கவிஞன் மரணிப்பதில்லை---எழுசீர் விருத்தம்

சிந்தையில் விரியுங் கற்பனைப் பூக்கள்
*****தீஞ்சுவைத் தேனதை நிறைத்து
விந்தையில் ஆழ்த்த வண்டுகள் மயங்கும்
*****விருந்தினிற் கருத்தினைப் புதைத்துக்
கந்தையில் நுழையும் தென்றலாய்க் கவியுங்
*****கவர்ந்துமெய் சிலிர்த்திட வைத்து
மந்தையில் உலாவும் ஆவினை மேய்த்த
*****மாதவன் போலிவன் வாழ்வே...


செந்தமிழ் உளியாற் செதுக்கிடுங் கவிக்குள்
*****சிந்திடும் மழையெனும் மகிழ்வில்
வெந்தழல் மொழியாற் கொடுமைகள் எதிர்த்து
*****வேங்கையாய்ப் பாய்ந்திடும் உணர்வில்
சந்தனம் மணக்கும் முன்னவர் வாழ்வுந்
*****தங்கமாய்ச் சுடர்விடும் அழகிற்
கந்தனின் புகழும் கனிந்திடும் படைப்பில்
*****கவிஞனின் சீவனு லகிலே...


அந்திவான் தீட்டும் ஓவியம் உரைக்கும்
*****அழகியற் புனைந்திடும் பாவில்
மந்திகள் தாவும் மரக்கிளை உதிரும்
*****மலர்களின் தரிசனங் கொடுத்துத்
தந்தையுந் தாயுந் தந்தருட் பாசம்
*****தனயனின் கடமையும் விளங்கும்
அந்நொடி மனத்தில் வாசகன் உணர
*****அமரனாய்க் கவிஞனின் உயிரே...

எழுதியவர் : இதயம் விஜய் (16-Jan-18, 4:00 pm)
பார்வை : 219

மேலே