மூர்ச்சையற்ற பொழுதுகள்_பகுதி 2

#மூர்ச்சையற்ற_பொழுதுகள்_௨

யார் அவள்????
ஏய் கார்த்திக் எழுந்திரிடா,,
டேய் எருமை மணி எட்டு ஆகுது,
ஓடாத கடிகாரத்தை பார்த்துகிட்டு இழுத்து மூடி எவா நினைப்புல தூங்குற,
தங்கை சுபாவின் குரல் அலாரத்தை விட சப்தமாய் காதருகே இரைந்து கொண்டிருந்தது.
சடாரென தூக்கி வாரி போட்டது அவனுக்குள்.இன்னும் அரை மணி நேரத்தில் அவள் வந்து விடுவாள்.காதல் அரும்புகள் முளைத்து முதன் முதலாய் தரிசனம் செய்ய தாமதம் ஆகி விட கூடாதே என்று அவசரமாய் கிளம்பினான்.
இருக்காதா பின்னே,ஏனென்றால்
அவனும் காதலெனும் இருள் மாயைக்குள் நிலவின் வெளிச்சத்தில் பயணிக்க ஆயத்தமாகி விட்டானல்லவா.

முதன்முதலாய் உணர்வுகளும் உணர்ச்சிகளும் ஒன்றையொன்று எட்டி உதைத்து கொண்டிருந்தது.
புதிதாய் இதயத்திற்க்குள் அபரிமிதமான காதல் ரேகைகள் முளைக்க தொடங்கி இருந்தது.உள்ளுணர்வுகளால் வேற்று கிரகத்திற்கு தூக்கி எறியபட்டதை போல சுவாச திணறலுடன் திக்குமுக்கு தெரியாமல் மூச்சிரைக்க நின்றான்.
அதிர்ச்சியும் ஆச்சர்யமும் சரிபாதியாய் கலந்திருந்தது.
இதற்கு முன் எத்தனை தடவை அவளை பார்த்திருப்பேன்.ஆனாலும் இத்தனை நாளாய் தோன்றாத ஈர்ப்பு,தற்போது தொற்று வியாதியை போல் சட்டென்று ஒட்டிக் கொண்டது எதனால் என்ற எண்ணம் எண்ணிக்கையின்றி அவனை துரத்தி கொண்டிருந்தது.
அவளை விரும்புகிறேன் என்பதை நான் எப்படி நம்புவது.இது பருவ ஈர்ப்பாக இருக்குமா.
அவளை எதனால் பிடித்தது என்று தெரியாமல் எப்படி இதை காதலென எடுத்து கொள்வது,
காதலுக்கு கண் மட்டுமல்ல காரணமும் இல்லை என்பது புரிந்தது.

அவள் அணைவரின் மத்தியிலும் தனித்து தெரிந்தாள்.
நீ கொள்ளை அழகு என்ற உண்மையை அவளின் காதருகே இரகசியமாய் கிசுகிசுக்கவும்,
நீ மட்டும்தான் இந்த பேரண்டத்தில் ஒரே அழகி என்ற பொய்யை ஊரறிய கத்தி கூப்பாடு போடவும் தோன்றியது.
சுட்டெரிக்கும் வெயில் கணப்பொழுதில் உருமாறி, ஈரப்பதம் மிகுந்த குளிர்ச்சியான காற்றை சடாரென முகத்தில் அடித்தது போல இருந்தது ஒருபுறம்.
மறுபுறம் அவனுக்குள் கலவர எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் கேள்விகளால் குடைந்தெடுத்து வேள்வியின் மேல் ஊற்றிய எண்ணெய் போல எரிந்து கொண்டிருந்தது.
எண்ணற்ற குழப்பங்கள் ஒரே அலைவரிசையில் வந்து ஓங்காரமாய் கத்தி கொண்டிருந்தது.
புதிதாய் மனதிற்க்குள் குட்டி பிசாசு ஒன்று பேரிரைச்சலுடன் ஓலமிட்டு கொண்டிருந்தது.
காரணம் கண்டறிய தேவையில்லை அவனுக்குள் காதல் வந்து விட்டது உறுதியாகிவிட்டது.

இனிதான் ஹார்மோன்களின் விளையாட்டு ஆரம்பம் அவளால்..

எழுதியவர் : சையது சேக் (2-Feb-18, 4:00 pm)
பார்வை : 286

மேலே