ஐந்தோடு ஒன்று ஏழு

ஐந்தோடு ஒன்று ஏழு
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உலகப் பந்திலே மனிதனாய்ச் சிந்திப்பது ஆனந்தத்தின் எல்லை அல்ல என்று மரமொன்றின் நிழலில் அமர்ந்து தியானிக்கலானான் ஒருவன். தன்னை மறந்த நிலையில் தாடி, மீசை, தலையில் வளர்ந்த முடி, யாவும் நீண்டு திரிந்ததையும் உணர்தற்கல்லாத முனிவனாகத் தியானத்தில் நிலைத்துக்கிடந்தான்.

உலகம் மனிதச்சிந்தனைக்கு விருந்து என்றும், மனிதனாய்ச் சிந்திப்பது பாக்கியம் என்றும் கருதிய ஒருவன் மரத்தடி வழி கடந்துபோகையில் முனிவரைக்கண்டான். இவரைத் தீண்டிப் பார்த்தால் என்ன என்றெண்ணி முனிவரின் தலைமுடியைத் தொட்டுப் பார்த்தான் முனிவர் அசையவில்லை. தாடியை லேசாக இழுத்தான் முனிவர் விழிக்கவில்லை மீசையின் இரு முனைகளையும் இழுத்து முடிந்து வேடிக்கை பார்த்தான் முனிவர் சற்றும் சாயவில்லை.

இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மனிதச்சிந்தனையில் சிக்குறாத நீர், நிலம்,
காற்று, நெருப்பு மற்றும் ஆகாயமும், முனிவரைத் தீண்டும் மனிதனைத் தாமும் தீண்டினாலென்ன என்றெண்ணி முதலில் நீர் அவன் மீது மழையாய்ப் பொழிந்தது. "ஏ மழையே என்னைத் தொந்தரவு செய்யாதே... " என்று மழையைப் புறக்கணித்துவிட்டு மனிதன் முனிவரைத் தீண்டுவதில் மும்முரமாக இயங்கினான்.

மழைக்குத் தயங்காத அவனை, நிலம் தன் வேலையைக்காட்டி அவனை ஆட்டிப் பார்ப்போம் என்று சற்றே அவன் நின்றிருந்த இடத்தில் அதிர்வைக் கொடுத்தது. அதிர்வு தனக்கான சோதனை என்றுணராத மனிதன் பூமி அதன் வேலையைச் செய்கிறது என்றெண்ணி சற்றும் கண்டுகொள்ளாமல் இடம் மாற்றி முனிவரின் பின்புறம் சென்று அவரது சடாமுடியைப் பின்னி மரத்தின் ஒருகிளையொடு பிணைத்துக் கொண்டிருந்தான்.

கிளையினோடு முனிவரின் சடாமுடியைப் பிணைத்துக்கொண்டிருந்தபோது கிளைகளின் உராய்வினால் ஏற்பட்ட தீப் பிழம்பு அவனது கைகளைத் தீண்ட அது தான் முனிவரைத்தீண்டுவதால் தீ தனக்களித்த சூடு என்றுணராமால் ஊதி அணைத்து விட்டு சற்றே கைகளை உதறிவிட்டு தீயைப் போக்கித் தனது மானுடச் சிந்தனை சொல்லிக்கொடுத்தபடி முயற்சியில் பின்வாங்காமல் முனிவரின் சடாமுடியைக் கிளையொன்றொடு பிணைத்திருக்கினான்.

காற்று தன் பங்கிற்கு தூசியைக் கிளப்பி மனிதனின் கண்களைத்தீண்டியது மனிதனோ காற்றின் இயல்பு என்றெண்ணி காற்றடித்த திசைக்கு மாற்றுத்திசையில் நின்று தனது கண்களைத் துடைத்துக்கொண்டு முனிவரின் கைகளைத் தூக்கிப் பார்ப்போம் என்றேண்ணி முனிவருக்கு முன்னால் வந்து குனிந்துநின்று அவரது கைகளைத் தொட்டுப் பார்த்தான்.

இந்த மனிதனின் சிந்தனையைத் திசை திருப்புவதற்காக ஈர வானம் பலமாக இடியொன்றை மனிதனின் கண் பார்க்கும் தூரத்தில் இறக்கியது, மின்னலொளி கண்களை சற்று இருட்டாக்க, இடியோசை காதைப் பிளக்க மனிதனுக்கு சற்று நேரம் கண்களும் காதுகளிரண்டும் செயலிழந்து போய்த்திரும்பியது.

இயற்கை அதன் வேலையைச்செய்கிறது என்றுமட்டும் எண்ணிய மனிதன் தான் முனிவரைச் சீண்டியதால்தான் இந்த விளைவு என்பதனைப் புரிந்துகொள்ளாமல் தனது திருவிளையாடல்களைத் தொடர்ந்துகொண்டேயிருந்தான். ஐம்பூதங்களும் மனிதனை இயற்க்கைச் சீற்றம் எனும் பெயரால் வெயில், மழை, புயல், பூகம்பம், இடி, மின்னலென மாற்றி மாற்றி தீண்டிக்கொண்டேயிருந்தது. தியான நிலை என்பது தன் உடலை மறக்கும் நிலை, இயற்கையோடு கலக்கும் நிலை என்ற முனிவரின் நிலையை மனிதனும் புரிந்துகொள்ளவேயில்லை.

இப்போது மனிதன் முனிவரைச் சோதித்துப் பார்க்கிறானா அல்லது முனிவர் மனிதனைச் சோத்தித்துப் பார்க்கிறாரா ?

மனிதன் தனக்குத்தானே விளைவுகளைத் தெடிக் கொள்கிறானா அல்லது இயற்க்கை மனிதனைத் தேடிவந்து தண்டிக்கிறதா ?

ஐந்தோடு ஒன்று ஏழு என்பது பிழை, இது மனிதனின் கணக்கு.

ஐந்து பூதங்களோடு மனிதன் ஒன்றாய் ஐக்கியாமானால் பிறக்கும் அறிவு ஏழு, இது முனிவர் கணக்கு.

... மீ.மணிகண்டன் (மணிமீ)

#மணிமீ

எழுதியவர் : மீ.மணிகண்டன் (17-Jan-18, 5:36 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 238

சிறந்த கட்டுரைகள்

மேலே