கோட்டுமண் கொள்ளா முலை என்செய்யும் – முத்தொள்ளாயிரம் 77

நேரிசை வெண்பா

வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்ந்தனபோல்
ஏரிய ஆயினும் என்செய்யும் – கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணிஅகலம்
கோட்டுமண் கொள்ளா முலை. 77 – முத்தொள்ளாயிரம்

தெளிவுரை:

கூர்மையான தந்தங்களைக் கொண்ட யானையையுடைய பாண்டியனது குளிர்ந்த சந்தனம் பூசிய அழகிய மார்பினைத் தழுவிக் கொட்டுகின்ற சந்தனத் துகள்களைக் கொள்ளாமல் உள்ள என் முலைகள், மிகவும் உயரமாக வளர்ந்த பனை மரங்களுக்கு வாய்த்த இளங்காய்கள் போன்று அழகியன ஆயினும் என்ன பயனைச் செய்யும்?

வாரிய பெண்ணை – மிகவும் உயரமாக வளர்ந்த,

வருகுரும்பை – வந்த இளங்காய்கள், ஏரிய – அழகானவை,

என்செய்யும் – என்ன பயனைச் செய்யும்,

கூரிய கோட்டு ஆனை – கூர்மையான தந்தங்களைக் கொண்ட யானை,

தென்னன்- பாண்டியன், சாந்து – சந்தனம், அணி அகலம் – அழகிய மார்பு,

கோட்டுமண் – கொட்டும் சந்தனத் துகள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-18, 4:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 84

மேலே