திருடர்கள் ஜாக்கிரதை

கவனம் !
திருடர்கள் ஜாக்கிரதை !

உன்னிடம்
லட்சங்களை அல்ல
உனது லட்சியங்களையே
திருடுவார்கள்

உன்
கனவோவியத்தை
வண்ணம் பூசி
பாழாக்குவார்கள்

உன்
கையில் கொடுக்கப்பட்ட
துடைப்பமே - மயில்
தோகையென வாதிடுவார்கள்

உன்
சுயத்தையே எரித்து
அவர்கள்
மின்சாரமெடுப்பார்கள்

கொள்கையை
கொடுத்துவிட்டு
உன் நம்பிக்கையை
தகர்தெறிவார்கள்

உனக்கு
பாதை காட்டிவிட்டு
உனது பயணங்களை
திருடிவிடுவார்கள்

அறிவெனும்
கத்தி காட்டி
உன் அனுபவத்தை
களவாடுவார்கள்

சிகரத்தை
ஆசைகாட்டி
உன் சிறகுகளை
பறிப்பார்கள்

விளக்கொன்று
தந்து உனது
சிந்தனையை
குருடாக்குவார்கள்

அளவின்றி
அமுதம் கொடுத்து
வாழ்வையே
நஞ்சாக்குவார்கள்

கவனம் !
திருடர்கள் ஜாக்கிரதை !

எழுதியவர் : முத்துராஜா (6-Jan-18, 7:14 pm)
பார்வை : 159

மேலே