அன்பின் இராட்ஷசி

ஒவ்வொரு ஊடலின் முடிவிலும் மௌனம் அழையா விருந்தாளியாய் வீட்டிற்குள் நுழைந்து கொள்கிறது.
கடைக்கு போய் வாங்க வேண்டிய பொருட்களை மகனிடம் சப்தமிட்டு சொல்லி என்னை மறைமுகமாய் ஏவுவாள்.
சமையலறையில் இருக்கும் போது உதவ சென்றால்,
ஏதாவது ஒரு பாத்திரத்தை கீழே போடும் சப்தத்தில் அவளின் கோபத்தை பிரதிபலிப்பாள்.
சாப்பாடு எடுத்து வைத்து விட்டு கொஞ்சம் நேரம் ஓரமாய் அமர்ந்து கண்ணாடியை பார்த்தவாறு
தன்னை விட்டு சாப்பிடுகிறானா என்று நோட்டமிட்டு கொள்ளுவாள்.
ஏதாவது ஒரு நகைச்சுவை சொன்னால்,
சிரிப்பை மழுப்பி மறைத்தவாறே நகர்ந்து அடுத்த அறையுனுள் புகுந்து கொள்ளுவாள்.
வேண்டுமென்றே கிப்ட் பாக்ஸ்களையும்,சீர்வரிசை பாத்திரங்களையும் பரத்தி போட்டு தூசி தட்டி அடுக்கி நேரத்தை கடத்துவாள்.
அத்தி பூத்தாற் போல அன்று மட்டும் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படிப்பது போல பக்கத்தை திருப்புவாள்.
எதிரே தற்செயலாக சென்றால் கூட,
உன் கூட சண்டை பேச மாட்டேன் என்று சொல்லி தன் வைராக்கியத்தை அறிவிப்பு செய்து வெடுக்கென செல்லுவாள்.
என் தேவைகளை சொல்லி ஏதாவது கேட்டால்,
உதட்டை சுழித்து பெருமூச்சு விட்டு கொஞ்சம் தாமதித்து எடுத்து கை படாமல் கொடுப்பாள்.
கொஞ்சம் கண் மூடி அயர்ந்தால்,
நமக்கு கொஞ்சம் கேட்கும்படியும் சுத்தமாக புரியாதபடியும் அங்குமிங்கும் முணுமுணுத்து செல்லுவாள்.
மகனுக்கு கொஞ்சம் திட்டு விழும்,
அவனை திட்டுவதின் பொருளுனர்ந்து பார்த்தால் அனைத்து திட்டும் என்னை குறிப்பதாகவே இருக்குமாறு பார்த்து கொள்ளுவாள்.
இரவு சாப்பாட்டின் போது லேசாக கதைப்பாள்.
கொஞ்சம் கண் கலங்குவாள்.
ஒரு கவள உணவை பறிமாறி கொள்ளுவாள்.
நீதான் என் உயிர்,
உன்னை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா,
என்னை ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேங்குற,
ஐ லவ் யூ டா செல்லம் என அனற்ற துவங்குவாள்.
இவ்வளவு நேரம் கட்டி காத்த கோபம் எல்லாம் அன்பாய் வெளியேறி கொண்டிருக்கும்.
அவள் கோபத்தின் ஆயுள் ஒரு நிமிடம்தான்,
அதை மறைத்து என்னை வெறுப்பேற்றி ரசிக்கலாம் என்றே கோபத்தின் ஆயுளை நீட்டிகிறாள்..
அவளுக்கு தெரியாதா ஊடலின் சம்பாஷணை மனசு விட்டு பேசுவதுதானென்று..
அதுதான் இருவருக்குமான அன்பினை இன்னும் அதிகரித்து செல்கிறது.
கோபத்தின் நீட்சியின் முடிவில் அன்பின் மீட்சி மெல்லமாய் படர ஆரம்பிக்கிறது..

எழுதியவர் : சையது சேக் (17-Jan-18, 5:26 pm)
பார்வை : 165

மேலே