என்றும் துணை எல்லை கருப்பர்

என்றும் துணை எல்லை(க்) கருப்பர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வந்தாரையா கருப்பரிங்கே
வளம்பதினாரும் பெருகுதிங்கே
வஞ்சனையின்றி வரந்தரவே
வந்தாரென்றே முழங்குசங்கே

சலவைப்பட்டுச் சால்வையுமே
சத்தியம்பேசும் விழிகளுமே
சரியாய்ச்சொறுகிய கொண்டையுமே
சங்கிலிக்கருப்பெனக் காட்டிடுமே

சம்பங்கிப்பூ மாலையிலே
சரிகைதரித்த வேட்டியிலே
சப்பாணிமுன் னோடியுடன்
சாட்டைசுழற்றும் புயமெழிலே

பெரியகருப்பெனப் பேர்முழங்க
பேரிடிச்சிரிப்பில் படைநடுங்க
பிழைகளனைத்தும் தொலைந்தொடுங்க
பெருமைகள்காப்பார் நாம்வணங்க

சாம்பிராணி புகைகமழ
சவ்வாதுமணம் சபைமகிழ
சந்ததிகாக்கும் வாக்குதந்தே
சின்னக்கருப்பர் எழுந்தாரே

கட்டியசலங்கை இசைபோடும்
காலில்தண்டை கவிபாடும்
காதுக்கடுக்கன் நடமாடும்
கண்களிரண்டில் அருளோடும்

வண்ணப்பட்டும் இடையுடுத்தி
வாள்போல்மீசை மேல்நிறுத்தி
வந்தேனென்று குரலுயர்த்தி
வரும்பேரழகே வெகுநேர்த்தி

வாடிப்பயிர்கள் நோகாது
வாழைத்தொடராய்க் குலங்காத்து
வானில்மின்னல் கொடிபிடித்து
வயல்வெளிகாப்பார் மழைவார்த்து

பச்சைநிலமாய்ப் புவிகாக்கும்
பன்னீர்த்தேகம் பளபளக்கும்
பத்தரைமாற்று அவர்வடிவம்
பார்ப்போர்விழிகளில் நீர்பெருக்கும்

மலைமேல்நடந்து வருபவராம்
மந்திரம்படிக்கும் குருஇவராம்
மைப்புருவம் இடம் வலம்காட்ட
மாயைவிரட்டி விழிப்பாராம்

வாசனைச்சந்தனம் உடல்தரித்து
வல்வினைமிரளப் பிரம்பெடுத்து
வாரணம்பிளிறப் பகையறுத்து
வருவார்புரவியின் மேல்சிரித்து

எலுமிச்சைஅரி வாள்பிடித்து
ஏவல்விரட்டி நகைபுரிந்து
என்றும்வாழ்த்தி உடனிருப்பார்
எல்லைக்கருப்பு நம் கரம்பிடித்து

... மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (8-Jan-18, 9:48 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 181

மேலே