விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால் – வளையாபதி 67

கலி விருத்தம்

தொழுமகன் ஆயினும் துற்றுடை யானைப்
பழுமரம் சூழ்ந்த பறவையின் சூழ்ப
விழுமிய ரேனும் வெறுக்கை உலந்தால்
பழுமரம் வீழ்ந்த பறவையின் போப. 67 வளையாபதி

பொருளுரை:

பிறரைத் தொழுது பிழைக்கும் கீழ்மகனேயாயினும் பொருளுடையானை உலகமாந்தர் பழுத்த மரத்தைச் சூழ்கின்ற பறவைகள் கூட்டம் போன்று வந்து சூழ்ந்து கொள்வர்;

மற்றும் அறிவு குணஞ் செயல்களாலே சிறப்புடைய மேன்மக்களாயினும் செல்வம் அழிந்து நல்குரவுடையராய பொழுது, உலக மாந்தர் விழுந்துபோன பழுமரத்தை விட்டுப் போகின்ற பறவைக் கூட்டம் போன்று அகன்று போவர் என்பதாம்.

விளக்கம்:

வீழ்ந்த பழுமரம் என்க. உலகமக்கள், கீழ்மகனாயினும் பொருளுடையானைச் சூழ்ந்து கொள்வர். மேன் மக்களாயினும் வறியராயின் அணுகாது விலகிப்போவர்.

இதனை,

இவறன்மை கண்டு முடையாரை யாரும்
குறையிரந்துங் குற்றேவல் செய்ப - பெரிதுந்தாம்
முற்பக னோலாதார் நோற்றாரைப் பின்செல்லல்
கற்பன்றே கல்லாமை யன்று. 12 நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

ஈயாத்தன்மையைத் தெரிந்துகொண்டிருந்தும் செல்வமுடையவர்களை எல்லாரும் பொருள் வேண்டி அதன் பொருட்டுக் கைவேலைகளும் செய்வார்கள்,

முன்பிறப்பில் தாங்கள் மிகவும் தவம் செய்யாதவர்கள் தவம் செய்தவர்களைப் பின்சென்று வேண்டுதலன்றோ கல்வியறிவாகும்; அஃது அறியாமையன்று.

விளக்கம்:

இவறன்மை - கேட்டபொழுது பொருள் கொடாமை, இஃது `இவறலும் மாண்பிறந்த மானமும்’ என்ற விடத்துப் பரிமேலழகர் இவறலும் என்பதற்கு “வேண்டிய சமயத்தில் பொருள் கொடாமையும்” என்று உரைகூறுதலின் வைத்து அறியப்படும்.

குறையிரத்தல்: நின்று வேண்டுதல் என்னும் பொருள் தந்து நின்றது.

கருத்து:

பொருளுடையாரினும் தவமுடையார் உலகத்தவராற் பின்பற்றத் தக்கவராவர்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jan-18, 8:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே