உழவன் வாழ்வு செழிக்கச் செய்வீர்
கண்களில் கனவைத் தாங்கி
கரங்களில் கலப்பை ஏந்தி
மண்ணிலே செந்நெல் விளைத்து
மற்றோரின் பசியைப் போக்க
எண்ணிலா சிரமம் தாங்கும்
ஏழையாம் உழவன் வாழ்வில்
புன்னகை இருந்த தில்லை
பூரிப்பும் அவனுக் கில்லை
நறுமுகை நெஞ்சில் சூடி
நண்பர்கள் சுற்றம் சூழ
அறுசுவை உணவை உண்டு
ஆனந்தப் பொங்கல் காணும்
பொறுப்பற்ற மனிதா வாழ்வில்
புத்தியாய் ஏதும் செய்து
வறுமையைப் பொங்கும் உழவன்
வாழ்விலும் செழிப்பை நாட்டு
ஆக்கம்
அஷ்ரப் அலி