின் மனைவியராகிய பெண்கள் பலர் உடன்கட்டை ஏறி தீயில் மூழ்கி எரியக் கண்டு தன் ஆடையால் தன் கண்களை மூடிக் கொண்டான்.

வெற்றி கொண்ட பாண்டியனது யானைகளும், பகைவர்களின் பெண்யானைகள் அவற்றின் ஆண்யானைகள் போரில் கொல்லப்பட்டதனால் வருந்திப் புலம்பியதைக் கண்டு தங்கள் கண்களை மூடிக்கொண்டன.

ஏனைய பெண்டீர் – மற்ற பகை வீரர்களின் மனைவியர், எரிமூழ்க – தீயில் வீழ்ந்து எரிய, உடன்கட்டை ஏற,

தானையால் – மேலாடையால், கண்புதைத்தான் – கண்ணை மூடிக் கொண்டான்,

தார்வழுதி – வெற்றி மாலை சூடிய பாண்டியன், புல்லார் – பகைவர்கள்,

பிடி – பெண் யானை, புலம்ப – அழ, பல்யானை – பல யானைகள்,

அட்ட களத்து – அழிக்கப்பட்ட போர்க்களம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jan-18, 3:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

சிறந்த கட்டுரைகள்

மேலே